சோதனைகளும் சாதனைகளும் நிறைந்த 2021

கட்டுரையாளர்: ஜேப்பி

2021ம் வருடம் இந்திய மக்களுக்கு பல சோதனைகளும், சாதனைகளும் நிறைந்த ஆண்டாக அமைந்தது.

வருட ஆரம்பத்தில் சற்றே குறைவாகப் பரவிய பெருந்தொற்று கொரோனா, இரண்டாவது அலையில் சுனாமியைப் போல வீறு கொண்டு அதிவேகமாகப் பரவி மிக மோசமான பாதிப்பை ஏற்படுத்தியது. ஒன்றிய பாஜக அரசின் பிற்போக்கான, பாரபட்சமான தடுப்பூசி விலை நிர்ணயிப்பு, இரண்டாவது அலையை எதிர்கொள்ள எந்த தயாரிப்பு நடவடிக்கையும் எடுக்காத அலட்சியம் மாநில அரசுகளை தத்தளிக்க வைத்தன, லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். இயற்கைச் சீற்றங்கள் உலக சுற்றுச் சூழல் சீரழிவு இந்தியாவை அதிக பாதிப்புக்கு உள்ளாக்கி இருப்பது கவலை அளிக்கிறது. கிட்டத்தட்ட ஒவ்வொரு மாதமும் ஏற்பட்ட புயல், கடும் மழை, நிலச்சரிவு, வெள்ளம் என பல மாநிலங்கள் பாதிப்புக்குள்ளாயின. நிறைய பொருட்சேதமும் உயிர்ச் சேதமும் ஏற்பட்டன.

மனித உரிமை மீறல்கள்

காஷ்மீரத்து மக்கள் அன்றாடம் ஒன்றிய அரசின் பாரபட்சமான மனித உரிமை மீறல் தாக்குதல்களைச் சந்தித்து வருகின்றனர். மாணவர்கள், பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், செயற்பாட்டாளர்கள் என பலர் மீதும் பொய் வழக்குகள் போடப்பட்டு கைது செய்யப்பட்டனர். தலித்துகள், ஆதிவாசிகள் மீது பல தாக்குதல். நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரச் சட்டம் மூலம் புகுந்த இராணுவத்தால் அப்பாவிகள் பலர் சுட்டுக் கொல்லப் பட்டனர். ஸ்டேன் சாமி மரணம் உட்பட பல லாக்கப் மரணங்கள் நிகழ்ந்தன. மனித உரிமை மீறல்களில் உபி முதல் மாநிலம்..

பெண்ணுரிமை

அரசியல், தொழில்நுட்பம் மற்றும் தலைமைப் பாத்திரங்களில் பெண்களின் போதிய பிரதிநிதித்துவம் இல்லாமை, பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைவு, மோசமான சுகாதாரம், பின்தங்கிய பெண் கல்வியறிவு விகிதம், வருமானம் மற்றும் சொத்து சமத்துவமின்மை ஆகியவற்றால் இந்தியாவில் பாலின இடைவெளி 62.5% ஆக விரிவடைந்துள்ளது. வலதுசாரி பிற்போக்குக் கருத்துக்களை பரப்பி பெண் உரிமை, சமத்துவத்தின் மீது திட்டமிட்ட தாக்குதல் தொடுக்கப்படுகிறது.

வளரும் அசமத்துவம்

இந்தியா உலகிலேயே கீழிருந்து ஆறாவது மிகவும் சமத்துவமற்ற நாடாக மாறி நிற்கிறது. பணக்கார மேல் வர்க்க 1 சதம் பேருக்கு மொத்த தேசிய வருமானத்தில் 22 சதம் செல்கிறது. கீழ் அடுக்கில் உள்ள 50% மக்கள் மொத்த தேசிய வருமானத்தில் வெறும் 13% வருமானம் மட்டுமே பெறுகின்றனர். இதே போல சொத்து மதிப்பில் பணக்கார மேல் தட்டு 1 சதவீதத்தினரிடம் 33% சொத்தும், கீழ் பாதி 50% மக்களிடம் வெறும் 6% சொத்தும் இருக்கிறது.

வேலையின்மை விலைவாசி உயர்வு

ஆளும் ஒன்றிய அரசின் மோசமான பொருளாதார, வரிக்கொள்கைகளினால் வேலையில்லாத் திண்டாட்டமும் விலைவாசி உயர்வும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அதிகரித்து கோடிக்கணக்கான ஏழை மக்கள் துன்பத்தில் உழல்கிறார்கள்.

தேச சொத்துக்கள் மொத்த விற்பனை

75 ஆண்டுகள் மக்கள் சேமிப்பில், உழைப்பில் உருவான தேச சொத்துக்கள் அனைத்தையும் ஒவ்வொன்றாக கூட்டுக்களவாணிகளுக்குப் பங்கிட பணமாக்கல் திட்டத்தை அமல் படுத்துவதில் ஒன்றிய பாஜக அரசு மிகத்தீவிரமாக இயங்கி வருகிறது. ஏர் இந்தியா டாடாவிற்கு விற்கப்பட்டது.

வீரஞ் செறிந்த போராட்டங்கள்

வங்கி ஊழியர்கள் மார்ச்சில் 2 நாள்,  டிசம்பரில் 2 நாள் மகத்தான வேலைநிறுத்தம் செய்து தனியார்மய மசோதாவை ஒத்தி வைப்பதில் வெற்றி கண்டுள்ளனர். மார்ச்சில் எல்ஐசி ஊழியர்கள் ஒரு நாளும், பொது இன்சூரன்ஸ் ஊழியர்கள். மார்ச் மாதம் ஒரு நாளும், ஆகஸ்ட் மாதம் ஒரு நாளும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பாதுகாப்புத் துறை ஊழியர்கள் போராட்டம் காரணமாக ராணுவத் தளவாட உற்பத்தி நிறுவனங்கள் இன்றளவும் அரசுத் துறையில் தொடர்கின்றன. மகாராஷ்டிரா சாலைப்போக்குவரத்து ஊழியர்கள் 40 நாட்களுக்கும் மேலாகத் தொடர் வேலை நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர். அமைப்புசாரா கட்டுமானத் தொழிலாளர்களின் வரலாறு காணாத 2 நாள் வேலை நிறுத்தம் டிசம்பரில் நடைபெற்றது.

உலகிற்கே வழிகாட்டிய விவசாயிகள்

நாட்டின் தலை நகர் டெல்லியின் எல்லையில்  378 நாட்கள் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டம் வெயில், மழை, குளிர், அடக்குமுறை, அவதூறு அனைத்தையும் ஒற்றுமையுடன் எதிர்கொண்டு மக்கள் விரோத விவசாய விரோத மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற வைத்தது. இந்த வெற்றி போராடும் இந்திய தொழிலாளி வர்க்கத்திற்கு மட்டுமல்ல உலகிற்கே ஒரு முன் உதாரணமாக வழிகாட்டியாக விடிவெள்ளியாக அமைந்துள்ளது.

இந்த செவ்வெளிச்சத்தில் 2022ஐ தீரமுடன் எதிர் கொள்வோம். 2022 பிப்ரவரி 23-24 வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச்செய்வோம்.

Comment here...