கத்தோலிக்க சிரியன் வங்கி: அந்நிய நிறுவனத்தின் பிடியில்…

கட்டுரையாளர்: என்.ராஜகோபால்

பழைய தனியார் வங்கிகளெல்லாம் பெரும்பாலும் அரசு வங்கிகளைப் போலவே செயல்பட்டு வருகின்றன. கிராமப்புறக் கிளைகள், முன்னுரிமைக் கடன், சிறிய அளவிலான ”குறைந்த பட்ச கட்டணம்” என்று பல வகையிலும் அவை புதிய தனியார் வங்கிகளிலிருந்து மேம்பட்டே செயல்பட்டு வருகின்றன. அத்தகைய ஒரு பழைய தனியார் வங்கிதான் கத்தோலிக் சிரியன் வங்கி. 

இது கேரள மாநிலம் திருச்சூரை தலைமையகமாகக் கொண்டது. 2017ல் மொரீஷியஸை இருப்பிடமாகக் கொண்ட ஒரு கனடா நாட்டு நிறுவனம் இவ்வங்கியின் 51% பங்குகளை வாங்கியுள்ளது. இந்த அந்நிய நிறுவனம், வங்கியின் முழு நிர்வாகத்தையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளது. அவ்வங்கியின் பெயர் சிஎஸ்பி வங்கி என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

மேலும் ஒருவர் சேமிப்பு கணக்கு துவங்க குறைந்தபட்சம் ரூ.10000/- என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள், அதிகாரிகள் அனைவருக்கும் சேமிப்பு கணக்கு துவங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சிறுகுறு கடன்கள் என்பது மறுக்கப்படும் நிலை. விவசாயக்கடன், கல்விக்கடன், வீட்டுக்கடன், சிறு வியாபாரிகள் கடன் என்பதெல்லாம் அரிதாகும் அவலம். பெரு நிறுவனங்களுக்கான கடன் என்பது இக்கால கட்டத்தில் பன்மடங்கு உயர்ந்துள்ளது.

நிரந்தர ஊழியர்கள், அதிகாரிகள் என்பது மொத்த பணியாளர்களில் மூன்றில் ஒரு பங்காக சுருங்கி விட்டனர். அவர்களின் எண்ணிக்கை வெறும் 1353தான். ஓய்வு பெறும் வயதும் 58ஆக குறைக்கப்பட்டுள்ளது. இவற்றையெல்லாம் எதிர்த்து வங்கியை காக்கப் போராடும் ஊழியர்கள், அதிகாரிகள் பலருக்கும் தொலை தூர இடமாற்றம், குற்றப்பத்திரிகை, விருப்ப ஓய்வில் செல்ல கட்டாயப்படுத்துதல் என்பதாக வங்கி நிர்வாகத்தின் எதேச்சாதிகார போக்கு தலை விரித்தாடுகிறது. 2017 வரை ஒப்பந்த ஊழியர்களே இல்லாதிருந்த இவ்வங்கியில் இன்று அவர்களே ஸ்கேல் 3 அலுவலர்கள் வரை அதிகமான எண்ணிக்கையில் அமர்த்தப்பட்டுள்ளார்கள்.

ஊழியர் விரோத போக்கின் அடுத்த கட்டமாக இந்நிர்வாகம் 11வது இருதரப்பு ஒப்பந்ததை அமலாக்க மறுக்கிறது. அந்நிய நிறுவனங்களுக்கு கை மாறும் தனியார் வங்கிகள் இனி நம் நாட்டில் எவ்வாறு செயல்படும் என்பதற்கு சிஎஸ்பி வங்கி ஓர் எடுத்துக்காட்டு.

பெருவாரியான மக்களுக்கான வங்கிச் சேவை என்பது இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.  இதைத்தான் ஆட்சியாளர்கள் “புதியஇந்தியா” “மேக் இன் இந்தியா” என்றெல்லாம் பேசி வருகின்றார்கள். சிஎஸ்பி வங்கியில் நடப்பவையாவும் இந்திய மக்களுக்கு, வங்கி வாடிக்கையாளர்களுக்கு ஓர் எச்சரிக்கை மணி.

சிஎஸ்பி வங்கியில் வங்கி ஊழியர்கள், அதிகாரிகள் அவ்வங்கியில் யுஎப்பியு என்ற பதாகையின்கீழ் தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றார்கள். 2021 மார்ச் 26 ஒருநாள், 2021 செப்டம்பர் 29,30 மற்றும் அக்டோபர் 1 ஆகிய 3 நாட்கள், மேலும் 2021 அக்டோபர் 20, 21, 22 ஆகிய 3 நாட்கள் வேலை நிறுத்தங்களையும் வெற்றிகரமாக நடத்தியுள்ளார்கள்.

இதற்கு ஆதரவாக கேரள மாநில பிஇஎப்ஐ, ஏஐபிஇஏ, ஏஐபிஓசி ஆகிய சங்கங்களின் அறைகூவலை ஏற்று அம்மாநிலத்தில் உள்ள அனைத்து வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் அக்டோபர் 22 அன்று ஒரு நாள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். நாடெங்கிலும் அனைத்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் ஆதரவு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இருப்பினும் வங்கி நிர்வாகம் தீர்வை நோக்கி நகர்வதாக தெரியவில்லை.

இதேநிலை தொடருமேயானால் 2021 டிசம்பர் 30, 31 மற்றும் 2022 ஜனவரி 1 ஆகிய 3 நாட்கள் மீண்டும் வேலை நிறுத்தத்திற்கான அறைகூவலை யுஎப்பியு அவ்வங்கியில் அறிவித்துள்ளது. அகில இந்திய அளவில் மற்றவங்கிகளும் யுஎப்பியு பதாகையின்கீழ் போராட்டங்களில் ஈடுபடுவதற்கு ஆயத்தமாக உள்ளனர்.

Comment here...