சுற்றுச்சூழலுக்கான ஆபத்தை உணர்ந்துள்ளதா உச்சி மாநாடு?

கட்டுரையாளர்: பாரதி

ஐப்பசி மாசம் அட மழைம்பாங்க…
ஆடி காத்துல அம்மியும் நகரும்பாங்க..

இதெல்லாம் தமிழ் சொலவடைகள். அந்த அந்த காலத்தில் அந்த அந்த பருவ நிலை மாற்றங்கள் நிகழும் என்பதே இந்த சொலவடைகள் சொல்ல வருவது. ஆனால் அவ்வாறு இருக்கிறதா இன்றைய நிலை?

கடும் குளிரில் மழை பெய்கிறது, வருடா வருடம் குறைந்தது ஐந்து புயலாவது அடிக்கிறது. டெல்லியில் கடுமையான காற்று மாசுபாட்டினால் பொது முடக்கம் அறிவித்து இருக்கிறது அந்த அரசு. AQI (AIR QUALITY INDEX) தான் காற்றின் தரத்தை குறிக்கக்கூடியது. அதிக பட்சம் 300 இருக்க வேண்டும் என்ற நிலையில் 350, 347 என்று காற்று நஞ்சாய் மாறி நிற்கிறது.

டெல்லி தானே நமக்கென்ன என்று நினைப்போமேயானால் வரும் காலங்களில் நம் நிலையும் அவ்வாறு மாறும் அபாயம் இருக்கிறது. இத்தகைய மோசமான பருவ நிலை மாற்றத்திற்கு சுற்றுச்சூழல் மாசுபாடு தான் காரணம். அதனை வலுவாக சொல்லியிருக்கிறது GLASGOW SUMMIT. COP26 என்று அழைக்கப்பட்ட இந்த மாநாடு பருவநிலை மாற்றம் குறித்து விவாதிப்பதற்காக நடந்தது. இதுவரை 26 மாநாடுகள் நடந்து முடிந்து இருக்கிறது.

இந்த மாநாட்டில் நிலக்கரி மற்றும் புதைபடிவ எரிபொருள்(Fossil fuel) பயன்பாட்டை குறைக்க வேண்டி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மாநாட்டில் பங்குபெற்ற உலக நாடுகளின் தலைவர்கள் பலரும் தங்கள் அதிருப்தியை பதிவிட்டு இருக்கிறார்கள். காரணம் சென்ற மாநாட்டில் ”உலக வெப்பமயமாக்கலை 2 டிகிரி செல்சியஸ் குறைக்க வேண்டும்” என்று தீர்மானம் போட்டு அது நிறைவேறவில்லை என்றும் வெறும் தீர்மானங்களாக மட்டும் நின்று விடக் கூடாது என்றும் பல தலைவர்களும் கருத்து தெரிவித்துள்ளனர். அந்த மாநாட்டில் இந்திய நாட்டை சேர்ந்த ஏழாம் வகுப்பு மாணவி வினிஷா என்பவரும் கலந்து கொண்டு உரை ஆற்றினார்.

தன் உரையில் ”இளம் தலைமுறையே பெரும் கோபத்தில் உள்ளோம், வெற்று வார்த்தைகள் உலகத்தை காப்பாற்றாது” என்று கூறினார். அவர் கரி இல்லாத சூரிய ஒளியில் இயங்கும் சலவை வண்டியை கண்டுபிடித்தவர் என்பது குறிப்பிடதக்கது. அதே மாநாட்டில் நம் பாரத பிரதமர் மோடி 2070 ல் பசுமை இல்ல வாயுவின் வெளியேற்றத்தை பூஜியம் (ZERO EMISSION) ஆக்குவோம் என்று உறுதி கூறிவிட்டு வந்திருக்கிறார். ZERO EMISSION என்ற நிலையை அடைய பசுமை இல்ல வாயுக்கள் (GREEN HOUSE GASES) வளிமண்டலத்தில் சேராமல் இருக்க வேண்டும்.

கார்பன்டை ஆக்ஸைடு வெளியேற்றத்தில் இந்தியா உலகளவில் நான்காம் இடத்தில் இருக்கிறது. ஸ்வீடன் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் COP26 மாநாட்டின் தலைவர்களின் வெற்று வார்த்தைகளால் இந்த உலகத்தை காக்க முடியாது என்று நெற்றிப்பொட்டில் அடித்தது போல் சொல்கிறார். ”இங்கு பேசும் உலக தலைவர்களால் எந்த மாற்றத்தையும் நிகழ்த்திவிட முடியாது, மாற்றத்தை நாங்கள் கொண்டு வருகிறோம் உங்களுக்கு பிடிக்கிறதோ பிடிக்கவில்லையோ” என்று பகிரங்கமாக சொல்லியிருக்கிறார். Turn the warm words into action- பேச்சை செயலாக்கம் செய்க என்கிறார் இறுதியாக.

Comment here...