SBSU மாநாடு – வங்கி ஊழியர்களின் போராட்டம் மாபெரும் வெற்றி

கட்டுரையாளர்:ஆதிரன்

தமிழர்களின் பறை இசையுடனும், SBSU ஜிந்தாபாத் AISBISF ஜிந்தாபாத் முழக்கங்கங்களுடன் சுமார் 2000 உறுப்பினர்கள் குழுமியிருக்க சென்னை அண்ணா அறிவாலயம் அரங்கம் அதிர கடந்த டிசம்பர் 19-20 தேதிகளில் தொடங்கியது SBSU சென்னை வட்டார 38 வது பொதுக்குழு கூட்டம். இத்துடன் அகில இந்திய சம்மேளனம் மற்றும் எஸ்பிஎஸ்யு-சென்னை வட்டாரத்தின் 75 ஆம் ஆண்டு பவள விழாவும் ஒருங்கிணைந்து கொண்டாடப்பட்டது.  இதில்  நாட்டின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் சங்கத்தலைவர்களும், தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலிருந்தும் முன்னணித் தோழர்களும் வந்திருந்தனர்.

NCBE தலைவர் தோழர் எஸ் சி பாலாஜி இந்நிகழ்வின் முக்கியத்துவத்தைப் பற்றியும், தொழிற்சங்கத்தின் வெற்றிப்போராட்ட வரலாறுகளைப் பற்றியும், நாம் எதிர்கொண்டுள்ள சவால்களை பற்றியும் உரை நிகழ்த்தினார். 75 ஆண்டு கால தொழிற்சங்க வரலாற்றைப் பற்றிய காணொளி அகில இந்திய சம்மேளன பொதுச் செயலாளர் தோழர் சஞ்சீவ்குமார் பந்த்லீஷ் அவர்களால் தொடங்கி வைக்கப்பட்டது. பவள விழாவைப்பற்றிய சிறப்பு காணொளி அகில இந்திய சம்மேளனத் தலைவர் தோழர் அருண் பகோலிவால் அவர்களால் தொடங்கிவைக்கப்பட்டது.

அகில இந்திய சம்மேளனத் தலைவர் தோழர் அருண் பகோலிவால் துவக்க உரை நிகழ்த்தினார். தமிழக அரசின் திட்டக் கமிஷன் துணைத் தலைவர் திரு. ஜெ. ஜெயரன்ஜன் தனது சிறப்புரையில் இந்தியாவில் பொருளாதார ரீதியாக உள்ள ஏற்ற தாழ்வான நிலையை சுட்டிக் காட்டினார். அணி திரட்டப்பட்டாத 90% தொழிலாளர்களின் நலன் பேணுவதில், வங்கி ஊழியர்கள் போன்ற திரட்டப்பட்ட தொழிற்சங்கங்களுக்கு முக்கிய பொறுப்புள்ளது என்று கூறினார். சென்னை வட்டார தலைமை பொது மேலாளர் திரு. ஆர். ராதாகிருஷ்ணா சிறப்புரை ஆற்றினார். ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சென்னை வட்டார பொதுச் செயலாளர் ஆர். பாலாஜி, ஸ்டேட் வங்கி ஸ்டாப் யூனியன் முன்னாள் பொதுச் செயலாளர் டி. வேணுகோபால் ரெட்டி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

வங்கி சங்கங்களின் கூட்டமைப்பு தலைவர்கள் தோழர்கள் சி.ஹெச்.வெங்கடாசலம் (AIBEA), முரளி செளந்தர்ராஜன், ஆர்.சேகரன்(AIBOC), கே.கிருட்டிணன், சி.பி.கிருஷ்ணன், என்.ராஜகோபால், ரமேஷ்குமார் (BEFI) ஆகியோர் மேடையில் கெளரவிக்கப்பட்டனர்.

யுஎப்பியு அகில இந்திய அமைப்பாளர் தோழர் சஞ்சீவ்குமார் பந்த்லீஷ் அவர்கள் தனது சிறப்புரையில்” UBFU அறை கூவலுக்கிணங்க டிசம்பர் 16,17 தேதிகளில் நடைபெற்ற வேலை நிறுத்த போராட்டத்தின் விளைவாக வங்கிகளை தனியார் மயமாக்கும் மசோதா இந்த நாடாளுமன்றக் கூட்டத்தில் கொண்டு வரப்படாது என்று செய்திகள் வருகின்றன. இது வங்கி ஊழியர்கள்-அதிகாரிகளின் ஒன்றிணைந்த போராட்டத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி. இருப்பினும் நாம் தொடர்ந்து போராட தயாராக இருக்க வேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

ஸ்டேட் வங்கி ஓய்வூதியர்கள் சங்க பொதுச்செயலாளர் தோழர் தாமஸ் ப்ராங்கோ அவர்கள் பேசுகையில் தனியார்மயமாக்கல் கொள்கையின் பாதகங்களை எடுத்துரைத்தார். ஊரகப்பகுதியில் செயல்படும் கிளைகள் மூடப்படும் அபாயங்களை தரவுகளுடன் மேற்கோளிட்டு, பொதுத்துறை வங்கிகளை வலுப்படுத்த நாம் தொடர்ந்து குரலெழுப்ப வேண்டும் என்றார்.

விழாவின் முக்கிய நிகழ்வாக மூத்த தலைவர் மறைந்த தோழர் V.கணேசன் அவர்களால் எழுதப்பட்ட “Momentous movement” என்ற ஆங்கிலப் புத்தகத்தின் இரண்டாவது பதிப்பும், முன்னாள் வட்டாரத்தலைவர் தோழர் குணசேகரன் அவர்களால் எழுதப்பட்ட தொழிற்சங்க வரலாறு பற்றிய புத்தகத்தின் முதல் பதிப்பும் வெளியிடப்பட்டன. தோழர் டி.வி.சந்திரசேகரன் அவர்கள் எழுதிய “நினைவில் நின்றவை” என்ற புத்தகத்தின் இரண்டாவது பதிப்பு கூடிய விரைவில் வெளியிடப்படும் என்று வட்டாரப் பொதுச்செயலாளர் தோழர் ஜி.கிருபாகரன் அவர்கள் அறிவித்தார்.

இரண்டாம் நாள் நிகழ்வில் பிரதிநிதிகள் பங்கு பெற்ற விவாதம் சிறப்பாக நடைபெற்றது. மாநாட்டில், விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும், எழுத்தர்களின் காலிப் பணியிடங்களை நிரப்புதல், ஐந்து நாட்கள் வாரம், வங்கித் தனியார்மயமாக்கல் எதிர்ப்பு, பெண்களுக்கு தங்கும் வசதி உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

நிறைவாக சென்னை வட்டார தலைவராக தோழர் ஜி.ஜானகிராமன் அவர்களும், பொதுச்செயலாளராக தோழர் G. கிருபாகரன் அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Comment here...