பிரதீப் சவுத்ரி ஏன் கைது செய்யப்பட்டார்?

கட்டுரையாளர்: ஜேப்பி

2021 அக்டோபர் 31ம் தேதி ஸ்டேட் வங்கியின் முன்னாள் சேர்மன் பிரதீப் சவுத்ரி ஒரு பண மோசடி வழக்கிற்காக தில்லியில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டார். இந்தியாவின் ஆகப் பெரிய வங்கி, அதன் உச்சாணிப் பொறுப்பான “தலைவர்” பதவி வகுத்தவருக்கு ஏன் இந்த நிலைமை?

வங்கிகளின் கடன் கொள்கை, கடன் வசூல் கொள்கை – ஆகியவவை ஒன்றிய அரசாலும், ரிசர்வ் வங்கியாலும் வகுக்கப்படுகிறது. அதற்குட்பட்டு கார்ப்பரேட் கடன்கள் கொடுப்பது, அந்தக் கடன்களை எப்படி வசூலிப்பது, அவற்றில் எவ்வளவு தள்ளுபடி செய்வது போன்ற முக்கிய முடிவுகள் வங்கிகளின் உயர்மட்ட நிர்வாகிகள், அரசு பிரதிநிதிகள், ரிசர்வ் வங்கி பிரதிநிதிகள் உள்ளிட்ட இயக்குநர் குழுவால் எடுக்கப்படுகிறது.

வாராக்கடன் பிரச்சனைகள் மற்றும் ஏஆர்சி, ஐபிசி போன்ற கடன் வசூலிப்பு முறைகளில் வங்கிகளுக்கு ஏற்படும் மாபெரும் நஷ்டங்களுக்கு ஒன்றிய அரசும், ரிசர்வ் வங்கியும், வங்கிகளின் இயக்குநர் குழுவும் தாம் பொறுப்பு. ஆனால் நடைமுறையில் இவர்கள் யாரும் வங்கிகள் நஷ்டத்திற்கு பொறுப்பாக்கப்படுவதில்லை. கார்ப்பரேட் கடன் கொடுப்பதில், கடன் வசூல் செய்வதில் உயர் மட்ட நிர்வாகிகள் ஊழலில் ஈடுபட ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. பல சமயம் “வியாபார ரீதியான முடிவுகள்” என்ற பேரில் இவை கண்டு கொள்ளப்படுவதில்லை.

2008ம் வருடம் ராஜஸ்தானின் ஜெய்சல்மீர் நகரில் கோடாவன் குழுமம் தொடங்கிய “கர் ரஜ்வாடா” என்ற தனியார் ஹோட்டல் பிராஜக்ட் ஒன்றிற்கு பாரத ஸ்டேட் வங்கி ரூ 24 கோடி கடனாக அளித்தது. இந்த குழுமத்தைத் தொடங்கிய திலீப் சிங் ராதோட் 2010ல் காலாமாகி விட ஹோட்டல் கட்டுமானப் பணி பாதியில் நின்று விட்டது. ஹோட்டல் பிராஜக்டுக்கு வங்கி வழங்கிய கடன் தொகை வசூலில் சிக்கல் எனக் கூறி ஸ்டேட் வங்கி அந்தக் கடனை வாராக் கடன் ஆக அறிவித்தது.

பிணையாக இருந்த “ஃபோர்ட் ரஜ்வாடா” என்ற இன்னொரு ஹோட்டலையும் சேர்த்து ஸ்டேட் வங்கி கையகப் படுத்தியது. 2013ல் வங்கியில் இருந்து பிரதீப் சவுத்ரி ஓய்வு பெறுகிறார். 2014ல் அல்கெமிஸ்ட் என்ற “சொத்து மறுசீரமைப்பு நிறுவனத்தின்” இயக்குனராகிறார். அதே வருடம் ஸ்டேட் வங்கி அல்கெமிஸ்ட் நிறுவனத்துடன் ஹோட்டல்களை விற்க ஒப்பந்தம் போடுகிறது. 2015ல் ஹோட்டல் உரிமையாளர்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் பிரதீப் சவுத்ரி மீது வழக்கு தொடுக்கப்பட்டது. 2016ல் கையகப்படுத்தப்பட்ட ஹோட்டல்கள் அல்கெமிஸ்ட் நிறுவனத்திற்கு ரூ. 25 கோடிக்கு விற்கப்படுகின்றன. 2017ல் இந்த இரு ஹோட்டல்களின் சந்தை மதிப்பு ரூ. 160 கோடி என்று கூறப்படுகிறது. தற்போதைய மதிப்பு ரூ. 200 கோடி எனத் தெரிகிறது.

ஹோட்டல்களைக் குறைந்த விலைக்கு விற்று பண மோசடி செய்ததாக ஹோட்டல் உரிமையாளர்கள் தொடுத்த வழக்கில் ஜெய்சல்மீர் ஜுடிசியல் மாஜிஸ்ட்ரேட் வழங்கிய ஆணையின் அடிப்படையில் ஸ்டேட் வங்கி முன்னாள் தலைவர் பிரதீப் சவுத்ரி, அல்கெமிஸ்ட் நிறுவனத்தின் அலோக் திர், ஆர்.கே.கபூர், எஸ்.வி.வெங்கடகிருஷ்ணன், சசி மெத்ததில், தேவேந்திர ஜெயின், தருண் மற்றும் விஜய் கிஷோர் சக்சேனா ஆகிய எட்டு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வழக்கில் பிரதீப் சவுத்ரி கைது செய்யப்பட்டுள்ளார். அலோக் திர் தலைமறைவாக உள்ளார். பின்னர் பிரதீப் சவுத்ரி பிணையில் வெளி வந்துள்ளார்.

ஏஆர்சி, ஐபிசி மூலமாக இதை விட பலமடங்கு பெரிய கடன் தள்ளுபடி மோசடிகள், பிணைச் சொத்து விற்பனை மோசடிகள் அன்றாடம் நடந்து கொண்டுதான் இருக்கின்றன. இதனால் வங்கிகளுக்கு ஏற்பட்டுள்ள நஷ்டம் கணக்கில் அடங்காதது. தற்போது வங்கி இரகசியம் என்ற சாக்கில் பல ஊழல்கள் வெளிப்படுவதே இல்லை. ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு கடன் கொள்கையும், கடன் வசூல் கொள்கையும் தான் வங்கிகள் பெருத்த நஷ்டமடைவதற்கும், உயர் மட்ட ஊழலுக்கும் முக்கிய காரணம். இவை கைவிடப்பட்டு, உயர் மட்ட ஊழலை கண்காணிக்கும் அமைப்புகளை பலப்படுத்துவதும், ஊழல் பேர்வழிகளை கடுமையாக தண்டிப்பதும் மட்டுமே வங்கிகளை காப்பாற்றும். அதன் மூலம் மக்கள் பணம் காப்பாற்றப்படும்.

Comment here...