சென்ற ஆண்டில் அரசு வங்கிகளின் லாபம் ரூ.1.97 லட்சம் கோடி

தனியார்மயமாக்களுக்கு எதிரான கருத்தரங்கு

கட்டுரையாளர்: இம்ரான்

நவீன இந்தியாவை செதுக்கிய, பல சமூக அநீதிகளைக் களைந்து சமத்துவ சமூக கட்டமைப்பில் மிகப்பெரும் பங்காற்றிக் கொண்டிருக்கும் நம் பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்கும் ஒன்றிய அரசின் முடிவினை எதிர்த்து வங்கி, காப்பீடு, மின்துறை, பாதுகாப்புத் துறை, நிலக்கரி சுரங்க ஊழியர்கள் சங்கம் என்று பல துறைகளிலும் உள்ள சங்கங்கள் இணைந்து கடந்த ஜூலை 4ஆம் தேதி உருவாக்கிய ஒருங்கிணைந்த இயக்கமே ALL INDIA FORUM AGAINST PRIVATISATION (AIFAP). அதன் உருவாக்கத்திற்குப் பிறகு தேசத்தின் இன்னும் பல முனைகளிலிருந்தும் சங்கங்கள் அதில் இணைந்த வண்ணம் உள்ளன என்பது நாம் காண விரும்பும் இந்திய உழைக்கும் வர்க்க ஒற்றுமையின் தொடக்கப் புள்ளி.

வங்கித்துறையின் வெற்றிகரமான இரண்டு நாள் வேலைநிறுத்தத்திற்குப் பிறகு AIFAPயின் இணைய வழி கூட்டம் கடந்த டிசம்பர் 19-ஞாயிறு- அன்று நடைபெற்றது. கூட்டம் தொடங்கியது முதல் இறுதிவரை எப்போதும் 500 பங்கேற்பாளர்களுக்கு குறையாமல் தொடர்ந்து நடைபெற்ற அக்கூட்டத்தில் உரையாற்றிய முக்கிய தலைவர்களின் உரையின் சுருக்கம்:

தோழர் வெங்கடாச்சலம்- பொதுச் செயலாளர், AIBEA:

சுதந்திரத்திற்கு முந்தைய காலத்திலேயே இரண்டாயிரத்துக்கும் அதிகமான திவாலான தனியார் வங்கிகளைக் கண்ட இந்தியா 1969ல் வங்கிகள் தேசியமயத்திற்குப் பிறகு அது குறைந்துள்ளது.  நட்டமடைந்த தனியார் வங்கிகளை தன்னுடன் இணைத்துக் கொண்டு பொதுமக்களின் சேமிப்புகளை பாதுகாத்து வந்துள்ளன பொதுத்துறை வங்கிகள். பொதுத்துறை வங்கிகள் நட்டத்தில் இயங்குவதாக தொடர்ந்து கூறப்படும் கூற்றில் உண்மையில்லை. 2021ஆம் நிதியாண்டில் மட்டும் இந்திய பொதுத்துறை வங்கிகளின் operating profit எனப்படும் செயல்பாட்டு லாபம் 1.97 லட்சம் கோடி. ஆனால் பெரும் கார்ப்பரேட் முதலாளிகளின் வாராக் கடன்களுக்கு ஒதுக்கியது போக வங்கிகள் பதிவு செய்த நிகர லாபமோ முப்பத்தி ரெண்டாயிரம் கோடிகள் மட்டுமே. வங்கிகளை தனியார் மயமாக்கதை விடுத்து கார்ப்பரேட்களின் வராக்கடன்களை வசூலிப்பதிலே அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும்.

தோழர் அமானுல்லா கான்- முன்னாள் தலைவர், AIIEA:

2008ஆம் ஆண்டு ஏற்பட்ட உலக மந்தநிலைக்குப் பிறகும் சரி, சமீபத்திய கொரோனா பொருளாதார நெருக்கடிகளுக்குப் பிறகும் சரி உலகின் பல்வேறு நாடுகள் தனியார்மயம், தாராளமயம் இவற்றிலிருந்து விலகி பொதுத்துறைகளின் முக்கியத்துவத்தை உணர்ந்து அதை நோக்கி நடைபோட்டுக் கொண்டிருக்கிற நேரத்தில் இந்தியாவில் மட்டும் தலைகீழான முயற்சிகள் நடந்து கொண்டிருக்கிறன. இந்தியாவில் பெரும்பான்மையான இளைஞர்கள் உலகமய காலத்திற்குப் பிறகு பிறந்தவர்களே. பொதுத்துறைகள் தேச கட்டுமானத்தில் எவ்வளவு பங்காற்றியது என்பதை நாம் அவர்களிடம் பரப்புரை செய்ய வேண்டும். வெறும் ஐந்து கோடி ரூபாய் அரசின் முதலீட்டில் உருவாக்கப்பட்ட LICயின் தற்போதைய மதிப்பு 38லட்சம் கோடிகள். இந்திய கிராமப்புறங்களை பாராமுகத்துடன் அணுகிய தனியார் காப்பீட்டு நிறுவனங்கள், அவை அரசுடமையாக்கப் பட்ட பின்னர் அதன் இருபத்தைந்து சதவிகித வர்த்தகம் இன்று கிராமப்புறங்களில் நடக்கிறது.

தோழர் நந்தகுமார் – தலைவர், BEFI

தனியார் மயத்திற்கு பொதுவாக சொல்லப்படும் காரணம் பொதுத் துறை நிறுவனங்கள் நட்டமடைகின்றன என்பதே. ஏர் இந்தியா தனியார் மயமாக்கலுக்கு அதன் இழப்புகள் காரணமெனில் ஒரு நாளைக்கு 17கோடிகளை லாபமீட்டும் BPCLன் தனியார் மயமாக்கலுக்கு என்ன காரணம்? இந்திய அரசமைப்பில் உள்ள மிக முக்கிய அங்கம் சமூக நீதி. பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு விற்ற பின் இட ஒதுக்கீடு பின்பற்றப்படுமா? சமூகநீதி காக்கப்படுமா? விவசாயிகளின் போராட்டம் வெற்றிபெற முக்கியக் காரணம் அது மக்கள் போராட்டமாக பரிணமித்ததே. நமது வேலை நிறுத்தங்களும், போராட்டங்களும் மக்கள் ஆதரவைப் பெற்று மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும்.

தோழர் சௌமியா தத்தா- பொதுச் செயலாளர், AIBOC:

மக்களால், மக்களுக்காக, மக்களே நடத்தும் போராட்டமாக நம் போராட்டத்தை மாற்ற வேண்டும். மக்கள் பங்கேற்காத போராட்டம் வெல்ல முடியாது. தனியார்மயம் அமலானால் அரசியலமைப்புச் சட்டம் நமக்கு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான சமூகநீதி பறிபோகும் என்பதை சொல்ல வேண்டும். தனியார்மயம் என்பது இந்த அரசாங்கத்தின் நீண்ட கால திட்டம். 1969ல் வங்கிகளின் தேசியமயத்தை அனைவரும் கொண்டாடியபோது அப்போதைய ஜனசங்கமாக எதிர்த்தவர்கள் தான் இன்று ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள். இது அவர்களின் நீண்டகால அரசியல் திட்டம்.

நவம்பர் 14ஆம் தேதி பத்திரிக்கையாளர் சந்திப்பில் நாம் தனியார்மயத்தை ஏன் எதிர்க்கிறோம் என்பதை விளக்கினோம். நிதியமைச்சரை பொது விவாதத்திற்கு அழைத்தோம். இப்போதும் பொது விவாதத்திற்கு தயாராக உள்ளோம். ‘Bank bachao desh bachao’ என்ற பெயரில் facebookகிலும் YouTubeபிலும் பக்கங்கள் உள்ளன. அதை அனைவரும் பின்தொடர்ந்து அதன் செய்திகளை பரவலாக மக்களிடம் கொண்டு செல்லுங்கள்.

விடியலுக்கான சமிக்ஞை

தனியார்மயம் என்ற இந்த நெருக்கடியான காலகட்டத்தில் அனைத்து தொழிலாளி வர்க்கமும் ஒன்றிணைந்து கொண்டிருப்பதும், விவசாய வர்க்கம் அதற்கு ஆதரவாக துணை நிற்கத் தொடங்கியிருப்பதும் ஒரு விடியலுக்கான சமிக்ஞை.

Comment here...