தமிழ்நாடு வங்கியை உருவாக்கிடுக

கூட்டுறவு வங்கி ஊழியர்கள் தர்ணா

கட்டுரையாளர்: இ.விவேகானந்தன்

தமிழகத்தில் தற்போதுள்ள மூன்றடுக்கு முறையை கைவிட்டு கேரள வங்கி போல் இரண்டடுக்காக மாற்றி தமிழக வங்கியை உருவாக்கிடுக என்ற பிரதான கோரிக்கையை முன் வைத்து மாநிலம் முழுவதுமிருந்து 200க்கும் மேற்பட்ட கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 20.12.2021 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் காலை முதல் மாலை வரை தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாடு உடன் இணைந்த கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்-தமிழ்நாடு  இதற்கான அறைகூவலை விடுத்திருந்தது.

தர்ணா போராட்டத்திற்கு சம்மேளனத்தின் தலைவர் டி. தமிழரசு  தலைமை வகித்தார்.  தனது தலைமையுரையில், கூட்டுறவு வங்கிகள் ஏழை விவசாயிகள், கிராமப்புற மக்களின் மேம்பாட்டிற்காக அளப்பரிய சேவை ஆற்றுவதை எடுத்துரைத்தார். ”கேரளாவைப் போல் மாநில கூட்டுறவு வங்கியையும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கிகளையும் இணைத்து தமிழ்நாடு வங்கி உருவாக்கப்படவேண்டும், நகர வங்கிகளை மாவட்ட அளவில் இணைத்து பலப்படுத்திட வேண்டும்” என்று தனது உரையில் தெரிவித்தார். கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு குறைந்தபட்சம் பென்சன் ரூ.10000/− வழங்கிட தமிழக அரசை வலியுறுத்தினார்.

இந்திய தொழிற்சங்க மையம் -தமிழ்நாடு தலைவர் தோழர். அ.சவுந்தரராசன் தர்ணா போராட்டத்தை துவக்கி வைத்து பேசும் போது கூட்டுறவு சங்கங்கள் மற்றும் வங்கிகள் விவசாயிகளின் உயிர் நாடி என்றும் , கூட்டுறவு வங்கிகளை தனியார் மயமாக்கவும், அழிக்கவும் ஒன்றிய அரசு செயல்படுகிறது என்றும், தொழிலாளர் விரோத ஒன்றிய அரசுக்கு எதிராக வரும்  23, 24  பிப்ரவரி 2022 ல்  நடைபெறவுள்ள அகில இந்திய வேலை நிறுத்தத்தை வெற்றியாக்கிட வேண்டும் என்றும் அறைகூவல் விடுத்தார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் தமிழ்நாடு பொதுச் செயலாளர் தோழர். என். ராஜகோபால்  ஒரு வருட காலம் நடைபெற்ற விவசாயிகளின் போராட்டத்தை எடுத்துரைத்து  கூட்டுறவு வங்கி ஊழியர்கள் உட்பட அனைத்து வங்கி ஊழியர்களும் நீண்ட நெடிய போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்று தனது வாழ்த்துரையில் தெரிவித்தார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகிய இந்திய செயலாளர் தோழர்.கே.கிருட்டிணன், தனது வாழ்த்துரையில்  பொதுத்துறை வங்கிகள் தனியாருக்கு விற்கப்படுவதை எதிர்த்து  வங்கி ஊழியர்கள்  டிசம்பர் 16,17 தேதிகளில் நடத்திய    வீரஞ் செறிந்த இரண்டு நாள் வேலை நிறுத்த போராட்டத்தை மேற்கோள் காட்டி, அது போல ஒன்றிய அரசின் தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிராக பரந்துபட்ட போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினார்.

இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் அகிய இந்திய இணைச் செயலாளர் தோழர் சி.பி.கிருஷ்ணன் தனது வாழ்த்துரையில், கூட்டுறவு வங்கிகளை மாநில அரசின் கட்டுப்பாட்டிலிருந்து ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிற்கு எடுத்துச் செல்ல சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளதையும், நகர கூட்டுறவு வங்கிகளை சிறு வணிக வங்கிகளாக மாற்ற முயற்சிப்பதையும் கண்டித்தார். இத்தகைய முயற்சிகளை போராட்டத்தின் மூலம் முறியடிக்க வேண்டும் என்று கூறினார். 

சம்மேனத்தின் பொதுச் செயலாளர் தோழர் இ.சர்வேசன் சங்கத் தோழர்கள் ஆற்றிட வேண்டிய கடமைகளையும், சங்கத்தை பலப்படுத்திட வேண்டியதன் அவசியத்தையும் எடுத்துரைத்தார். சம்மேளனத்தின் இணைச் செயலாளர் தோழர் இ.விவேகானந்தன் அனைவருக்கும் நன்றி தெரிவித்தார்.

One comment

  1. மிக சிறப்பான கட்டுரை. கூட்டுறவு வங்கிகளை பலப்படுத்துவதற்கு தொழிலாளர் வர்க்கம் எந்த எல்லைக்கும் செல்லும் என்பது தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது வாழ்த்துக்கள்.

Comment here...