கடன் மேலாண்மை வங்கி வராக் கடன் பிரச்சனையை தீர்க்குமா?

கட்டுரையாளர்:க.சிவசங்கர்

வங்கிகளில் தொடர்ந்து அதிகரித்து வரும் வாராக்கடன்
பிரச்சனைகளுக்குத் தீர்வு காணும் வகையில் கடன் மேலாண்மை வங்கி (Bad Bank) உருவாக்கப்படும் என்றும், இது வங்கிகளின் வாராக்கடன் பிரச்சனைகளில் மிகப்பெரிய முன்னேற்றத்தைக் கொண்டு வரும்” என்றும் சமீபத்தில் ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருக்கிறார்.

கடன் மேலாண்மை வங்கி (Bad Bank)

இத்திட்டத்தின் படி தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம் (National Asset Reconstruction Company Limited) மற்றும் இந்திய கடன் தீர்வு நிறுவனம் (India Debt Resolution Company Limited) ஆகிய இரு நிறுவனங்கள் புதிதாக உருவாக்கப்படும். தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனம்(NARC), வங்கிகளில் பெரும் கார்ப்பரேட் நிறுவனங்களின் 500 கோடி ரூபாய்க்கு அதிகமான வாராக் கடன்களை வங்கிகளிடமிருந்து அவற்றின் மதிப்பில் ஒரு சிறிய தொகைக்கு வாங்கும் வகையில் ஓர் ஒப்பந்தம் உருவாக்கப்படும். அச்சொத்துக்களின் மதிப்பில் 15 சதவீதத் தொகை உடனடி பணமாகவும், மீதமுள்ள 85 சதவீதத் தொகை அரசு உத்தரவாதத்துடன் கூடிய பாதுகாப்புப் பத்திரங்களாகவும் (Security Receipts) வங்கிகளுக்கு வழங்கப்படும். இந்த பத்திரங்களின் மீதான அரசின் உத்தரவாதம் 30600 கோடி ரூபாய் மதிப்பிற்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு மட்டும் இருக்கும் என்றும், இந்நிறுவனத்தின் பெரும்பாலான பங்குகள் பொதுத்துறை வங்கிகளின் வசமிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய கடன் தீர்வு நிறுவனம்

மேலும் இவ்வாறு பெறப்படும் அச்சொத்துக்கள் இந்திய கடன் தீர்வு நிறுவனம்(IDRC) மூலம் சந்தையில் விற்கப்பட்டு வருமானம் திரட்டி 85 சதவீதத்திற்கு உரிய தொகை வங்கிகளுக்கு திருப்பி அளிக்கப்படும் என்றும், இந்த கடன் தீர்வு நிறுவனத்தில் பொதுத்துறை வங்கிகளின் பங்குகள் 49 சதவீதத்திற்கு உள்ளாக கட்டுப்படுத்தப்பட்டு ஒரு தனியார் நிறுவனமாக இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளிடம் இருந்து பெற்ற சொத்துக்களை விற்கும் போது அதன் ஒப்பந்தத் தொகையை விட குறைவாக விலை போகும் பட்சத்தில் உருவாகும் இழப்பீடுகளை 30600 கோடி ரூபாய் மதிப்புடைய அரசு உத்தரவாத பத்திரத்தின் மூலம் ஈடு செய்து வங்கிகளுக்கு வழங்கப்படும்.

இதில் முதற்கட்டமாக 90000 கோடி ரூபாய் மதிப்பிலான வாராக்கடன்களையும், ஒட்டு மொத்தமாக 2 லட்சம் கோடி ரூபாய் வசூல் செய்யும் பொறுப்பும் இந்த தேசிய சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்திற்கு வழங்கப்படும் என்று அரசு அறிவித்துள்ளது. இந்நிறுவனங்கள் வங்கிகளில் இருந்து வாங்கும் வராக்கடன்கள் முழுமையாக வராது என்று முடிவு செய்து அவற்றிற்கு ஏற்கனவே முழு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதால் வங்கிகள் தற்போது அதன் மீது கொண்டுள்ள மதிப்பில் இருந்து மிகக்குறைவான விலைக்கே வாங்கப்படும். எனவே நேரடியாகவே மிகப்பெரிய ஒரு வருமான இழப்பு அவ்வங்கிகளுக்கு ஏற்படும் அபாயம் உள்ளது. தனியார்மயம் மேலும் பொதுத்துறை வங்கிகளின் இந்த பெரும் அளவிலான வாராக் கடன்களை புதிதாக உருவாக்கப்படும் கடன் மேலாண்மை வங்கிக்கு மடை மாற்றுவதன் மூலம் வங்கிக் கணக்கு புத்தகத்திலிருந்து வெளியேற்றி அவற்றை சுத்தமான கணக்காக காட்டிக் கொள்ள முடியும்.

பிறகு தனியார் முதலாளிகளைக் கவர்ந்து அவர்களிடம் பொதுத்துறை வங்கிகளை எளிதாக விற்க முடியும் என்று திட்டமிடுகிறது இந்த அரசாங்கம். இதன் மூலம் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் பொதுத்துறை வங்கியில் தான் வாங்கிய கடனையும் திருப்பிச் செலுத்தாமல் அந்த வங்கியையும் கைப்பற்றிக்கொள்ளக் கூடிய ஆபத்து உள்ளது. எனவே இந்த கடன் மேலாண்மை வங்கி என்பது கார்ப்பரேட் பெறுநிறுவனங்கள் வங்கிகளில் வாங்கியுள்ள வாராக்கடன்களைத் தள்ளுபடி செய்வதற்கான ஓர் ஏற்பாடே அன்றி வேறல்ல.

Comment here...