ஆசிரியர் குழு
எல்லாக் காலங்களிலும், வாசிப்பு மிக முக்கிய பங்களிப்பை வரலாறு
நெடுக ஆற்றி வந்திருக்கிறது. கடந்த நூற்றாண்டின் எழுபதுகளில்
எண்பதுகளில் இளைஞர்கள் துடிப்பில் அரசியலும், சமூக எழுச்சியும்
அதிகம் துடித்தன. ஏராளமான இளைஞர்கள் எழுச்சிகர உத்வேகம்
கொண்டு உலவிய காலமது.
தொழிற்சங்கம் என்பது சொந்த கவலைகளுக்கு மட்டுமல்ல, சுயநல
நிகழ்ச்சி நிரல்களுக்கு அல்ல, ஓர் ஊழியர் சமூகம் குறித்த உணர்வையும் பெற்றுத் தமது அரசியல் தரத்தை உயர்த்திக் கொண்டு, அறிவை விரிவு செய்து அகண்டமாக்கி விசாலப் பார்வையால் உலகை நோக்கக் கற்பிக்கும் பட்டறை தான் தொழிற்சங்கம். “எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும்” என்ற சோசலிசத்திற்கான பள்ளி இது என்கிற பொறி தட்டியது.
பல்வேறு வங்கிகளிலும் இப்படியான சிந்தனை போக்குள்ள தோழர்கள் இயல்பாகவே ஓர் ஒருங்கிணைப்புக்குள் வரவே செய்தனர். இந்தியன் வங்கி கரூர் கிளையில் பணியாற்றி வந்த தோழர் சி செல்வராஜ், வங்கிக்கு அப்பாற்பட்டு ஐக்கிய தொழிற்சங்க தளத்தில் பேரார்வத்தோடு இயங்கி வந்தவர். 1980ல் நண்பர்கள் சிலரது உதவியோடு தொடங்கிய இதழ் தான் பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி. அதன் லோகோ, திண்டுக்கல் தோழர் ஆர்.எஸ்.மணி அவர்களின் பங்களிப்பு.
சங்க வேறுபாடின்றி, பதவி பாகுபாடுகள் இன்றி வங்கியில் பணியாற்றுவோர் எல்லோருக்குமான இதழாகத் தான் உருவெடுத்தது இந்த இதழ். கரூரில் ஆங்கோர் மரத்திடை பொந்தினில் வைத்ததோர் அக்கினி குஞ்சு என்று தான் சொல்ல வேண்டும், பற்றி எரிந்தது மாவட்டங்கள் தோறும்.
ஆர்வமோடு வாங்கி வாசித்த அந்த இதழ், ஆதாரபூர்வமான செய்திகளின் ஆணிவேராகவே பின்னர் அறியப்படும் அளவு (ஆமாம், BWU இதழில் தான் படித்தேன் என்று அறுதியிட்டு வாதம் செய்யுமளவிற்கு), உயர்ந்தது அதன் தரம், பரந்து விரிந்தது அதன் களம். சென்னைக்குக் குடிபெயர்ந்த அந்த இதழை மாதம் தவறாமல் கொண்டுவருவதற்கு எண்ணற்ற எளிய தோழர்கள் முதல் அருமையான தலைவர்கள் வரை அரும்பாடு பட்டுள்ளதை இந்தத் தருணத்தில் நன்றியோடு நினைத்துப் பார்க்கிறோம்.
டிரெடில் எந்திரத்தில் அச்சாகத் தொடங்கிய இதழ், மெல்ல மெல்ல நவீன தொழில் நுட்பத்திற்கு, ஆஃப்செட் எந்திரத்தில் காட்சிப்படுத்தலின் கூடுதல் சாத்தியங்களில் சிறப்பான வடிவமைப்பில் படைப்புகளை வழங்கும் தனித்துவ இடத்தை தொழிற்சங்க இதழ்கள் வரிசையில் பெற்று விட்டிருந்தது BWU. பல்லாயிரம் சந்தாதாரர்கள், வெவ்வேறு வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் விரும்பிப் படிக்கும் இதழானது. இதழ் தயாரிப்புப் பணியில் அசராத உழைப்பு செலுத்திய தோழர்கள் எல்லோரும் வணக்கத்திற்குரியவர்கள்.
ஊதிய ஒப்பந்தங்கள், பஞ்சப்படி கணக்கீடு, வெவ்வேறு வங்கிகளில் நடைபெறும் போராட்டங்கள், ஒழுங்கு நடவடிக்கை குறித்த செய்திகள், நியூஸ் மட்டுமல்ல வியூஸ் கூட சேர்த்து, சாதாரண வங்கி ஊழியர் ஒருவர் உற்சாகமாக வாங்கிப் படிக்கும் நோக்கில் அரசியல் சமூக பொருளாதார விஷயங்கள் மட்டுமின்றி கலை இலக்கிய பண்பாட்டு அம்சங்களும் அதில் இணைய, பல வண்ண அட்டைப்படம், சுவாரசியமான தொடர்கள், வரலாறுகள், விவாதங்கள் எல்லாம் நிறைந்து பல்வேறு துறை தொழிற்சங்கத் தலைவர்களும் விரும்பி வாசித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ளும் இதழானது BWU.
2006 பிப்ரவரி மாதம் வெள்ளி விழா சிறப்பிதழ் அமோக வரவேற்பு பெற்றது. பல்துறை அறிஞர்கள், சமூக செயல்பாட்டாளர்கள் (கானா பாடகர் முதல் மாற்றுப் பாலினத்தவர் வரை), இதழாளர்கள், விடுதலை போராட்ட வீரர் என் சங்கரய்யா அவர்கள் உள்ளிட்டு இடதுசாரி இயக்கத் தலைவர்கள் என மாதம் ஒரு விருந்தினர் பகுதி வெளியிட்டு அசரவைக்கும் பன்முக இதழாக வளர்ந்து வந்துள்ளது BWU.
எதேச்சாதிகார அரசியலில் கொதித்த துடிப்பில் விளைந்தது போலவே, இன்றைய வகுப்புவாத – கார்ப்பொரேட் ஆதரவு ஒன்றிய ஆட்சியில் பரிதவிக்கும் தேசம், நம் இதழை மீண்டும் துளிர்க்கச் செய்ய வேண்டிய நமது கடமையை நம்முன் வைக்கிறது. வலியுறுத்துகிறது. வற்புறுத்திக் கேட்டுக் கொள்கிறது. முன்னோட்டமாக, இப்போதைக்கு டிஜிட்டல் இதழாக BWU மீண்டும் தனது புதிய உருவில் வெளிவர இருக்கிறது!
வாழ்த்தி வரவேற்று வாசித்துக் கொண்டாடிப் பன்மடங்கு ஊழியர் அதிகாரிகளிடம் கொண்டு செல்வோம் என்ற உறுதிப்பாட்டுடன் முன்வருவோம், வாரீர்!
நான்காவது இரு தரப்பு ஒப்பந்தம் 1984….1987 ல் கையெழுத்தானது.. ஈரோடு நகரில் AIBEA கூட்டம்… தோழர் CHV… பேசுகிறார்… சென்னையிலிருந்து ரயில் ஏறும்போது பார்த்தேன்.. Bank workers unity என்ற பத்திரிக்கை… Load factor is a Fraud factor” என்று எழுதுகிறார்கள்….. நல்லாத்தான் எழுதராங்க… ஆனாலும்….. BWU ன் வீச்சு பல தலைமைகளையும் ஈர்த்தது…