கட்டுரையாளர்: தி.தமிழரசு
கூட்டுறவு வங்கிகளில் குறைந்தகால கடன் வழங்கும் நிறுவனங்கள் தமிழ்நாடு மாநில தலைமைக் கூட்டுறவு வங்கி, 23 மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள், 4500க்கும் மேற்பட்ட பிரதம வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள் என்ற மூன்று அடுக்குகளாக செயல்பட்டு வருகின்றன.
இந்த மூன்றடுக்கு முறை என்பது முழு மாநில அந்தஸ்து உள்ள மாநிலங்களில் மட்டும் செயல்படுத்தப்பட்டது. யூனியன் பிரதேசங்களான டெல்லி, கோவா, பாண்டிச்சேரி மற்றும் சிறிய மாநிலங்களான திரிபுரா உள்ளிட்ட மாநிலங்களில் இரண்டடுக்கு முறையே அமல்படுத்தப்பட்டது.
கூட்டுறவு நிறுவனங்களில் ஆளும் கட்சியின் அரசியல் தலையீடு இருந்ததால் கூட்டுறவின் வளர்ச்சி பல்வேறு மாநிலங்களில் ஒரு தேக்க நிலையை அடைந்தது. 1968இல் தமிழகத்தில் திரு.சந்தானம் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி கூட்டுறவில் அரசியல் தலையீடு கூடாது என்று பரிந்துரைத்தது. ஆனாலும் அது முழுமையாக அமுலாகாததால் சிறு கடன்களில் கூட்டுறவின் பங்கு தொடர்ந்து சரிந்து
கொண்டே உள்ளது.
கூட்டுறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறையா, மூன்றடுக்கு முறையா என ஆய்வு செய்ய நபார்டு வங்கியின் தலைவர் திரு. பிரகாஷ் பக்ஷி தலைமையில் 2012இல் ஒரு குழு அமைக்கப்பட்டது. இக்குழு மூன்றடுக்கு முறையில் அடித்தளத்தில் இருக்கக்கூடிய பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்களை நீக்கி மாவட்ட மத்திய வங்கிகளே நேரடியாக விவசாயக் கடன் கொடுக்கலாம் எனவும், பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்கள் அவற்றின் வியாபார முகவர்களாக செயல்படலாம் எனவும் பரிந்துரைத்தது. இது விவசாயிகளின் நலனுக்கு ஊறு விளைவிக்கும் என்பதால் இதை எதிர்த்து வங்கி ஊழியர் சங்கம், விவசாய சங்கங்கள் நாடு முழுவதும் நடத்திய எதிர்ப்பியக்கத்தின் காரணமாக பக்ஷி கமிட்டியின் பரிந்துரை கைவிடப்பட்டது.
தற்போது பாரத ரிசர்வ் வங்கியே மூன்றடுக்கு முறையில் உள்ள மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநிலத் தலைமை கூட்டுறவு வங்கியோடு இணைத்து பிரதம வேளாண் கூட்டுறவு சங்கங்களுக்கு கடன் கொடுக்கலாம் என்றும், இந்த இரண்டடுக்கு முறையை அமல்படுத்திட தேவையான வழிமுறைகளையும் 24.05.2021 அன்று வெளியிட்டது. முன்னதாக கேரளத்தில் ஆளும் இடதுசாரி அரசு விவசாயிகளின் நலனை அடிப்படையாகக் கொண்டு மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளை மாநில தலைமைக் கூட்டுறவு வங்கியோடு இணைத்திட கடந்த 2019ஆம் ஆண்டு நவம்பரில் தீர்மானித்து பாரத ரிசர்வ வங்கியின் ஒப்புதலோடு அமல்படுத்தியது. இவ்வங்கிக்கு “கேரள வங்கி” என்று பெயரிட்டது. 2019 நவம்பர் மாதத்தில் 96552 கோடி ரூபாயாக இருந்த வங்கி வியாபாரம் 2021 மார்ச் மாதம் 106397 கோடியாக உயர்ந்துள்ளது.
இவ்வாறு இணைப்பதன் மூலம்,
- மாநில பொருளாதாரத்தை உயர்த்துவதற்கான திட்டமிடலுக்கு மாநில அரசுக்கு பெருமளவில் உதவியாக இருக்கும்.
- பின் தங்கிய மாவட்டங்களுக்கு கடனுதவியை கூடுதலாக்க முடியும்.
- வணிக வங்கிகளுக்கு இணையாக தொழில்நுட்ப வசதியை மேம்படுத்துவதன் மூலம் வாடிக்கையாளர் சேவையை உயர்த்த முடியும்.
- புதிய திட்டங்களை மாநிலம் முழுவதும் ஒரே நேரத்தில் அமுலாக்க உதவும்
- சிறு சிறு வங்கிகளாக இருக்கும்போது ஏற்படும் நஷ்டம் என்பது ஒரே வங்கியாக மாறும்போது தவிர்க்கப்படும்.
தமிழகத்தில். 31.03.2021ல் மொத்த வைப்புகள் சுமார் 30000 கோடியாகவும், கடன்கள் சுமார் ரூ.29000 கோடியாகவும் உள்ளது. மேலும் கடந்த ஆட்சிக்காலத்தில் பயிர்க்கடன் தள்ளுபடி ரூ.12110 கோடி செய்யப்பட்டது.
தற்போதைய ஆட்சியில் மகளிர் சுய உதவிக் கடன் 2674.64 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. மேலும் நகைக்கடன் தள்ளுபடி ரூ.8000 கோடி வரை இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை அனைத்தையும் மாநில அரசு உடனடியாக கூட்டுறவு வங்கிகளுக்கு அளிக்க வேண்டும். இல்லையென்றால் கூட்டுறவு வங்கிகள் பெரும் நஷ்டத்தை சந்திக்க நேரிடும். நஷ்டமடைந்த வங்கிகளை மூடிவிட ஒன்றிய அரசு ஏற்கனவே அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் மாவட்ட கூட்டுறவு வங்கிகளை மாநில தலைமை கூட்டுறவு வங்கியுடன் இணைத்தாலே வங்கிகளுக்கு புதிய உத்வேகம் கிடைக்கும். தலைமை வங்கி மற்றும் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகள் கடந்த 15 ஆண்டுகளில் சுமார் ரூ.2000 கோடிக்கு மேல் வருமான வரி செலுத்தியுள்ளன. வரும் காலங்களில் வங்கிகளை ஒருங்கிணைக்கும்போது இவ்வளவு பெரிய தொகை வரியாக கட்ட வேண்டிய அவசியம் வராது. எனவே, தமிழக அரசு கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்தும் “தமிழ்நாடு கூட்டுறவு வங்கியை” உருவாக்குவதே சாலச் சிறந்தது.