கும்மியடி

எஸ்.வி.வேணுகோபாலன்

கும்மியடி பெண்ணே கும்மியடி உலகைக்
குலுக்கினோம் என்றே கும்மியடி!
நம்மைக் கவிழ்க்கப் பார்த்தவர் கடைசியில்
நாணிக் குனிந்தார் கும்மியடி!

நாளாய் இரவாய் மாதக் கணக்கில்
நம்பிக்கை போரிட்டோர் வென்று விட்டார்;
வேளாண் துறையைப் பாழாக்குவேன் என்ற
வெறியன் இன்று தலை கவிழ்ந்தார்

கண்ணீர்ப் புகையென்ன காவலர் அடியென்ன
களத்தினில் இருந்தோர் எதிர்கொண்டார்
செந்நீர் சிந்தினும் தீங்கான சட்டங்கள்
செரித்திடோம் என்றவர் சமர்புரிந்தார்

அதிகார வெறியென்ன அதிவேகக் காரென்ன
அராஜகம் செய்தோர் தோற்றுவிட்டார்
சதிகார கூட்டத்தின் சாகசம் எல்லாம்
சாய்ப்போம் இனியென்று கும்மியடி !

நேரினில் போய்ப் பேசிப் போராளிகள் முன்பு
நிற்க மறுத்தவர் வீழ்ந்து விட்டார்!
பாரினில் இதுபோல் போராட்டம் உண்டோ
பரவசம் பொங்கக் கும்மியடி!

Comment here...