ஜெய்பீம்: அரசியல் அவசியம்

கட்டுரையாளர்: க.சிவசங்கர்

சிறைச் சாலையில் இருந்து வெளியே வரும் கைதிகளிடம் என்ன சாதி என்று கேட்டு மற்ற சாதியினர் அனைவரையும் போகச் சொல்லிவிட்டு பழங்குடியின சாதியைச் சேர்ந்தவர்களை மட்டும் தனியாக நிற்க வைத்து, நிலுவையில் இருக்கும் வழக்குகளை எல்லாம் அவர்கள் மீது போடுவதற்காக போலீஸ் வாகனத்தில் அடித்து இழுத்துச் செல்லும்போது ஒருவர் வெளியில் நிற்கும் வயதான தன் தந்தையைப் பார்த்து “அப்பா என் பொண்டாட்டி புள்ளைகள விட்டுராதீங்கப்பா” என்று சொல்லும் அந்த முதல் காட்சியிலேயே அடக்க முடியாத கண்ணீரால் நம்மை அவர்கள் வாழ்வியலோடு ஒன்ற வைத்துவிடுகிறார் இயக்குனர். அதன்பிறகான இரண்டரை மணி நேரத்தில் பல இடங்களில் அழுகையும், கோவமும், ஆற்றாமையும் வெளிப்படுவதை தவிர்க்க முடியவில்லை.

ஒரு பழங்குடி சமூகத்தின் வாழ்வியலை முதன்முறையாக திரையில் பார்க்கும் அனுபவம் புதுமையானது. அவர்கள் வயல்களில் எலி பிடிப்பது, சிறு மிருக வேட்டைகள், ஊரில் இருந்து ஒதுக்கி வைத்து தனியாக ஆள் நுழைய முடியாத குடிசைகளில் வாழ்வது, கல்லு வீடு கட்டுவதையே வாழ்நாள் லட்சியமாகக் கொள்வது, மிக யதார்த்தமான கூடல், இயல்பாக இருக்கும் நகைச்சுவை உணர்வு, சிறு தெய்வ குல வழிபாடு, எட்டாக் கனியாக இருக்கும் படிப்பின் மீதான ஆர்வம், அறிவொளி இயக்கத்தின் மூலம் கிடைக்கும் படிப்பு, சாதிச் சான்றிதழ் கிடைக்க அனைத்து அவமானங்களையும் தாங்கிக் கொண்டு போராடும் உணர்வு என்று முதல் அரைமணி நேரம் நம்மை 

அந்த இனத்தின் வாழ்க்கையை அவர்களோடு சேர்ந்து நாமும் வாழ்வது போன்ற உணர்வை ஏற்படுத்தி விடுகிறார் இயக்குநர்.

ஊர் பெரியவர் வீட்டில் பாம்பு புகுந்துவிட, அதைப் பிடிக்க ராசாக்கண்ணுவை இரு சக்கர வாகனத்தில் கூப்பிட வரும் நபர் தன் மீது கை வைத்து ஏறும் ராசாக்கண்ணுவை முறைத்துப் பார்க்கும் ஆதிக்க சாதி மனோபாவம்…

“குந்த இடம் கொடுத்து, புழைக்கறதுக்கு வேலையும் கொடுத்தா, திமிரெடுத்தா அலையிரீங்க…அந்த நாலு குடிசையை கொளுத்துறதுக்கு எம்புட்டு நேரம் ஆயிரும்” என்று கூறும் ஊர் தலைவர் போன்ற காட்சிகளின் மூலம் சமூகத்தில் அடித்தட்டு மக்களின் மேல் தொடுக்கப்படும் உளவியல் மற்றும் பொருளாதார தாக்குதல்களை தோலுரித்துக் காட்டுகிறார் இயக்குனர்.

தன் கணவன் ராசாக்கண்ணுவை நாள் முழுக்க தேடி அலைந்துவிட்டு இரவு வீட்டிற்கு வரும் செங்கேணி, “ஆழக்கடலில் தேடிய முத்து, ஆசை சுகத்தில் தோன்றிய மொட்டு…எங்க ராசாக்கண்ணு, ஆயிரத்தில் ஒன்னே ஒன்னு…..” என்ற பாடலை ரோடியோவை வருடியபடி கேட்கும் போது நம்மை அறியாமல் வரும் கண்ணீரை தவிர்க்க இயலவில்லை.

மக்கள் அபிமானம் பெற்ற ஒரு நடிகர் வெளிப்படுத்தும் ஒரு செயல், அது நல்லதோ, தீயதோ, பொது சமூகத்தில் ஏற்படுத்தும் தாக்கம் என்பது மிக அதிகம். அந்த வகையில் வணிகரீதியாக நல்ல மார்க்கெட் கொண்ட முன்னணி நடிகரான சூர்யா இது போன்ற சமூக கருத்துக்கள் கொண்ட ஒரு திரைக்கதையை கையில் எடுப்பது என்பது வரவேற்கத்தக்கது.

இந்த படம் எடுத்துக் கொண்ட உண்மைக் கதையில், அந்த சம்பவத்தை வெளியுலகிற்கு எடுத்துச் சென்றதிலும், அந்த மக்களைத் திரட்டி தொடர்ச்சியான போராட்டங்களை மேற்கொண்டதிலும், இடதுசாரி சிந்தனைக் கொண்ட மேனாள் நீதிபதி சந்துருவிடம் இந்த வழக்கை எடுத்துச் சென்றதிலும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தோழர்களின் பங்களிப்பு என்பது அளப்பரியது.

இந்த வழக்கிற்காக 13 வருடம் தன் திருமணத்தைக் கூட தள்ளிப் போட்டு லட்சக்கணக்கான ரூபாய் பேரம் பேசப்பட்டும் சோரம் போகாமல் தீர்க்கமாய் போராடிய தோழர் கோவிந்தன் போன்ற ஆயிரக்கணக்கான தோழர்களைக் கொண்டதே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. அந்தவகையில் இந்த படத்தில் கதையின் முக்கியமான இடங்கள் பலவற்றில் கம்யூனிஸ்ட் கட்சி சார்ந்த அடையாங்களை ஒரு வணிக திரைப்படத்தின் எல்லைகளுக்கு உட்பட்டு குறியீடுகளாக காட்சிப்படுத்தி உண்மைக்கு மிக அருகில் நின்ற இயக்குநருக்கு புரட்சி வாழ்த்துக்களை சொல்லியே ஆகவேண்டும்.

வணிகரீதியான வெற்றியை இந்த படம் ஏற்கனவே உறுதிப்படுத்தி விட்டது. மாநில, தேசிய மற்றும் சர்வதேசத் தளங்களில் பல விருதுகளைக் குவிக்கப் போவதும் உறுதி.  ஆனால் இப்படத்தின் உண்மையான வெற்றி என்பது பொதுத் தளத்தில் ஏற்படுத்திக் கொண்டிருக்கும், இன்னும் ஏற்படுத்தப் போகும் தாக்கத்தில்தான் அடங்கியுள்ளது. அதற்கு இந்த படம் பேசும் அசலான அரசியலை நாம் பேச வேண்டும்.

அதற்கு போதிய அரசியல் தெளிவற்று வெறும் தனிநபர் துதிகளை மட்டுமே அரசியல் என்று நம்பிக் கொண்டிருக்கும் உழைக்கும் வர்கத்திடமும், அரசியலுக்கும் நமக்கும் சம்மந்தமே இல்லை என்று வாழ்ந்து கொண்டிருக்கும் பெரும்பாலான நடுத்தரவர்கத்திடமும் உரையாடல்கள் துவக்கப்படவேண்டும். குறிப்பாக காவல்துறை சீர்திருத்தங்கள் குறித்த விவாதங்கள் பொதுவெளிகளில் முன்னெடுக்கப்பட வேண்டும்.

இறுதியாக, நீங்கள் அன்றாடம் பயணம் செய்யும் இடங்களிலும், உங்கள் வீடு மற்றும் அலுவலகங்களுக்கு அருகில் என்று அனைத்துப் பகுதிகளிலும், அன்றாடம் சிவப்புக் கொடிகளைப் பிடித்துக் கொண்டு ஒரு பத்து இருபது பேராகச் சேர்ந்து முஷ்டி உயர்த்தி கோஷம் போட்டுக் கொண்டு இருக்கும்போது, முகத்தை திருப்பிக் கொண்டு பக்கத்தில் இருப்பவரிடம் “இவங்களுக்கு வேற வேலையே இல்லை, ஆஊன்னா கொடியத் தூக்கிட்டு வந்துருவாய்ங்க” என்று சொல்லும் முன் ஒரே ஒருமுறை அவர்களைக் கவனியுங்கள். வருடத்திற்கு ஒருமுறை உங்கள் வீடுகள் அல்லது கடைகளுக்கு உண்டியல்களோடு நிதி கேட்டு வரும் அந்த தோழர்களுக்கு தாராளமாகக் கொடுங்கள்.

நிச்சயம் அவர்கள் ஏதோ ஒரு ராசாக்கண்ணுக்காவோ, செங்கேணிக்காகவோ அல்லது அவர்களைப் போன்ற ஆயிரக்கணக்கான சமூகத்தின் குரலற்றவர்களின் குரலாகவோ ஒலித்துக் கொண்டிருக்கும் இடதுசாரி சிந்தனை கொண்ட தோழர்களே என்று உணருங்கள். ஒவ்வொரு போராட்டத்தின் போதும் அதிகார வர்க்கத்தின் மிரட்டல்களையும், அச்சுறுத்தல்களையும், சமரசங்களாக பேசப்படும் சில பல லட்சங்களையும் தலைமுடிக்குச் சமமாக பாவித்து தூக்கியெறிந்து முன் செல்பவர்கள் அவர்கள்.

படத்தின் கருவை இப்படி அணுகிப் பாருங்கள். வனத்தின் பூர்வ குடிகளான ராசாக்கண்ணுக்களிடம் இருந்து துண்டு நிலம் கூட இல்லாமல் சட்டம் என்ற பெயரில் அபகரித்து, உழைப்புச் சாதன உடமை ஏதுமற்று அவர்களை சுயமாக வாழவிடாமல் பிறரை நம்பி வாழும்படிச் செய்த இந்த நிலப்பிரபுத்துவ, முதலாளித்துவ சமூக அமைப்பே அனைத்து பிரச்சனைகளுக்கும் அடிப்படை.

ஒருவேளை கொஞ்சமேனும் நிலம் சொந்தமாக இருந்திருந்தால் ராசக்கண்ணு ஊர் தலைவரின் வீட்டில் பாம்பைப் பிடிக்கும் வேலைக்கோ, அதன்பிறகு பிழைப்பு தேடி செங்கேனியை விட்டுவிட்டு செங்கல்சூளையில் கூலி வேலைக்கோ சென்றிருக்க வேண்டியதில்லை. எனவே உழைப்புச் சாதன உரிமையுடன் கூடிய (நிலம்) பொருளாதார விடுதலையே அனைத்திற்குமான அடிப்படை என்பதையும், சாதிய ஒடுக்குமுறை என்பது இந்த பொருளாதார விடுதலையை அடையவிடாமல் தடுக்கப் பயன்படுத்தப்படும் வலுவான ஆயுதமே என்றும் உணர்வோம்.

படத்தில் நாயகன் சந்துரு கூறிய வசனத்தைக் கூறி முடிப்பதே பொருத்தமாக இருக்கும்.

“கோர்ட்ல நீதி கிடைக்கலனா, வீதியில் இறங்கிப் போராட வேண்டும்.

போராடுவதற்கு law ஒரு weapon.

அதுவே தீர்வல்ல.”

மாறாக போராட்டமே தீர்வு..!!!

Comment here...