சவால் மிகுந்த காலத்தை எதிர்கொள்ளும் சக்தியாக பாரதி

கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன்

சுதேச கீதங்கள் மட்டுமல்ல, சுதேசி வங்கிக்கும் அடித்தளம் போட்டவன்
மகாகவி. காலனியாதிக்க சுரண்டலில், தேச மக்கள் சேமிப்பும் காணாமல் போய்க் கொண்டிருந்தது கண்டு வெகுண்டு எழுந்தவன் பாரதி. அர்பட் நாட் என்கிற அந்நியன் நடத்திவந்த வங்கி நஷ்டக் கணக்கில் மூழ்கத் தொடங்கிய போது அதுபற்றி ஏராளமான கட்டுரைகள் வடித்தவன் நம் விடுதலைக்கவி.

1906 நவம்பர் மாதம் தனது இந்தியா பத்திரிகையில் எழுதிய கட்டுரையில், சுதேசி இயக்கத் தொண்டர்கள் திரட்டிய நிதியெல்லாம் அர்பட் நாட் வங்கியில் கரைந்து போனது, எத்தனையோ குடும்பங்கள், அபலைகள், அப்பாவி மக்கள் எண்ணாமல் போட்ட பணம் மண்ணானது கண்டு மனம் கலங்கிய சுப்பிரமணிய பாரதி அப்போது வெஞ்சினத்தில் வார்த்த கவிதை வரிகள் தான், ‘பொழுதெல்லாம் எங்கள் செல்வம் கொள்ளை கொண்டு போகவோ, நாங்கள் சாகவோ’ என்பது. அதோடு நிற்கவில்லை, தென்னகத்து கனவான்கள், செட்டி நாட்டு சீமான்கள், வர்த்தகர்கள் எல்லோரும் சேர்ந்து நாமாக ஏன் இங்கே ஒரு சுதேசி வங்கி நிறுவக்கூடாது என்ற சிந்தனையைத் தூவினான்.

அதன் வீச்சு தான், மார்ச் 1907ல் பூர்வாங்க முயற்சிகள் நடைபெற்று வெவ்வேறு மதத்தினர், மொழியினர் முக்கிய பிரமுகர்களை ஒருங்கிணைத்து, கிருஷ்ணசுவாமி அய்யர் அவர்கள் முன்னின்று தொடங்கிய இந்தியன் வங்கி, சுதந்திரம் கிடைப்பதற்கு சரியாக நாற்பது ஆண்டுகளுக்கு முன், அற்புதமான தற்செயல் ஒற்றுமையாக அதே ஆகஸ்ட் 15 அன்று உதயமானது.

இந்திய வங்கிகளுக்கு எல்லாமே இன்று தனியார்மய, அந்நிய மய பேராபத்து சூழும் நேரத்தில், ‘நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம். அது நமக்கே உடமையாம் என்பதறிந்தோம்’ என்ற கவி வாசகத்தின் பொருள் முன்னெப்போதையும் விட உரத்து வலுத்து அழுத்தமாக ஒலிப்பதைக் கேட்க முடிகிறது.

Comment here...