வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக

  • வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெறுக
  • வங்கிகள் தனியார்மய மசோதாவை திரும்பப் பெற வேண்டும்
  • வங்கித்துறையை தனியார்மயமாக்கும் முயற்சியை கைவிட வேண்டும் அரசு வங்கிகளை வலுப்படுத்த வேண்டும்

என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி சங்கங்களின் கூட்டமைப்பின் அறைகூவலின் படி 2021 டிசம்பர் மாதம் 16, 17 ஆகிய இரு நாட்கள் அனைத்து வங்கி ஊழியர்களும், அலுவலர்களும் நாடு தழுவிய வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு சட்டமாக்கப்பட்டு விட்டால், இரண்டு வங்கிகள் மட்டுமல்ல, 11 அரசு வங்கிகளையும் தனியார்மயமாக்கும் அதிகாரம் ஒன்றிய அரசுக்கு கிடைத்துவிடும். அரசு வங்கிகள் தனியார்மயமானால் வாடிக்கையாளர்களின் சேமிப்பிற்கு முழுமையான பாதுகாப்பு இருக்காது. அரசு வங்கிகளின் செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை உள்ளது. அவை தகவல் அறியும் உரிமைச் சட்டத்திற்கு உட்பட்டவை. ஆனால் தனியார் வங்கிகளுக்கு இந்த சட்டம் பொருந்தாது. அவற்றில் வெளிப்படைத்தன்மை கிடையாது.

தற்போது அரசு வங்கிகளில் பணி நியமனத்தில் கிடைத்து வரும் தலித், பழங்குடியினர், பிற்படுத்தப் பட்டோர், முன்னாள் ராணுவ வீரர், மாற்றுத் திறனாளிகள், பொருளாதாரத்தில் நலிவுற்றோர் போன்றோர்களுக்கான இட ஒதுக்கீடு தனியார் வங்கிகளில் கிடைக்காது. சமூக நீதி மறுக்கப்படும். அரசு வங்கிகள் சாமான்ய மக்களுக்கான சேவையில் முன்னணியில் நிற்கின்றன. சாமான்ய மக்களுக்கான 43.93 கோடி ஜன் தன் கணக்குகளில் 34.67 கோடி கணக்குகள் பொதுத்துறை வங்கிகளாலும், 7.99 கோடி கணக்குகள் கிராம வங்கிகளாலும் திறக்கப்பட்டிருக்கின்றன. 1.27 கோடி கணக்குகள் அதாவது மொத்தத்தில் 2.89% கணக்குகள் மட்டுமே தனியார் வங்கிகளால் திறக்கப்பட்டுள்ளன.

பெருவாரியான வேலை வாய்ப்புகளை உருவாக்கும் விவசாயம், சிறு, குருந்தொழில், பெண்களின் சுய உதவிக் குழுக்கள் மற்றும் கல்விக் கடனை வழங்குவதில் அரசு வங்கிகள் ஆகப் பெரும் பங்காற்றுகின்றன. இவை இல்லாவிட்டால் நாட்டின் உணவு உற்பத்தி, வேலை வாய்ப்பு கடுமையாக பாதிக்கப்படும். மக்களின் வாங்கும் சக்தி குறையும். அதனால் பொருளாதார கிராக்கி குறையும். அதனால் உற்பத்தி குறையும். இது மேலும் வேலையிழப்பை உருவாக்கும். இந்த தொடர் சங்கிலி பெரும்பாலான இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். பொருளாதாரத்தை பின்னுக்கு தள்ளும்.

இந்த வேலை நிறுத்தத்தினால் சில சிரமங்கள் நேர்ந்தாலும், இது சாமான்ய மக்களின் நலம் காக்கும் போராட்டம் என்பதை பொது மக்கள் உணர்ந்து இதற்கு பெருமளவு ஆதரவு நல்கியுள்ளனர். எனவே ஒன்றிய அரசு ”வங்கிகள் தனியார்மய மசோதாவை” கைவிட்டு, அரசு வங்கிகளை வலுப்படுத்த முன் வர வேண்டும்.

5 comments

  1. மக்கள் நலம் காக்க விடுக்கப்படும் கோரிக்கை – BWUவின் சேவை தொடரட்டும். நன்றிகள் பல கோடி. 🙏

  2. சிறப்பு, இணையத்தில் இதழ் வெளியிட சீரிய முயற்சியெடுத்த தோழர்களுக்கும் இணைய இதழுக்கும் வாழ்த்துக்கள்

  3. பல தகவல் பதிவேற்றம் செய்ய படுகிறது… நன்றி…

  4. வங்கி ஊழியர் போராட்டம் காரணமாக வங்கி தனியார் மய மசோதாவை தாக்கல் செய்யும் முடிவை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது. ஆனால் ஆபத்து இன்னும் உள்ளது. நாம் விழிப்போடு இருந்து போராட்டம் தொடர தயார் நிலையில் இருக்க வேண்டும்

Comment here...