கட்டுரையாளர்:சி.பி.கிருஷ்ணன்
ஒன்றிய அரசின் “பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சிக்கு” எதிராக வங்கிப் பணியாளர்களின் 16.12.2021 மற்றும் 17.12.2021 ஆகிய 2 நாட்கள் வேலைநிறுத்தம் மகத்தான வெற்றி பெற்றது. இதில் வங்கி சங்கங்கள் கூட்டமைப்பின் அறை கூவலை ஏற்று நாடு முழுவதும் அனைத்து பொதுத்துறை வங்கிகளிலும், பழைய தனியார் வங்கிகளிலும் பணி புரியும் 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் முழுமையாக பங்கேற்றனர்.
வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட பின் நாடெங்கும் குறிப்பாக கிராமப்புறங்களில் பல்லாயிரக்கணக்கான கிளைகள் துவக்கப்பட்டு, வங்கிச் சேவை பல கோடிக்கணக்கான மக்களை சென்றடைந்துள்ளது. சாதாரண மக்களிடமிருந்து சேமிப்பு பணத்தை பெறுவதிலும் அதை தேவையானவர்களுக்கு கடனாக அளிப்பதிலும் மிகப்பெரிய முன்னேற்றத்தை கண்டுள்ளது.
விவசாயம், பெண்களின் சுய உதவிக் குழு , சிறு குறு தொழில் நிறுவனங்கள், கல்விக் கடன் வழங்குவதிலும், மற்றும் தேச கட்டமைப்பிலும் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் சேவை அளப்பரியது. சமுதாயத்தில் அடித்தட்டு மக்களுக்கு வங்கிச் சேவைகள் சென்றடைவதில் அரசு வங்கிகளின் பங்கு குறிப்பிடத்தக்கது. இதனை பாதுகாக்கத்தான் 2 நாட்கள் வேலை நிறுத்தத்தில் வங்கித் தொழிலாளர்கள் ஈடுபட்டனர்.
டிசம்பர் 8, 14, 15 ஆகிய தினங்களில் மத்திய கூடுதல் முதன்மை தொழிலாளர் ஆணையர் முன்பும், டிசம்பர் 10, 15 ஆகிய தினங்களில் இந்திய வங்கி சங்கத்துடனும் நடைபெற்ற பேச்சு வார்த்தை முற்றிலும் தோல்வியில் முடிந்தது. தனியார்மய மசோதாவை கைவிட ஒன்றிய அரசு தரப்பிலிருந்து எந்த வாக்குறுதியும் தரப்படவில்லை.
மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, பார்வேர்ட் பிளாக், ஆர்எஸ்பி, சிபிஐ-எம்எல், காங்கிரஸ் கட்சி, திமுக, விசிக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா, தேசிய காங்கிரஸ் கட்சி, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி, உள்ளிட்ட பல எதிர் கட்சிகள் போராடும் வங்கித் தொழிலாளர்களுக்கு தங்கள் பேராதரவை நல்கின. டிசம்பர் 17ஆம் தேதி இடது சாரி பாராளுமன்ற உறுப்பினர்கள் நாடாளுமன்ற வளாகத்தில் வங்கி ஊழியர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவாக ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கி , கிராம வங்கி, நபார்டு, ஓய்வு பெற்ற வங்கி ஊழியர்கள் காப்பீட்டு ஊழியர்கள் இந்த வேலைநிறுத்தத்திற்கு தங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதோடு, பல மையங்களில் ஆதரவு ஆர்ப்பாட்டங்கள் நடத்தினர். தொழிற்சங்கங்களின் உலக சம்மேளனம் தனது சகோதர ஆதரவை நல்கியுள்ளது. அத்துடன் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியு, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்கள், 500 விவசாய சங்கங்களின் கூட்டமைப்பான சம்யுக்தா கிசான் மோர்ச்சா, மத்திய அரசு ஊழியர்கள் மகா சம்மேளனம், அகில இந்திய பாதுகாப்பு ஊழியர்கள் சம்மேளனம், பிஎஸ்என்எல் ஊழியர் சங்கம், தனியார்மயத்திற்கெதிரான அகில இந்திய அமைப்பு ஆகியவை சகோதர ஆதரவு தெரிவித்துள்ளன.
வேலை நிறுத்தத்தின் இரு நாட்களும் நாடெங்கிலும் 300க்கும் மேற்பட்ட மையங்களில் சக்தி மிக்க ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. இதில் ஒரு லட்சத்திற்கும் கூடுதலான வங்கி ஊழயர்களும் அதிகாரிகளும் பங்கேற்றனர். தமிழ்நாட்டில் சென்னை, காஞ்சிபுரம், வேலூர், சேலம், ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், தஞ்சை, திருச்சி, கரூர், கள்ளக்குறிச்சி, மதுரை, நெல்லை, தூத்துக்குடி, விருதுநகர், நாகர்கோவில், புதுச்சேரி உட்பட 20க்கும் அதிகமான மையங்களில் 8,000க்கும் அதிகமான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் பெருந்திரளாக கலந்து கொண்டனர். ஒன்றிய அரசின் தனியார்மய நடவடிக்கை மீதான கோபாவேசமும் கொந்தளிப்பும் ஆர்ப்பாட்டத்தின் போது வெளிப்பட்டன.
இந்த மகத்தான வேலை நிறுத்தத்தின் மூலமாக வங்கித் தொழிலாளர்கள் மத்திய அரசுக்கு வங்கித் தனியார்மய மசோதாவை முற்றிலுமாக கைவிட வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்துள்ளனர். இதையும் மீறி மத்திய ஆட்சியாளர்கள் இம்மசோதாவை கொண்டு வர முயற்சி செய்தால், போராட்டத்தை தீவிரமாக்க வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது.