கட்டுரையாளர்:ஆதிரன்
சாதாரணமாக வீட்டுக் கடன் என்றாலே நமக்கெல்லாம் தெரிந்தது மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை 15 வருடங்களுக்கோ, 20 வருடங்களுக்கோ EMI (Equated Monthly Installment) ஆக கட்டுவது தான். ஆனால் முன்னோடி அரசு வங்கியான ஸ்டேட் வங்கியில் இந்த வீட்டுக்கடனை ஒவர்ட்ராப்ட் கணக்காக வைத்துக் கொள்ளலாம் என்பது நம்மில் எத்தனை பேருக்கு தெரியும்? போதிய விழிப்புணர்வு, விளம்பரம் இல்லாததாலும், பொதுவாக நடுத்தர மக்களிடையே இத்திட்டம் பற்றி எடுத்துச் சொல்லப்படதாதலும் பெரும்பான்மையான மக்கள் இச்சிறப்பான வட்டிச்சலுகைத் திட்டத்தால் பயனடைய இயலில்லை .
SBI MAXGAIN என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் 2005 ஆம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. இந்த ஒவர்டிராப்ட் வசதியுள்ள வீடு கட்டும் கடனை பயன்படுத்த விரும்புவோர் தங்களுடைய சேமிப்பு அல்லது நடப்பு கணக்கில் ரூ.5000/- குறைந்தபட்ச இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும் இந்த வீட்டுக்கடன் கணக்கிற்கு (overdraft) காசோலையும், இணைய பரிவர்த்தனைகளும் வழங்கப்படுகின்றன
ரூ.20 இலட்சம் முதல் ரூ.3 கோடி வரையிலான வீட்டுக்கடனுக்கு விண்ணப்பம் செய்யும் அனைவரும் இத்திட்டத்தில் சேர்ந்து பயனடையலாம். மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகை இதிலும் செலுத்தப்பட வேண்டும். அந்தளவிற்கு வீட்டுக் கடன் வாடிக்கையாளரின் பணம் எடுக்கும் அளவு (Drawing limit) குறைந்து கொண்டே வரும். அங்கீகரிக்கப்பட்ட அளவை விட (limit)ஐ விட வாடிக்கையாளரால் அக்கடன் கணக்கிலிருந்து பணம் பெற முடியாது. சில சமயம் வாடிக்கையாளருக்கு ஏதாவது ஒரு வகையில் பணம் வரலாம். அந்த பணத்தை இந்த SBI MAXGAIN ஓவர்டிராப்ட் கணக்கில் போட்டு வைக்கலாம். அந்தளவுக்கு அவருக்கு வட்டி குறையும். பின்னர் தேவையான போது அந்த கூடுதல் பணத்தை எடுத்துக் கொள்ளலாம். இதே பணத்தை சேமிப்பு கணக்கிலோ அல்லது குறைந்த கால வைப்பாகவோ போட்டு வைத்தால் வாடிக்கையாளருக்கு குறைந்த அளவில் தான் வட்டி கிடைக்கும். எந்தளவிற்கு கடன் நிலுவைத் தொகை உள்ளதோ அதற்கு மட்டுமே வட்டி வசூலிக்கப்படும் என்பதுதான் இந்த திட்டத்தின் சிறப்பம்சம்.
ஏற்கனவே பெறப்பட்ட வீட்டுக்கடனை சேவைக்கட்டணம் (Processing fee) மட்டும் ஒரு முறை செலுத்தி இத்திட்டத்தில் இணையலாம்