கட்டுரையாளர்: சி.பி.கிருஷ்ணன்
2016 நவம்பர் 9ம் தேதி உத்தரப் பிரதேசத்தில் உள்ள புலந்ஷார் என்ற ஊரில் சின்ன குழந்தை ஒன்று உயிருக்கு போராடிக் கொண்டிருந்தது. குழந்தையின் பெற்றோர்கள் உடனடியாக அருகில் உள்ள கைலாஷ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றார்கள். அது மத்திய பண்பாடு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் மகேஷ் சர்மாவிற்கு சொந்தமானது.
பெற்றோர்கள் கையில் சிகிச்சைக்கு தேவையான பணம் இருந்தது. ஆனால் அது செல்லாத நோட்டு என்று முந்தைய நாள் இரவு 8 மணிக்கு பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டு விட்டது. மருத்துவமனை கைவிரித்து விட்டது. குழந்தை இறந்துவிட்டது. அதேபோல் விசாகப்பட்டினத்தில் 18 மாத குழந்தைக்கு பழைய ரூபாய் நோட்டுக்களை வைத்துக் கொண்டு வைத்தியம் பார்க்க மருத்துவமனை மறுத்துவிட்டதால் அக்குழந்தையும் இறந்துவிட்டது.
2016 நவம்பர் 13ம் தேதி போபாலில் பணியிலிருந்த காசாளர் வேலை அழுத்தம் காரணமாக மாரடைப்பு ஏற்பட்டு வங்கிக் கிளையிலேயே உயிரிழந்தார். அதேபோல் நவம்பர் 16ம் தேதி கடைநிலை ஊழியர் ஒருவர் புனேவில் உயிரிழந்தார்.
இதுபோன்று செல்லா நோட்டுப் பிரச்சனையால் உயிரிழந்த நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கும், வங்கி ஊழியர்களுக்கும் அஞ்சலி செலுத்தக்கூட பிரதமர் மோடியோ அவரது சகாக்களோ தயாராக இல்லை.
அறிவிக்கப்பட்ட எந்த நோக்கமும் நிறைவேறவில்லை
5 லட்சம் கோடி ரூபாய் திரும்பி வராது என்று அரசு தரப்பில் பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் 15.44 லட்சம் கோடி ரூபாயில் 99% நோட்டுக்கள் திரும்பி வந்துவிட்டன. வெறும் 16000 கோடி ரூபாய் மட்டுமே திரும்பி வரவில்லை. அதுவும் அரசின் குழப்பமான அறிவிப்பால் மக்களிடம் தேங்கி போனதும், வெளிநாட்டில் இருந்து வர முடியாமல் போனதும்தான். கறுப்புப்பணம் ஒழியவில்லை. லஞ்சம் மறையவில்லை. கள்ளப்பணம் புதுநோட்டுக்களில் வரத் தொடங்கிவிட்டது. தீவிரவாதிகளிடம் பணத்திற்கும் பஞ்சமில்லை. ஆக செல்லாநோட்டு அறிவிப்பின் நோக்கமாக தெரிவிக்கப்பட்ட எதுவும் எள்ளளவுகூட நிறைவேறவில்லை என்பது பட்டவர்த்தனமாகிவிட்டது.
2016 நவம்பர் 8 முதல் டிசம்பர் 30 வரை 1.48 லட்சம் வங்கிக் கணக்குகளில் தலா 80 லட்சம் ரூபாய்க்கு கூடுதலாக மொத்தம் ரூபாய் 4.89 லட்சம் கோடி செலுத்தப்பட்டுள்ளது என்று 2017 பட்ஜெட்டில் அன்றைய நிதி அமைச்சர் அறிவித்தார். இது மொத்த செல்லா நோட்டின் மதிப்பில் சுமார் மூன்றில் ஒரு பங்கு. ஆனால் அவர்கள் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
பணப்புழக்கம் அதிகரிப்பு
”செல்லா நோட்டு அறிவிப்பால் பணப்புழக்கம் குறையும். அதனால் கறுப்புப் பணம் ஒழியும்” என்று பிரச்சாரம் செய்யப்பட்டது. ஆனால் 2016 நவம்பர் 8 ம் தேதி புழக்கத்தில் இருந்த பணம் ரூபாய் 17.77 லட்சம் கோடி ரூபாய். இன்றளவில் அது 29.17லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துவிட்டது. பணப் புழக்கம் 5 ஆண்டுகளில் 11.4 லட்சம் கோடி ரூபாய் உயர்ந்துள்ளது. மேலும் பணப்புழக்கம் குறைந்தால் கறுப்புப் பணம் குறையும் என்பதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.
இது சாமான்ய மக்கள் மீதான மோடி அரசின் துல்லிய தாக்குதல். கால ஓட்டத்தில் இதன் ரணம் ஓரளவு ஆறினாலும், வடு என்றும் மறையவே மறையாது.