போராட்டத்திற்கான அவசியம் முடிந்துவிடவில்லை

விஜூ கிருஷ்ணன்

தோழர்களே!! லால் சலாம்!!!

அகில இந்திய கிராம வங்கி ஊழியர்கள் சங்கத்தின் 14 வது மாநாட்டில் சிறப்பு விருந்தினராக என்னை அழைத்திருப்பது பெருமை கொள்ளத்தக்க விஷயமாகும். விவசாயிகளின் ஒரு வருட போராட்ட இயக்கத்தின் வெற்றிக்கொண்டாட்டம் நடக்கும் இன்றைய நாளில், கிராம வங்கி ஊழியர்களின் மாநாடு நடப்பது தற்செயலானதாக இருக்கலாம்.

ஆனால், தனிச்சிறப்பு வாய்ந்தது. ஓராண்டு காலத்திற்கு முன்னதாக இந்திய அரசு மூன்று அவசர சட்டங்கள் கொண்டு வந்தது. இது இந்தியாவின் விவசாயம் மற்றும் நிலம் ஆகியவற்றை பன்னாட்டு பெரு நிறுவனங்களுக்கு திறந்துவிடும் ஏற்பாடு ஆகும். தாராளமய பொருளாதார கொள்கை அமுலுக்கு வந்தபின் பதவிக்கு வந்த ஒவ்வோர் அரசும், உலக வங்கி-ஐஎம்எப் விதிக்கும் கட்டளைகளை நடைமுறைப்படுத்தி வருகின்றன. ஆனால், பாஜக ஆட்சிக்கு வந்த பின்னர் அவற்றின் வேகமும், வீச்சும் மிகவும் அதிகரித்துள்ளன. எந்த ஒரு விவாதமும் இல்லாமல் மூன்று வேளாண் சட்டங்களையும் அது நிறைவேற்றியது  அதற்கு சிறந்த உதாரணம்.

மோசமான 3 சட்டங்கள்

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும் விவசாயிகள் தங்களின் விளைபொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமல் அவதிப்படுகிறார்கள். அப்படி ஒரு சூழலில் அரசு கொண்டு வந்த சட்டம் ஏற்கனவே அங்கொன்றும், இங்கொன்றுமாக செயல்பட்டுக் கொண்டிருக்கும் மண்டிகளை, அரசின் கொள்முதல் நிலையங்களை ஒழித்துக்கட்ட வழி செய்கிறது. அத்தியாவசிய பொருட்கள் சட்டத்தில் செய்த திருத்தம் பெருமுதலாளிகள் மக்களின் தினசரி பயன்பாட்டில் இருக்கும் உணவுப்பொருட்களை எந்தவித கட்டுப்பாடும் இல்லாமல் பதுக்கி வைத்து, கொள்ளை லாபம் அடிக்க வழி செய்கிறது. இந்த ஓராண்டில் உயர்ந்த வெங்காயம், பருப்பு வகைகள், எண்ணெய் வித்துக்கள் மற்றும் உருளைக்கிழங்கின் விலை இந்த சட்டத்தின் விளைவுகளை சொல்வதாக இருக்கின்றன. இதற்கு மேலாக, ஒப்பந்த விவசாய சட்டம் விவசாயிகளுக்கு நிலத்தின் மீதான உரிமையை பறிப்பதாக இருக்கிறது.

விவசாயிகள் இந்திய அரசு கொண்டு வந்த இந்த மூன்று சட்டங்களின் விளைவுகளை உணர்ந்தவர்களாகவே இருக்கிறார்கள். அவர்கள் தங்களின் எதிரி யார்? யாருடைய நலன்களுக்காக இந்த அரசு வேலை செய்கிறது? என்பதையெல்லாம் மிகச்சரியாக புரிந்து வைத்திருக்கிறார்கள். அந்தப்புரிதல் தான், அவர்களின் ஓராண்டுக்கும் மேலாக நீடித்த போராட்டத்திற்கு அடிநாதமாக இருந்தது. 

வங்கி ஊழியர்களின் ஆதரவு

விவசாயிகளுக்கும், வங்கி ஊழியர்களுக்குமான உறவு நெடியது. அதனால் தான், போராட்டத்தை ஆரம்பிப்பதற்கு மட்டுமல்லாமல், அதனை 12 மாத காலம் தொடர்ந்து நடத்துவதற்கும் வங்கி ஊழியர்கள் ஆதரவாக இருந்தனர். போராட்ட நிதியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு வங்கி ஊழியர்கள் செய்தது தான். நேரடியாகவும், பல்வேறு வழிகளிலும் வங்கி ஊழியர்கள் விவசாயிகள் போராட்டம் நடக்க உறுதுணையாக இருந்தனர். அந்த வகையில் விவசாயிகள் பெற்றுள்ள இந்த வெற்றி வங்கி ஊழியர்களின் வெற்றி ஆகும்.

கடும் அடக்குமுறை

விவசாயிகள் டெல்லியின் சிங்கு, டிக்ரி காசிப்பூர் உள்ளிட்ட அத்தனை நுழைவாயில்களையும் முற்றுகையிட முடிவு செய்த போது, ஆளும் அரசு எப்படியெல்லாம் தங்கள் மீது தாக்குதல் நடத்தும் என்றெல்லாம் யோசிக்கவில்லை. ஆரம்பத்தில் தடியடி நடத்தினார்கள், பின்னர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்; சாலைகளை தோண்டினார்கள். தங்கியிருந்த இடங்களுக்கு தண்ணீர் வசதியை நிறுத்தினார்கள். டிராக்டர் பேரணியின் போது கலகம் செய்தார்கள், லக்கிம்பூரில் வாகனமேற்றி தாக்குதல் நடத்தினார்கள். அவைகளுக்கெல்லாம் அவர்கள் பயந்துவிடவில்லை. தீரத்தோடு போராட்டத்தை தொடர்ந்தார்கள். அதன் விளைவாக மூன்று விவசாய விரோத, மக்கள் விரோத சட்டங்களையும் இந்த அரசு வாபஸ் பெற்றுள்ளது. இத்தோடு போராட்டத்திற்கான அவசியம் முடிந்துவிடவில்லை.

இந்த 12 மாத கால போராட்ட காலத்தில் உயிரிழந்த தியாகிகளுக்கு நிவாரணம் பெற்றுத் தருவது, அரசால் போடப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வழக்குகளை ரத்து செய்ய வைப்பது போன்ற விசயங்கள் நிலுவையில் இருக்கின்றன. இதோ, வங்கி ஊழியர்கள் தனியார்மயத்தை எதிர்த்து போராட்டம் நடத்த இருக்கிறார்கள் என்று அறிகிறேன். அந்த போராட்டத்திற்கு விவசாயிகள் சங்கம் சார்பில் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். வரும் காலங்களில், அரசின் கொள்கைகளுக்கு எதிரான போராட்டங்கள், விவசாயிகள் மற்றும் வங்கி ஊழியர்களின் ஒருங்கிணைந்த போராட்டங்களாக பரிணமிக்கும்.  நாம் வெல்வோம்.

(ஓராண்டு கால விவசாயப் போராட்டத்தின் தள நாயகன் தோழர் விஜு கிருஷ்ணன் அவர்களின் ஆங்கில உரையை தமிழாக்கம் செய்தவர்: பரிதி)

Comment here...