போராட்டங்கள் எப்போதுமே வீணாவதில்லை

கட்டுரையாளர்: க.சுவாமிநாதன்

2021 டிசம்பர் 16, 17 – இரண்டு நாள் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம் நாடு முழுக்க மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. பெண்கள், இளைஞர்கள் இவ்வேலை நிறுத்தத்தில் உணர்ச்சி பூர்வமாக பங்கேற்றுள்ளார்கள். பொதுவாகவே வங்கி ஊழியர் எண்ணிக்கை, அத்தொழிலின் கேந்திரத்தன்மை அழுத்தமான தாக்கத்தை உருவாக்க கூடியவை என்றாலும் இ்வ்வேலை நிறுத்தத்தின் வீச்சு ஒப்பீட்டளவில் மிக மிக அதிகம்.

போராட்டங்கள் எப்போதுமே வீணாவதில்லை. இப்போது கொண்டு வரப்படும் வங்கி தனியார்மய மசோதா புதிதுமல்ல. 2000ஆம் ஆண்டு அன்றிருந்த வாஜ்பாய் அரசாங்கம் வங்கிகளில் உள்ள அரசின் பங்குகளை 33% வரை குறைப்பதற்கான மசோதாவை கொண்டு வந்தது. ஆனால் வங்கி ஊழியர்களின் கடும் எதிர்ப்பால் அது கைவிடப்பட்டது. ஆனால் சி.ஐ.ஐ போன்ற முதலாளிகளின் அமைப்புகள் அரசின் பங்கை 51 % க்கு கீழே குறைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வந்துள்ளது. 2017, 2018 ஆண்டுகளில் இந்த சப்தம் கூடியது. இன்று மீண்டும் மசோதா வடிவில் வர முயற்சிக்கிறது.

இன்னொரு உதாரணம், 2017 இல் கொண்டு வரப்பட்ட நிதி தீர்வு மற்றும் வைப்பு காப்பீடு மசோதா (FRDI Bill). அதில் இருந்த பெயில்-இன் பிரிவு (Bail-in clause) என்ன கூறியது?  வங்கிகள் திவாலானால் இப்போது இருப்பது போல அரசு கை கொடுத்தோ, வேறு வங்கிகள் தோள் கொடுத்தோ காப்பாற்றாது என்பதையும் கடந்து டெபாசிட் தொகைகளை வைத்து நெருக்கடிகள் எதிர் கொள்ளப்படும் என்பதே.

அதாவது வங்கிகளின் நஷ்டத்தை வாடிக்கையாளர்களின் வைப்பை வைத்து ஈடு கட்டி, மிச்சமுள்ள தொகை மட்டுமே அவர்களுக்கு கொடுக்கப்படும் என்பது தான் இதன் பொருள். பெயில்-அவுட் என்பதற்கு மாறாக பெயில்-இன் என்பதன் அர்த்தம் இதுதான். மக்களிடம் பெரிய பீதி ஏற்பட்டது. ஆனால் வங்கி ஊழியர்களின் பிரச்சாரம், போராட்டம் அந்த மசோதாவை 2018 இல் திரும்பப் பெறுவதில் முடிந்தது.

ஆகவே இன்று வங்கி ஊழியர்கள் போராடுவது ஏற்கெனவே அவர்கள் காப்பாற்றியதை தக்க வைப்பதற்குதான். வெல்ல முடியுமா என்று பூவா தலையா போட்டு போராட்டங்கள் அறிவிக்கப்படுவதில்லை. மாறாக எதிர்க்கப்பட வேண்டியவையா இல்லையா என்பதே கேள்வி. மக்கள் கருத்து திரளும் போது அரசின் கொள்கைகளை எதிர்த்த போராட்டங்கள் வெற்றி பெறுகின்றன.

அண்மைய விவசாயிகள் போராட்டத்தை விட சிறந்த உதாரணம் உண்டா? நாடாளுமன்றம் நிறைவேற்றிய 3 சட்டங்கள் திரும்பப் பெறப்பட்ட புதிய வரலாறு படைக்கப்பட்டிருக்கிறதே.

Comment here...