கட்டுரையாளர்: டி.ரவிக்குமார்
இரண்டு பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்குகிறோம் என்ற ஒன்றிய அரசின் பட்ஜெட் கூட்டத் தொடரின் அறிவிப்பைத் தொடர்ந்து, பாராளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் சட்டத் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டிருந்தது. தாக்கல் செய்யவிருந்த 26 மசோதாக்களில் ”வங்கிச் சட்டங்கள் (திருத்த) மசோதா 2021” என்பதும் ஒன்று. அம்மசோதாவை உடனடியாக கை விட வேண்டும் என்று வலியுறுத்தி நாடெங்கிலும் உள்ள 10 லட்சம் வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் டிசம்பர் 16, 17 தேதிகளில் 2 நாட்கள் வேலைநிறுத்தம் செய்தனர்.
வங்கித்துறையின் நடவடிக்கைகள் இந்த வேலைநிறுத்தத்தால் முழுமையாக முடங்கியது. இரண்டு நாட்களும் பல்லாயிரக்கணக்கான வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் நாடு முழுக்க பெருந்திரளான ஆர்ப்பாட்டங்களை நடத்தி தங்கள் கோபாவேசத்தை வெளிப்படுத்தினர். பல்வேறு சகோதர தொழிற்சங்கங்களும், 500க்கும் மேற்பட்ட விவசாய சங்கங்களும் இந்தப் போராட்டத்திற்கு தங்களின் முழு ஆதரவை நல்கின.
டிசம்பர் 23ம் தேதி முடிவதாக இருந்த பாராளுமன்ற குளிர் கால கூட்டத்தொடர், திட்டமிட்டதற்கு ஒரு நாள் முன்னதாக டிசம்பர் 22ம் தேதியே முடிவுற்ற நிலையில் இந்த சட்டத்திருத்த மசோதா பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. இது வங்கி ஊழியர் – அதிகாரிகளின் ஒன்றுபட்ட போராட்டத்திற்கு கிடைத்த மகத்தான வெற்றியாகும். இது இந்திய தொழிற்சங்க இயக்கத்திற்கும். விவசாய இயக்கத்திற்கும், ஜனநாயக சக்திகளுக்கும் கிடைத்த மகத்தான வெற்றியாகும்.
ஆனாலும் ஒன்றிய அரசு, பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்கும் முயற்சியை முற்றிலுமாக கைவிடவில்லை. அரசு வங்கிகளை தனியார்மயமாக்கும் அபாயம் தொடர்கிறது. எனவே வங்கி ஊழியர்களும், அதிகாரிகளும் இனி வரும் காலத்தில் மிகவும் விழிப்புணர்வோடு செயல்பட வேண்டும். பொது மக்களையும், வாடிக்கையாளர்களையும், அரசு வங்கிகளின் எதிர்காலப் பயனாளிகளையும் ஒன்று திரட்டி போராட அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
ஒன்றிய அரசு மீண்டும் இத்தகைய முயற்சியில் இறங்குமானால் அதற்கு எதிராக மிகக் குறைந்த கால அவகாசத்தில் வேலை நிறுத்தம் உள்ளிட்ட பல கட்ட போராட்டத்திற்கு தயாராகுமாறு வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது. வங்கி தனியார்மய மசோதாவை முறியடிக்கவும், அரசு வங்கிகளை வலுப்பெற செய்யவும் தொடர்ந்து போராடுவோம்.