வங்கிப் பணியாளர்களின் நாடு தழுவிய வேலைநிறுத்தம்

கட்டுரையாளர் : சி.பி.கிருஷ்ணன்

பாராளுமன்றத்தின் குளிர்கால கூட்டத்தொடரில் அரசு வங்கிகளை தனியார் வசம் ஒப்படைப்பதற்கான சட்டத்திருத்த மசோதா கொண்டு வரப்பட உள்ளது.

இதனை கண்டித்து வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின்படி 2021 டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய இரு நாட்களும் அனைத்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் பங்கேற்கும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடைபெறும். இதற்கான முடிவு நவம்பர் 29, 30 ஆகிய இரு நாட்கள் இணைய வழியாக கூடிய வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்களின் கூட்டத்தில் எடுக்கப்பட்டது.

முன்னதாக பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு கோரிக்கை சாசனம் சமர்ப்பித்தல், கறுப்பு அட்டை அணிதல், கோரிக்கை முகக் கவசம் அணிதல், ட்விட்டர் பிரசாரம், பிரதமருக்கு கோரிக்கை மனு சமர்ப்பித்தல்,பத்திரிக்கையாளர் சந்திப்பு, ஆர்ப்பாட்டங்கள், தர்ணா என்று பல கட்ட போராட்டங்களுக்கான அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

2014 ஆம் ஆண்டு பாஜக ஆட்சிக்கு வரும்போது மொத்தம் 27 பொதுத்துறை வங்கிகள் இருந்தன. தற்போது அவை ஒன்றோடொன்று இணைக்கப்பட்டு 12 வங்கிகளாக சுருங்கி விட்டன. இவற்றில் “2 பொதுத்துறை வங்கிகளை இந்த நிதி ஆண்டிற்குள் தனியார் மயமாக்கி விடுவோம்” என்று ஒன்றிய நிதி அமைச்சர் திருமிகு நிர்மலா சீதாராமன் 2021 பட்ஜெட் உரையின் போது அறிவித்தார்.

இந்த திசை வழியில் வங்கிகள் கம்பெனிச் சட்டம் 1970 மற்றும் வங்கிகள் கம்பெனிச் சட்டம் 1980 ஆகிய சட்டங்களில் திருத்தம் கொண்டு வரப்பட உள்ளது. இவ்விரண்டு சட்டங்கள் மூலமாக முறையே 14 மற்றும் 6 தனியார் வங்கிகள் அரசுடைமையாக்கப்பட்டன.

அதன் மூலம் இவ்வங்கிகளின் 100% பங்குகள் ஒன்றிய அரசின் வசம் மாற்றப்பட்டன. 1994 ஆம் ஆண்டு பரவலான எதிர்ப்பையும் மீறி கொண்டு வரப்பட்ட சட்டத்திருத்தம் மூலமாக பொதுத்துறை வங்கிகளில் ஒன்றிய அரசின் பங்குகள் 100% லிருந்து 51% ஆக குறைக்கப்பட்டது.

2021 மார்ச் மாதம் இரு நாட்கள் வேலை நிறுத்தம்

நிதி அமைச்சரின் 2021 பிப்ரவரி 1ஆம் தேதிய பட்ஜெட் அறிவிப்பை கண்டித்து 2021 மார்ச் 15, 16 ஆகிய இரு நாட்கள் வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலை ஏற்று நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் மகத்தான வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர்.

பல்லாயிரக் கணக்கான வங்கி ஊழியர்கள்-அதிகாரிகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டங்கள், தர்ணாப் போராட்டங்கள் வேலை நிறுத்த நாட்களிலும், அதற்கு முன்னதாகவும் நடைபெற்றன. மேலும் ”ஒன்றிய அரசு தனியார்மய முயற்சியை கை விட வேண்டும்” என்று வலியுறுத்தி வங்கி சங்கங்கள் முன் முயற்சியில் லட்சக் கணக்கான பொது மக்களிடம் கையெழுத்துக்கள் பெற்று பிரதமரிடமும், நாடாளுமன்ற சபாநாயகரிடமும் சமர்ப்பிக்கப்பட்டன.

சேமிப்பிற்கு பாதுகாப்பு இருக்காது

அரசு வங்கிகள் தனியார்மயமானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பிற்கு முழுமையான பாதுகாப்பு இருக்காது. சாமான்ய மக்களுக்கான கடன் வசதி மறுக்கப்படும். அவர்களின் வாழ்க்கைத் தரம் கடுமையாக பாதிக்கப்படும். அரசு திட்டங்கள் கைவிடப்படும். பணி நியமனத்தில் வெளிப்படைத் தன்மை இருக்காது. தலித், பழங்குடியினர், முன்னாள் ராணுவ வீரர், உடல் ஊனமுற்றோர் போன்றோர்களுக்கான இட ஒதுக்கீடு கிடைக்காது.

தனியார் வங்கிகளில் உயர்மட்ட ஊழல் பெரும் பிரச்சனையாக உள்ளது. எந்த கார்ப்பரேட் நிறுவனங்கள் வராக்கடன் தள்ளுபடி என்ற பெயரில் அரசு வங்கிகளை கொள்ளையடித்தனவோ அதே நிறுவனங்கள் அரசு வங்கிகளை கைப்பற்றும் அவல நிலை ஏற்படும்.

வேலை நிறுத்தத்திற்கு தயாராவீர்

2021 டிசம்பர் 16, 17 வேலை நிறுத்தத்தின் வெற்றி நிச்சயம் இந்த அரசை பின்வாங்கச் செய்யும். பொது மக்களுடன் இணைந்த தொடர் போராட்டங்கள் மூலம் மட்டுமே வங்கி தனியார்மயத்தை முறியடிக்க முடியும்.

Comment here...