BWU முதல் ஆசிரியனுக்கு !

ஆசிரியர் குழு 

பேங்க் ஒர்க்கர்ஸ் யூனிடி: வெள்ளிவிழா சிறப்பிதழ்: பிப்ரவரி 2006

செவ்வணக்கம் தோழர் சி செல்வராஜ்!

உரம் பெற்று உறுதியாக உயரும் உங்கள் கரங்களின் மூலமாகவே உங்களது தீர்மானமான செய்திகளைப் பேச முடிந்தது உங்களுக்கு. தொழிலாளர்கள்பால் எல்லையற்றுப் பெருகிய நேயமும், அருளும் பொழிந்த கண்கள் நிர்வாகங்களின் அராஜகத்திற்கு எதிராக சிவக்க மறந்ததில்லை, உரிய பொழுதுகளில்! உமது மடியில் புரளும் சுதந்திரமிருந்தது தோழர்களுக்கு – நடுங்கியவர்கள் நிர்வாகப் பேர்வழிகளும் ஊழியர் விரோதிகளும் தான்!

அன்பின் மொழியைத் தொழிற்சங்க உறுப்பினருக்கும், எதிர் மிரட்டலை அதிகார கூட்டத்திற்கும் வழங்கப் பழகி இருந்தது உமது நாக்கு. 

பழி வாங்கல்களை உமது விழியிலிருந்து நழுவும் ‘பீளையைப்’ போல் எளிதாகத் துடைத்தெறியும் துணிவை உம்மிடமிருந்து கற்றோர் உண்டு. 

வங்கித்தலைமை பீடத்திற்கு நேர் எதிரில் நின்றும் கூட, வர்க்க உணர்வு கொப்பளிக்க எச்சரிக்கை விடுக்க உமக்கிருந்த அசாத்திய நெஞ்சுரத்தின் நினைவுகளில் திளைத்திருக்கிறோம் இன்னமும். 

எந்த ஒரு பொழுதின் மகத்தான சிந்தனைச் சிதறலில் துவங்கினீரோ, அந்த பத்திரிகை இன்று வெள்ளி விழா ஆண்டு நிறைவு செய்து நிமிர்கிறது.  தனி மனித பாத்திரத்தை சமூகம் நேர்மையாகப் பதிவு செய்கிறது. கூட்டான தலைமைக்கு உமது பொறுப்பை மாற்றியதில் பத்திரிகை தனது தளத்தை மேலும் விரிவுபடுத்திக் கொண்டது.

இந்த 25 ஆண்டுகளில் எத்தனை எத்தனை இளம் தோழர்கள் இந்த பத்திரிகையின் வளர்ச்சிக்குத் தம்மை வெவ்வேறு வழிகளில் அர்ப்பணித்துக் கொண்டார்கள்! படைப்பாளிகள், விநியோகித்தவர்கள், வடிவமைத்தவர்கள், இரவு பகலாக இதையே சிந்தனையாகக் கொண்டு எழுச்சி பெற்று உலாவிக் கொண்டிருந்தவர்கள்…. உம்மை எண்ணும்போது அவர்கள் உழைப்பிற்கும் தலை வணங்குகிறது பத்திரிகை. 

எத்தனை இடர்பாடுகள், தடைகள், மிரட்டல்கள், புறந்தள்ளுதல்கள்….எல்லாம் கடந்து எந்த ‘வங்கி ஊழியர் ஒற்றுமை’ பெயர் தாங்கிப் புறப்பட்டதோ, அந்தப் பந்தல் பரந்து விரிந்து பரவுகின்ற பாதைக்கு, பத்திரிகை தனது எளிய பங்கை ஆற்றவே செய்திருக்கிறது. எந்தச் சங்க உறுப்பினரும் வந்து இளைப்பாறுகிற நிழல் மரமாக, திசை காட்டும் கருவியாக, தோள் கொடுக்கும் தோழராக BWU திகழ்ந்து வந்திருக்கிறது. 

ஒரு விபத்தில் இழந்து விட்டோம் உம்மை…செவ்வணக்கம் தோழா, உம் நினைவிற்கு! இந்தக் கணம் மீண்டும் உமது அதிர வைக்கும் முழக்கக் குரலோடு எம்மை ஆர்ப்பரித்துத் தழுவி, ‘பாத்துருவம்யா’ என்று சொல்ல வருவீரா என்ற ஏக்கத்தோடும், உமது பணியின் கம்பீர நினைவுகளோடும் இந்த சிறப்பிதழை வாசகர்களுக்கு வழங்குகிறோம்.

Comment here...