பாலின சமத்துவம் பெற

கட்டுரையாளர் : இம்ரான்

பெண்கள் வீட்டை விட்டே வெளியில் வரக் கூடாது என்பதிலிருந்து, யாரோ தீர்மானிக்கும் அவர்கள் திருமண வாழ்வை, உறவை, வயதை எந்தக் கேள்வியுமின்றி வாழ்ந்து முடிக்கும் வழக்கத்திலிருந்து, அந்தத் துணை மரணித்தால் அந்த சடலத்தோடு சுட்டுப் பொசுங்கும் வன்மத்தில் இருந்து அல்லது மொட்டையடித்து முக்காடிட்டு தன் ஆயுள் முழுதும் மூலையில் முடங்கிக் கிடக்கும் சீர்கெட்ட கலாச்சாரத்தில் இருந்து, மேலாடை அணிய மறுதலிக்கப்பட்ட கொடூரத்தில் இருந்து, கல்வியுரிமை, சொத்துரிமை, மறுமண உரிமை மறுக்கப்பட்டதில் இருந்து இன்னும் எத்தனை எத்தனையோக்களில் இருந்தெல்லாம் விடுதலை பெற வரலாறு நெடுக போராட்டங்களும், இயக்கங்களும், உயிர்ப்பலிகளும் இந்த சமூகம் கண்டுள்ளது. சட்டமியற்றி இந்த நிலைமைகளை எல்லாம் மாற்றி விட்டாலும் இவையெல்லாம் இன்று சட்டப்படி குற்றம் என்றாகிவிட்டாலும் மனித மனங்கள் முற்றிலுமாக பாலின சமத்துவததை ஏற்றுக்கொண்டு விட்டதா? இல்லை வேறு வடிவங்களுக்கு அவை உருமாறி இன்னும் உயிர்பெற்றிருக்கிறதா?

இன்று ஒரு பெண் தான் விருப்பப்பட்ட துறையில் கல்வி பெற்று, தான் விரும்பிய துறையில் பணி மேற்கொண்டு தனக்கான பொருளாதார சுதந்திரத்தை ஒரளவு அடைய முடியும். அந்த சுதந்திரம் தனக்கு விருப்பமானவரை வாழ்க்கைத் துணையாக ஏற்றுக்கொண்டு தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும் துணிவையும் முதிர்ச்சியையும் அவளுக்குக் கொடுத்திருக்கிறது. இதனாலெல்லாம் பாலின சமத்துவம் அடைந்து விட்டதாக நாம் பறைசாற்றிக் கொள்ள முடியுமா?

அறிவுத்திறனிலும், பொருளீட்டுவதிலும் ஆணுக்கு நிகராகவோ அல்லது அவனுக்கு மேலாகவோ பெண் வளர்ந்து விட்டாலும் கூட அவள் ஒரு பெண்ணே! என்ற ஆழ் மனத்தின் உளவியல் பொதுப்புத்தி இன்னும் நுண்ணிய வழிகளிலெல்லாம் அலட்சியப்படுத்திக் கொண்டும் அடிமைப் படுத்திக்கொண்டும் தான் இருக்கிறது.

ஒரு வீட்டில் ஆண், பெண் இருவருமே பணியில் இருப்பவர்களாயிருப்பின், வீட்டின் பொருளாதார தேவைகளை இருவருமே சமபங்கிட்டு பூர்த்தி செய்பவர்களாயிருப்பின் வீட்டுப் பணிகளையும், பொறுப்புகளையும் சமபங்கிட்டுக் கொள்வது தான் சமதர்மம். சமத்துவம். வீட்டிற்குள் வரும் ஆண் அசதியாக/அலுப்பாக இருப்பார் என்று கருதும் அநேக குடும்பங்கள் அவனுக்கு முழு ஓய்வளித்து விட்டு பெண்கள் தலையில் மட்டும் சமையல், குழந்தை பராமரிப்பு என்று அனைத்தையும் எந்தக் குற்றவுணர்வும் இல்லாமல் ஏற்றி வைக்கும். இதில் ஆளுக்கொரு சட்னி, உணவு வகை எதிர்பார்க்கும் குடும்பம் – அது தனி ரகம்! குழந்தைகளின் கல்வி முழுமையும் பெண்ணை மட்டுமே சார்ந்தது. இவையனைத்திற்குப் பிறகும் குழந்தை நடை பழக தாமதமாகிறதா?

பேச்சு/செவித்திறனில் குறைபாடுகள் தென்படுகிறதா? எல்லாவற்றிற்கும் எந்த மன உறுத்தலுமின்றி தன் பெயரை initial ஆக சேர்த்துக்கொள்ளும் ஆணை விட்டுவிட்டு தாய் ஒருவளை மட்டும் பழி சொல்லி கழுவிலேற்றும் அவள் சுற்றம். ஒருவேளை ஆணும் பெண்ணும் வீட்டுப் பணிகளை சமபங்கிட்டுக் கொள்கிறார்கள் எனில், அதை ஏதோ அவன் அவளுக்கு செய்யும் உதவியாக கருதும் உளவியல் மனப்பான்மை இன்னும் அருவருக்கத்தக்கது!

வேலைவாய்ப்புகளில், அரசு, அதிகாரங்களில் பெண்களுக்கு 33% இட ஒதுக்கீடு வழங்க முற்படுவதில் இல்லை அவர்களுக்கான விடுதலை. “சமயலறைகளிலும், வீட்டு பொறுப்புகளிலும் ஆண்களுக்கு கட்டாயமாக 50% இட ஒதுக்கீடு வழங்குவதிலேயே இருக்கிறது அந்த விடுதலை!” இது தன்னிச்சையாக நிகழ்ந்தாலே பெண்களுக்கு அரசியலை கவனிக்கும் நேரம் வாய்க்கும். உங்களின் எந்த இட ஒதுக்கீடுமின்றி தன்னிச்சையாக அரசியல் அதிகாரங்களில் அவர்கள் தலையெடுக்கத் தொடங்குவார்கள்!

வீடுகளில் பெண்களுக்கு இவ்வளவு பாரபட்சங்கள் என்றால், பணியிடங்களில் வேறு விதம்.  அந்த sir சொன்னாரு என்று ஆண் அலுவலர்களை அணுகும் சமூகம்  அந்த அம்மா சொல்லுச்சு  என்று பெண்களை எந்த நாகரீகமுமின்றி அஃறிணை ஆக்கிவிடும். அந்த ஆளு கோவக்காரரு என்ற ஆண்பால் version பெண்பாலாக மாறும்போது  அந்த அம்மா பஜாரி, திமிரு புடிச்சது என்பதாக ஒலிக்கும்.

கோபமும், சீற்றமும், வீரமும் ஆண்களுக்கான பிரத்யேக குணமாகவும் பெண்கள் அச்சம், மடம், நாணத்தோடு ஒதுங்கிக்கொள்ள வேண்டும் போன்ற கணக்கற்ற முன்கற்பிதங்களை மண்டைக்குள் ஏற்றி வைத்திருக்கும் இந்த சமூகம் ஏற்படுத்தும் கணக்கற்ற உளவியல் தாக்குதல்களை எல்லாம் கடந்து கொண்டே தான் பெண்கள் நம்மோடு பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள்.

வீடு, அலுவலகம் என்று முகம் அறிந்த சுற்றத்திடமே இவ்வளவு உளவியல் தாக்குதல்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் பெண்ணுக்கு.. இந்த இரண்டுக்கும் இடையில் பயணப்படும் பயண தூரம் அனுதினமும் சவால் நிறைந்தது. பணி முடிந்து அவர்கள் செல்லும் நேரம் முன்னிரவாகவோ, கனமழைக் காலமாகவோ, ஆரவாரமற்ற சாலையாகவோ இருந்து விடாதபடி நேரம் காலம் எல்லாம் பார்த்துப் பார்த்துப் பயணப் பட வேண்டும்.

நடந்து செல்லும் பெண்ணிலிருந்து, இரு சக்கர வாகனம், பேருந்து, ஆட்டோ ரிக்ஷாவில் செல்லும் பெண்கள் வரை தினம் தினம் செய்திகளில் ஒலிக்கும் எண்ணிலடங்கா பாலியல் சீண்டல்கள் முதல் வன்கொடுமைகள் வரை அனைத்தையும் கவனத்தில் ஏற்றிக் கொண்டே முன்னெச்சரிக்கையுடன் அனுதினமும் பயணப் பட வேண்டும்!

சட்டங்கள் எவ்வளவு போட்டாலும் ஆழ்மனதின் கற்பிதங்கள் மாறாமல் இதிலெல்லாம் மாற்றங்கள் நிகழாது! இவையனைத்தையும் கடந்து பெண் தற்சார்பு உள்ளவளாக முன்னோக்கி நகரத் தொடங்கியிருக்கும் இதே காலகட்டத்தில் தான். போதுமான வேலைவாய்ப்புகளை உருவாக்க வக்கற்ற வலதுசாரி எகாதிபத்திய அரசின் பிரதிநிதிகள் கூசாமல் பெண்கள் வேலைக்குச் செல்வதாலேயே வேலையில்லாத் திண்டாட்டம் பெருகி விட்டது என்ற அரிய ஆராய்ச்சி முடிவுகளோடு காலத்தை பின்னோக்கி இழுக்க முற்பட்டுக்கொண்டே இருக்கிறார்கள். நாம் வெவ்வேறு காலக்கட்டத்தில் வெவ்வேறு ஆயுதங்களோடு போராடி முன்னேறி சென்றுகொண்டே இருக்கிறோம்!

5 comments

 1. நன்று…

  சரியான‌ புரிதலோடு,
  பணிக்கு செல்லும் பெரும்பான்மையான பெண்கள் சந்திக்கும் பணி சுமைகளை,
  பொது சமூகம் புரிந்து கொள்ளும்படி
  , தக்க வார்த்தைகளோடு
  எடுத்து சொல்லி இருக்கிறார்..

  பெண்ணின்,
  பிரச்சனையை உணர்ந்து முன் வைத்த,
  ஆண் தோழமைக்கு வாழ்த்துக்கள்💐

 2. நன்று…

  சரியான‌ புரிதலோடு,
  பணிக்கு செல்லும் பெரும்பான்மையான பெண்கள் சந்திக்கும் பணி சுமைகளை,
  பொது சமூகம் புரிந்து கொள்ளும்படி
  தக்க வார்த்தைகளோடு
  எடுத்து சொல்லி இருக்கிறார்..

  பெண்ணின்
  பிரச்சனையை உணர்ந்து முன் வைத்த,
  ஆண் தோழமைக்கு வாழ்த்துக்கள்💐

 3. பெண்களின் தற்போதைய நிலை எளிமையாக சிறப்பாக முன் வைக்கப்பட்டுள்ளது.
  வாழ்த்துக்கள் 💐
  தனிநபர் சொத்துடைமையும் அதன் வாரிசுக்காக தனக்கு மட்டுமே பிறந்த வாரிசை உறுதிப்படுத்துவதில் துவங்கியது பெண்ணின சமூக அந்தஸ்து சரிவு.
  இச்சூழல் மாறும் மட்டும் இந்த அவலமும் இதை எதிர்த்த போராட்டமும் தொடரும்.
  இப்போராட்டத்தில் நம்மையும் இணைத்துக் கொள்வோம் !

 4. அருமையான கட்டுரை திரு. இம்ரான் அவர்களே

Comment here...