வாடிக்கையாளர் விரோத – ஊழியர் விரோத TNGB நிர்வாகம்!

கட்டுரையாளர் : மாதவராஜ்

பாண்டியன் கிராம வங்கியும், பல்லவன் கிராம வங்கியும் ஒன்றிணைக்கப்பட்டு தமிழ்நாடு கிராம வங்கியாக செயல்பட ஆரம்பித்து ஏறத்தாழ மூன்று வருடங்கள் ஆகப் போகின்றன. தமிழ்நாடு முழுவதும் 634 கிளைகளோடு ஒரே கிராம வங்கியாக தமிழ்நாடு கிராம வங்கி இருக்கிறது. 

துரிதமான, தரமான வாடிக்கையாளர் சேவை, மற்ற வங்கிகளுக்கு இணையான தொழில்நுட்ப வசதிகள் என எதிர்கால வழிகளை முறைப்படுத்தி முன்செல்ல வேண்டிய காலக்கட்டம் இது. ஆனால் வாடிக்கையாளர்கள் நாளுக்குநாள் அதிருப்தியடைந்து வருகின்றனர். ஊழியர்களும் அலுவலர்களும் மனஉளைச்சலுக்கு ஆளாகி, வங்கியோடு இருக்கும் நெருக்கத்தை வேகமாக இழந்து வருகின்றனர்.

வங்கியின் தொழில்நுட்ப வசதி மேம்படுத்தப்படவில்லை. அடிக்கடி நெட்வொர்க் துண்டிக்கப்பட்டு வங்கியின் பணி தடைபடுகிறது. நெஃப்ட், ஆர்.டி.ஜி.எஸ் போன்ற முக்கிய பணபரிவர்த்தனைகள் முடங்கி விடுகின்றன. வடகிழக்கு மாகாணங்களில் உள்ள தொழில்நுட்ப வசதி கூட தமிழ்நாடு கிராம வங்கியில் இல்லை.

குழுக்களுக்கு கடன் வாங்கி கொடுத்து, அதை வசூலித்து திரும்ப செலுத்துவது போன்ற வணிகத்தின் குறிப்பிடத்தக்க அளவை என்.ஜீ.ஓக்களின் கைகளில் ஒப்படைத்திருக்கிறது நிர்வாகம். பல இடங்களில் குழுக்களிடம் வசூலித்து அதை வங்கியில் செலுத்தாத போக்கு அதிகரித்து வருகிறது. இது வங்கியின் எதிர்காலத்துக்கே பேராபத்தாய் முடியும். 

வாடிக்கையாளர்களிடம் வசூலிக்கும் கட்டணங்களும் அபராதங்களும் மிகக் கடுமையானவையாய் இருக்கின்றன. எளிய மக்களுக்கு வங்கிச்சேவை கிடைப்பதற்காக ஆரம்பிக்கப்பட்ட கிராம வங்கிகளின் நோக்கமே சிதைந்துபோகிறது. 

பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பணி நிரந்தரம் செய்யப்படாமல் 600க்கும் மேற்பட்ட தற்காலிக ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம், போனஸ் வழங்கப்படவில்லை. பி.எஃப் பிடித்தம் செய்யப்படவில்லை.

வங்கிக்கென்று இதுவரை  Book of Instructions வரையறுக்கப்பட்டு அறிவிக்கப்படவில்லை. ஏறத்தாழ 75 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் ஐந்தாறு வருடங்களுக்குள் பணிக்குச் சேர்ந்தவர்கள். அவர்களுக்கு தேவையான, முறையான பயிற்சிகள் அளிக்கப்படவில்லை.

AIRRBEA இணைப்பில் செயல்படும் தமிழ்நாடு கிராம வங்கி ஆபிஸர்ஸ் அசோஷியேஷனும், தமிழ்நாடு கிராம வங்கி ஓர்க்கர்ஸ் யூனியனும் இதுபோன்ற முக்கிய பிரச்சினைகளை கோரிக்கையாக்கி இயக்கம் நடத்தி வருகின்றன.

அதனைப் பொறுத்துக் கொள்ள முடியாத தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகம் கடுமையான தொழிற் சங்க விரோதப் போக்குகளையும், ஊழியர் விரோதப் போக்குகளையும் கையாண்டு வருகிறது.

உறுப்பினர்களிடம் சந்தா பெற்று தரும் செக்-ஆப் வசதியை தானடித்த மூப்பாக நிறுத்திவிட்டது.

பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தி தொழிற்சங்கத் தலைவர்களுக்கு சார்க்ஷீட், டிரான்ஸ்பர் என பழிவாங்கும் நடவடிக்கைகளில் ஈடுபடுகிறது. முக்கியத் தலைவரான தோழர் அண்டோவை சஸ்பெண்ட் செய்தது. நீதிமன்ற தடையுத்தரவுக்குப் பிறகு பணிக்குச் சேர்த்து தொலைதூரத்துக்கு டிரான்ஸ்பர் செய்தது. பணி ஓய்வு பெற்ற, சங்கத்தின் முன்னாள் பொதுச்செயலாளர் தோழர் மாதவராஜின் பணி ஓய்வு சலுகைகளை நிறுத்தி இருக்கிறது.

இவைகளை எதிர்த்து சங்கங்கள் போராடி வருகின்றன. மண்டல அளவில் ஆர்ப்பாட்டங்கள், தலைமையலுவலகம் முன்பு தர்ணா, செப்டம்பர் 28ல் ஒருநாள் வேலை நிறுத்தத்தில் ஆபிஸர்களும், ஊழியர்களும் ஈடுபட்டுள்ளனர். இவ்வேலை நிறுத்தத்தில் கலந்து கொண்ட அனைத்து அதிகாரிகளுக்கும் ”ஷோகாஸ் நோட்டிஸ்” வழங்கப்பட்டுள்ளன.

சென்னை உயர் நீதிமன்றத்தில் நிர்வாகத்தை எதிர்த்து 18க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு இடைக்காலத் தடை உத்தரவுகளும், சாதகமான தீர்ப்புகளும் பெறப்பட்டு இருக்கின்றன.

மதுரை பாராளுமன்ற உறுப்பினர் தோழர்.சு.வெங்கடேசன், தமிழ்நாடு கிராம வங்கி நிர்வாகத்தின் வாடிக்கையாளர் விரோத, ஊழியர் விரோத நடவடிக்கைகளைச் சுட்டிக்காட்டி, ஸ்பான்ஸர் வங்கியான இந்தியன் வங்கி நிர்வாகம் உடனடியாக தலையிட வலியுறுத்தி கடிதம் எழுதி உள்ளார்.

தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகம் தன் தொழிலாளர் விரோதப் போக்கைகை விட்டு, போராடும் தொழிற்சங்கங்களுடன் சுமுகமான பேச்சுவார்த்தை மூலமாக பிரச்சனைகளை தீர்த்து, வங்கிச் சேவையை மேம்படுத்த முடியும். அவ்வாறு செயல்படுமா?

Comment here...