2022 பிப்ரவரியில் 2 நாட்கள் பொது வேலை நிறுத்தம்

கட்டுரையாளர்:ஜேப்பி

மக்களை பாதுகாக்கவும், தேசத்தை பாதுகாக்கவும் 12 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற  நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வின் போது – 2022 பிப்ரவரி 23-24 தேதிகளில் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு 10 மத்திய தொழிற்சங்கங்களும், 70 க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.

கொரோனா பெருந் தொற்றுக்கு முன்பே இருந்த பொருளாதார நெருக்கடி, தொற்றின் காரணமாக அதிகரித்துத் தொடர்கிறது.  பல மாநிலங்களில் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பு இல்லாத நிலை, சில இடங்களில் இருந்தும் அவை முற்றிலும் சிதைந்த நிலையில் உள்ளது. 90 சதத்திற்கும் மேல் அமைப்புசாரா தொழிலாளர்கள் – அதிலும் புலம் பெயர்ந்த அத்துக் கூலித் தொழிலாளர்கள் கணிசமான எண்ணிக்கையில்.

திடீரென்று அறிவிக்கப்பட்ட பொது முடக்கம், அரசின் பெரு முதலாளிகளுக்கு ஆதரவான பல கொள்கை முடிவுகள், கொரோனாவின் அடுத்தடுத்த அலைகள் ஏற்படுத்திய பாதிப்பு இவற்றால் பெரும்பாலான ஏழை மக்கள் நாடு முழுவதும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.  கோடிக்கணக்கான மக்கள் வேலை இழந்து, வருமானம் இழந்து, குடும்பத்தினரை இழந்து பசி பட்டினிச்சாவு என்ற வறுமையின் கோரப் பிடியில் சிக்கித் தவித்து வருகின்றனர்.

ஃபுட் கார்ப்பரேஷன் கோடவுன்களில் தானியங்களை எலிக்கு இரையாக்கியதே தவிர உணவுப் பாதுகாப்பை உத்தரவாதப்படுத்த நடவடிக்கை எடுக்க ஒன்றிய அரசு தயாராக இல்லை. பொருளாதாரத்தை உயிர்ப்பிக்க உதவிட மக்களிடையே பணப் புழக்கத்தை உருவாக்க, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணமாக தேவையான ரொக்கப்பணம் கொடுக்கவும் கூட அரசு மறுத்துவிட்டது. பெரும்பாலான மக்களிடம் வாங்கும் சக்தி அறவே அற்ற நிலையில், ஏறுகின்ற விலைவாசி, பெட்ரோலியப் பொருட்களின் தினசரி விலை உயர்வு இவற்றால் நாட்டின் பொருளாதாரமே ஸ்தம்பித்து நிற்கிறது.

கடுமையான ஏற்றத்தாழ்வு

ஒருபுறம் பெரும்பாலான மக்கள் நிலை இப்படிச் சீரழிந்து கொண்டிருக்க, அரசின் கார்பரேட் ஆதரவு கொள்கைகளின் உதவியால் பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை இந்த பெருந் தொற்றுக் காலத்திலும் கூட பன்மடங்கு பெருக்கியுள்ளன. நமது நாட்டில் உள்ள 1 சதவீதப் பெரும் பணக்காரர்கள் தங்கள் வருமானத்தை 35 சதவீதம் உயர்த்திக் கொண்டுள்ளனர். ஆனால், 2021 உலகப் பட்டினிக் குறியீட்டில் கீழே இருந்து ஆறாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

தொழிலாளர் விரோதக் கொள்கைகள்

ஓடாய்த் தேய்ந்து வரும் உழைக்கும் வர்க்கத்தை ஒட்டச் சுரண்ட, கார்பரேட் கூட்டுக் களவாணிகளின் வருவாயும் சொத்தும் சங்கடமின்றிப் பெருக ஒன்றிய பாஜக அரசு பல தொழிலாளர் விரோத நடவடிக்கைகளைச் செயலாற்றி வருகிறது. தொழிலாளர் நலச் சட்டம் என்ற பெயரில் வேலை செய்வதற்கான உரிமை, குறைந்த பட்ச வாழ்க்கை ஊதியம் பெறுவதற்கான  உரிமை, தரமான சுகாதாரப் பாதுகாப்பு  மற்றும் நியாயமான அரசமைப்புச்சட்ட உரிமைகளை மறுக்கிறது. பொருளாதாரத்தின் அச்சாணியாக இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனங்களை கார்பரேட் கூட்டுக் களவாணிகளுக்குத் தாரை வார்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. மக்களைக் காப்பதற்கு நடவடிக்கை எடுக்காத ஒன்றிய பாஜக அரசு, மக்களைப் பிளவுபடுத்த மதவெறி நடவடிக்கைகளை முடுக்கி விடுகிறது.

12 அம்சக் கோரிக்கைகள்

மூன்று விவசாய விரோதச் சட்டங்களை வாபஸ் வாங்க வைத்த மகத்தான ஒன்றுபட்ட விவசாயிகள் தொழிலாளர் போராட்டப் பின்னணியில், மக்கள் விரோத, தொழிலாளர் விரோத நாசகரக் கொள்கைகளை எதிர்த்து…

1. லேபர் கோடுகள், EDSA (Essential Defence Services Act)வை ரத்து செய்

2. விவசாயிகளின் ஆறு கோரிக்கைகளை நிறைவேற்று

3. தேசிய பணமாக்கல் திட்டம் மற்றும் தனியார் மயத்தை நிறுத்து

4. அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு, மற்றும் மற்ற திட்ட ஊழியர்களுக்கு குறைந்தபட்ச காலமுறை ஊதியம் வழங்கு

5. முறைசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கு

6. வரி செலுத்தா ஏழைகளுக்கு மாதந்தோறும் 7500 ரூபாய் ரொக்கம், உணவு வழங்கு

7. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் ஒதுக்கீட்டை அதிகரி, அதை நகர்ப்புறங்களிலும் செயலாக்கு

8. பெருந்தொற்று முன்னணிப் பணியாளருக்கு பாதுகாப்பு சாதனங்களையும், காப்பீட்டையும் வழங்கு

9. பணக்காரர்களிடம் சொத்து வரி முதலியன வசூலித்து வேளாண்மை, கல்வி, சுகாதாரம் மற்றும் முக்கியமான பொதுப் பணிகளில் பொது முதலீட்டை அதிகரித்து பொருளாதாரத்தை மேம்படுத்து

10. பெட்ரோலியப் பொருட்களின் கலால் வரியை குறை, விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடு

11. ஒப்பந்த ஊழியர், திட்ட ஊழியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கு

12. புதிய ஓய்வூதியத் திட்டத்தைக் கைவிட்டு பழைய திட்டத்தை குறைந்த பட்ச ஓய்வூதியத்துடன் வழங்கு

ஆகிய நியாயமான பனிரெண்டு அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி வருகின்ற  நாடாளுமன்ற பட்ஜெட் அமர்வின் போது – 2022 பிப்ரவரி 23-24 தேதிகளில் இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தத்திற்கு சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, எச்எம்எஸ், எல்பிஎப், ஏஐயுடியு, டியுசிசி, சேவா, ஏஐசிசிடியு, யுடியுசி ஆகிய 10 மத்திய தொழிற்சங்கங்களும், 70க்கும் மேற்பட்ட அகில இந்திய சம்மேளனங்களும் அறைகூவல் விடுத்துள்ளன.

க்களை, தேசத்தைப் பாதுகாப்போம்

வேலை நிறுத்தக் கோரிக்கைகள் அனைத்தும் நியாமான, மக்கள் நலம், தொழிலாளர் நலம், தேச நலம் காக்க எழுப்பட்டிருக்கும் கோரிக்கைகள். 23-24 பிப்ரவரி 2022 அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம், மக்களைக் காப்போம், தேசத்தைக் காப்போம்.

One comment

  1. தேசம் காக்கும் வேலை நிறுத்தம் வெற்றிபெறச்செய்வோம்

Comment here...