கட்டுரையாளர்: க.சிவசங்கர்
என் இஸ்லாமியத் தோழர் ஒருவரை சமீபத்தில் எதேச்சையாக பார்த்தபோது பரஸ்பர நல விசாரிப்புகளுக்குப் பின்னர் அவர் என்னிடம் பேசியது இது:
“ஜீ…facebookல உங்க posts எல்லாம் படிப்பேன். எல்லாமே எனக்கு ரொம்ப பிடிச்ச, நான் யோசிக்கிற விஷயமாவே இருக்கும். ஆனா என்னால அத எழுத முடியாது.ஏன்னா நான் எழுதுனா ஒரு முத்திரை குத்திருவாங்க பாருங்க”…
நான்: ஆமாஜீ…புரியுது…
வெகு இயல்பான இந்த ஒரு உரையாடல் அன்று முழுவதும் என்னுள் பல கேள்விகளை எழுப்பியது. இந்த கேள்விகளுக்குப் பின் ஒரு மிகப்பெரிய சமூகச் சிக்கல் ஒளிந்துள்ளது என்பதை உணர முடிந்தது. பிறப்பால் ஒருவர் இஸ்லாமியராகப் பிறந்த ஒரே காரணத்தால் அவர் சமூகத்தில் ஒவ்வொரு நிலையிலும் எவ்வாறு பார்க்கப்படுகிறார்??…தன் பெயரை, தன் அடையாளத்தை, தான் நம்பும் மதத்தை ஒரு நொடி தயக்கத்திற்கு பிறகே அவரால் ஒவ்வொரு முறையும் வெளிப்படுத்த முடிகிறது.
உலக அளவில் அமெரிக்கா போன்ற வளர்ந்த முதலாளித்துவ நாடுகள் பின்தங்கிய இஸ்லாமிய நாடுகளின் சந்தைகளைக் கைப்பற்ற அந்நாட்டின் மேல் தீவிரவாதம், அணு ஆயுதம் என்ற ஏதாவது ஒரு காரணம் கூறி தாக்குதல் நடத்துவதை வழக்கமாகக் கொண்டுள்ளன. மறுபுறம் ஹாலிவுட் தொடங்கி கோலிவுட் வரை திரைப்படங்களில் இஸ்லாமியர்கள் குறித்த தவறான புரிதல்களே பெரும்பாலும் ஏற்படுத்தப்படுகின்றன. நம்நாட்டில் இதனை இந்துத்துவ அமைப்புகள் தங்கள் அரசியல் ஆதாயத்திற்கு பயன்படுத்திக் கொள்கின்றன. இது இயல்பாகவே பொதுசமூகத்தில் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை உருவாக்குகின்றது.
இவ்வாறு பொது சமூகத்தின் ஆழ்மனதில் பதிந்துள்ள இந்த கருத்துருவாக்கத்தை அடிப்படை கதைக்களமாக எடுத்துக் கொண்டு, அதற்குமேல் ஒரு பொழுது போக்கு திரைப்படத்திற்கு தேவையான அத்தனை அம்சங்களையும் சேர்த்து மாநாடாக திரையில் கொடுத்துள்ளார் வெங்கட்பிரபு. அவர் படத்தில் இயல்பாக இருக்கும் இரட்டை அர்த்த வசனங்கள், படம் முழுக்க நிரம்பும் மது காட்சிகள் போன்றவற்றை இந்த படத்தில்தவிர்த்திருப்பது ஆறுதல்.
சிலம்பரசனுக்கு மிக நீண்ட இடைவெளிக்குப் பிறகு நிச்சயம் ஒரு திருப்புமுனை திரைப்படம் என்று சொல்லலாம். மனுஷன் உடம்பை குறைத்துக் கொண்டு, ஒரு புதிய தோற்றத்தில் கலக்குகிறார். இஸ்லாமியர் என்றால் குல்லா போட வேண்டும், தாடி வைக்க வேண்டும், நீள ஜிப்பா அணிய வேண்டும் என்று திரைப்படங்களில் பின்பற்றப்படும் அனைத்து வரையரையையும் தகர்த்துள்ளது இந்த மாநாடு.
மறுபுறம் எஸ்.ஜே.சூர்யா படத்தை வேறு உயரத்திற்கு கொண்டு போகிறார். அவரின் கெட்டப், உடல்மொழி அத்தனையும் அசத்தல் ரகம். ஆடியின்ஸ் விசிலடித்து, கைத்தட்டி ரசிக்கும் வில்லனாக அமைவது அனைவருக்கும் கிடைக்காத ஒன்று. யுவன் வழக்கம்போல் பின்னணி இசையில் ஸ்கோர் செய்து விடுகிறார். மெஹருசைலா பாடல் நிச்சயம் ரிப்பீட் மோட்தான்…
படத்தின் திரைக்கதையில் ஒரு பெரிய சஸ்பென்ஸ் கலந்த சுவாரஸ்யம் உள்ளது. சில ஹாலிவுட் படங்களில் முயற்சிக்கப்பட்ட time loop என்ற திரைமொழியை தமிழ் சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியுள்ளார் வெங்கட்பிரபு. அந்தவகையில் இந்த படத்தில் மிகப்பெரிய வேலை படத்தொகுப்பாளருக்குத்தான். அவர் மட்டும் கொஞ்சம் சொதப்பினால் மொத்த படமும் புரியாமல் அல்லது சுவாரசியம் இல்லாமல் போய்விடும் அபாயம் கொண்ட திரைக்கதை இது. மனுஷன் எவ்வளவு சிரமப்பட்டிருப்பார் என்பதை படம் பார்க்கும் போது உணரலாம்.
(Repeat..Repeat….Repeat….ஆத்தி… எத்தன தடவ..)
அழகான, நடிக்கத் தெரிந்த கதாநாயகி கல்யாணி பிரியதர்ஷன் தமிழ் சினிமாவிற்கு புதுவரவு. எஸ்.ஏ.சந்திரசேகர், ஓய்.ஜி.மகேந்திரன், சந்திரசேகர், பிரேம்ஜி, கருணாகரன் ஆகியோர் தங்களுக்கு கொடுக்கப்பட்ட வேலையை மிகச்சரியாக செய்துள்ளனர். படம் நிச்சயம் boxoffice ஹிட்தான். A மற்றும் B கிளாஸ்களில் வசூலைக் குவிக்கத்தான் போகிறது வாழ்த்துகள்.
படத்தைப் பாருங்கள். தமிழ் சினிமாவிற்கு அது கொடுக்கும் புதிய திரைமொழியை ரசியுங்கள். ஆனால் மிக முக்கியமாக அது சொல்லும் அடிப்படை கதைக்கருவை வெளியில் வந்து விவாதியுங்கள். நாம் ஒவ்வொருவரும் எங்கு சறுக்குகிறோம் என்பதை உணருங்கள். புறச்சூழல்களால் புரையோடிப் போயிருக்கும் பொது சமூகத்தின் மனநிலையை கொஞ்சமேனும் மாற்ற உங்களால் ஆன முன்னெடுப்புகளை எடுங்கள். படத்தில் இஸ்லாமிய நாயகன் தன்னைத் தவறான வழக்கில் சிக்கவைக்க நடக்கும் சதியை திரைமொழிக்கே உரிய சாகசங்களுடன் முறியடிக்கிறார்.
ஆனால் நிஜத்தில் நூற்றுக்கணக்கான இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் இவ்வாறு போலி வழக்குகளில் சிக்கவைக்கப்பட்டு பல ஆண்டுகள் சிறைகளுக்குப் பின்னால் தங்கள் வாழ்க்கையைக் கழித்து வருகின்றனர். இப்போதுகூட தமிழக அரசு நீண்ட நாட்கள் சிறையில் கழித்த கைதிகளை பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் விடுதலை செய்ய அரசாணை வெளியிட்டுள்ளது. ஆனால் அதிலும் இஸ்லாமிய சிறைக் கைதிகள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர் என்ற குற்றச்சாட்டு வந்துள்ளது. இவை குறித்தெல்லாம் நாம் பொதுவெளியில் பேசும்போதுதான் அது ஆளும் வர்க்கத்தின் காதுகளுக்கு எட்டும். அதற்கு இதுபோன்ற படங்கள் உதவினால் அதுவே இப்படங்களின் நிஜமான வெற்றியாக அமையும்.
ஒருநாள் என் இஸ்லாமியத் தோழரும் அவர் மனதில் பட்ட விஷயங்களை நொடிப்பொழுதும் தயங்காமல் பொதுவெளியில் பகிரும்நிலை வரட்டும்.
ஆம்…அந்த ஒரு நொடி தயக்கத்தை உடைப்பது அத்தனை எளிதல்ல…!!!