பெண்ணடிமைத்தன கருத்துக்களை விதைக்கும் சி.பி.எஸ்.இ வினாத்தாள்

கட்டுரையாளர்: எஸ்.பிரேமலதா

“மனைவிகளின் விடுதலை (பெண்விடுதலை) என்பது குழந்தைகளின் மீதான பெற்றோரின் அதிகாரத்தை சிதைத்து விட்டது…”

“ஆண்களை (கணவன்மார்களை) அவர்களது அதிகார பீடத்தில் இருந்து கீழிறக்கியதன் மூலம், மனைவிமார்களும் தாய்மார்களும் ஒழுக்கம் (குழந்தைகளின்) மீதான கட்டுப்பாட்டினை பறிகொடுத்து விட்டனர்…”

மேற்கூறிய வரிகள் டிசம்பர் 11, 2021 அன்று நடைபெற்ற சி.பி.எஸ்.இ 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வுக்கான ஆங்கில வினாத்தாளில் இடம் பெற்றுள்ள பத்திகள். இத்தகைய பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தன கருத்துக்களை உள்ளடக்கிய உரைநடைப்பகுதி அந்த கேள்வித்தாளில் இடம் பெற்றுள்ளது. பெண்மை வெல்கவென்று ஆனந்த கூத்திட்ட மகாகவி பாரதியின் பிறந்த நாளில்,  இத்தகைய பிற்போக்குத்தனமான பெண்ணடிமைத்தன கருத்துக்களை மாணவர்கள் எதிர்கொள்ள நேரிட்டது வேதனைக்குரியது.

ஆணாதிக்கக் கருத்துக்கள்

மத்திய அரசின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் சி.பி.எஸ்.இ வினாத்தாளில் இடம்பெற்றுள்ள அப்பட்டமான ஆணாதிக்க கருத்துக்கள், நாடெங்கிலும் பேரதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளன. சம்பந்தப்பட்ட உரைநடை பகுதி மட்டுமன்றி, அதனுடன் இணைக்கப்பட்டுள்ள வினாக்களும், அவற்றிற்கான விடைகளும் பெண்சமத்துவத்திற்கான நூற்றாண்டு கால நீண்ட, நெடும் போராட்ட வரலாற்றினை கொச்சைப் படுத்தும் தன்மையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. பெண்விடுதலை மட்டுமன்றி, இளைஞர்களின் ஒழுக்கம், கட்டுப்பாடு என பல்வேறு சர்ச்சைகளை உள்ளடக்கியுள்ளது இந்த உரைநடைப் பகுதி.

உண்மையில் இந்த வினாத்தாளை எதிர்கொண்ட ஒரு வளரிளம் பருவத்து மாணவர், சரியாக பத்து நாட்களுக்கு முன்னர் எழுதிய சமூக அறிவியல் தேர்வுக்காக, ஐரோப்பாவில் பதினெட்டு, பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில், சமத்துவத்திற்கான போராட்டத்தில் ஆண்களோடு சரிசமமாக பங்குபெற்ற பெண்கள், எவ்வாறு ஆட்சியதிகாரத்தில் பங்கு பெற இயலாமல், வெறும் பார்வையாளர்களாக நிறுத்தி வைக்கப்பட்டு, அநீதிக்கு உள்ளாக்கப்பட்டனர் எனும் வரலாற்றை படித்திருப்பார்.

அதற்கு நேரெதிராக முரண்படும் இந்த வினாத்தாள், மாணவர்களின் மனதில் எத்தகைய எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்தியிருக்கும் என்பது கற்பனைக்கெட்டாதது.

தற்செயலானாதா?

பெண்சமத்துவ மற்றும் பெண்விடுதலை கருத்துக்களை ஆரம்பப் பள்ளி பாடத்திட்டங்களில் இருந்தே துவங்கி, வரலாற்று ரீதியாகவும், அறிவியல் பார்வையுடனும் போதிக்கும் சி.பி.எஸ்.இ கல்வித்திட்டத்திற்கு எதிரான ஒரு வினாத்தாளை தயாரிக்க அனுமதித்த அதன் நிர்வாக முறை குறித்து நாம் பலத்த கேள்வியெழுப்ப வேண்டியுள்ளது.

எதிர்காலத் தலைமுறையினரான மாணவர்களின் மனதில் நச்சுக் கருத்தினை விதைக்கக் கூடிய இந்த நிகழ்வு ஏதோ தற்செயலாக நிகழ்ந்ததாக  கருதி கடந்துசெல்ல இயலாது. மாறாக, ஆணாதிக்க குடும்ப கட்டமைப்பை உயர்த்திப் பிடித்து, பெண்ணடிமைத்தனத்தை வலியுறுத்தும் சனாதன சித்தாந்தத்தினை பிரதிபலிக்கும் போக்கு என்பதை வெட்ட வெளிச்சமாக்க வேண்டியுள்ளது. பிஜேபி முன்நிறுத்தும் பழமைவாத சிந்தனைகள், கல்வித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் ஆழமாக ஊடுருவி, தேசத்தினை சீரழிக்கத் துவங்கிவிட்டன எனும் எச்சரிக்கை மணியாக இதைக் கருத வேண்டியுள்ளது.

பலத்த எதிர்ப்பு

டிசம்பர் 13, 2021 அன்று நாடாளுமன்றத்தில் இந்த பிரச்சனையை முன்வைத்து கேள்வியெழுப்பிய காங்கிரஸ் தலைவர் திருமதி.சோனியா காந்தி, ‘அப்பட்டமான பெண்வெறுப்பு கருத்தாக்கம்’ என கடுமையாகச் சாடியுள்ளார்.

இந்திய அரசியலமைப்புச் சட்டம் உயர்த்திப் பிடிக்கும் பாலின சமத்துவ விழுமியங்களுக்கு விரோதமானது எனக் குறிப்பிட்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர்.சு.வெங்கடேசன் கண்டனக் கடிதம் எழுதியுள்ளார்.

பணிந்தது சி.பி.எஸ்.இ

நாடெங்கிலும் வலுத்து, வெடித்த கண்டனங்களினால், வினாத்தாளில் இருந்து சம்பந்தப்பட்ட பத்தியினை நீக்குவதாக அறிவித்துள்ளது சி.பி.எஸ்.இ. மேலும், அந்த பத்தியுடன் இணைந்துள்ள கேள்விகளுக்கான முழு மதிப்பெண்களும், அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படுமெனவும் அறிவித்துள்ளது.

பாலின சமத்துவத்திற்கு எதிராக மாணவர்களின் உளவியலை கட்டமைக்கும் இந்த கேள்வித்தாளை தயாரித்தவர் முதற்கொண்டு மேற்பார்வையிட்டவர்கள் என பல்வேறு கட்டங்களில் அனுமதித்த அனைவரின் மீதும்  தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்; எதிர்வரும் காலங்களில் இது மீண்டும் நிகழாதிருக்க சி.பி.எஸ்.இ உத்திரவாதப்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கைகள் வலுத்துள்ளன.

சி.பி.எஸ்.இ அறிவிப்பின்படி சம்பந்தப்பட்ட பத்தியோடு இணைந்த 8 கேள்விகளுக்கான 6.4 மதிப்பெண்கள் அனைத்து மாணவர்களுக்கும் வழங்கப்படும். சி.பி.எஸ்.இ வரலாற்றில் இத்தகைய நிகழ்வு இதற்குமுன் நடந்திருப்பதாக தெரியவில்லை. இனியும் நடவாதிருக்கட்டும்…

ஏனெனில் மதிப்பெண்களைக் காட்டிலும், பன்மடங்கு மதிப்பு வாய்ந்தவை…. வாழ்க்கையின் சமத்துவ விழுமியங்கள்…

Comment here...