போராடும் ஊழியர்களை மிரட்டுவதா?
டி.ரவிக்குமார்
நடப்பு பாராளுமன்ற கூட்டத்தில் பொதுத்துறை வங்கிகளை தனியாருக்கு விற்கும் சட்டத்திருத்தம் கொண்டு வர ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளது. இதனை எதிர்த்து யுஎப்பியு அறைகூவலின் படி 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் டிசம்பர் 16, 17 தேதிகளில் அகில இந்திய வேலைநிறுத்தத்தில் ஈடுபட உள்ளனர்.
வங்கி ஊழியர்களின் போராட்ட வீச்சை குலைக்கும் நோக்கத்தோடு வேலைநிறுத்தத்தில் பங்கு கொள்ளும் ஊழியர்கள் மீது கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அரசு வங்கியான யூனியன் வங்கி நிர்வாகம், ஊழியர்களை அச்சுறுத்தும் வகையில் அனைத்து ஊழியர்களுக்கும் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.
யூனியன் வங்கி நிர்வாகத்தின் இந்த செயல்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு, ”பொதுத்துறை வங்கிகளை பாதுகாப்பதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டிய நிர்வாகம், அதற்கு மாறாக பொதுத்துறையை காக்கும் போராட்டத்தில் இறங்கியுள்ள வங்கி ஊழியர்கள், அதிகாரிகளை மிரட்டும் வகையில் சுற்றறிக்கை விடுத்துள்ளது முரண்பாடாக உள்ளது; உடனடியாக இந்த சுற்றறிக்கையுனை விலக்கிக்கொள்ள வேண்டும்” என்று அகில இந்திய யூனியன் வங்கி ஊழியர் சம்மேளனம், வங்கி நிர்வாகத்திற்கு கடிதம் எழுதியுள்ளது.