கட்டுரையாளர்: ஜி.பி.சிவானந்தம்
தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான சிலி நாட்டில் டிசம்பர் மாதம் 19ஆம் தேதி நடைபெற்ற அதிபர் தேர்தலில் 35 வயதான கேப்ரியல் போரிக் எனும் இடதுசாரி தலைவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 56% வாக்குகளை பெற்று எதிர்த்து போட்டியிட்ட குடியரசு கட்சியை சேர்ந்த ஜோஸ் அண்டனியோ காஸ்ட் அவர்களை (44% வாக்குகள்) தோற்கடித்துள்ளார்.
இந்தத் தேர்தலில் இடது சாரி கூட்டணி சிலி நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை தேர்தல் பொருளாக முன்னிறுத்தி தேர்தலை சந்தித்தது. கடந்த இரண்டு வருடங்களாக சிலி நாட்டின் பொருளாதார சமத்துவமின்மையை எதிர்த்து நாடு முழுவதும் போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்றன. இந்த மக்கள் போராட்டங்களை தலைமை ஏற்று நடத்தியவர் கேப்ரியல் போரிக் ஆவார்.
1970 முதல் 1973 வரை ஆட்சி புரிந்த சால்வடார் அலண்டே சிலி நாட்டின் முதல் மார்க்சியவாதி. அவரின் சோசியலிச பாதை தங்கள் நாட்டிற்கு எதிரானது என்று அமெரிக்காவால் தூக்கி எறியப்பட்டார். அதற்கு பிறகு 48 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் ஓர் இடதுசாரி அரசாங்கம் சிலி நாட்டில் அமையவிருக்கிறது.
2022 மார்ச் மாதம் பதவி ஏற்கவுள்ள முன்னாள் மாணவ தலைவரான கேப்ரியல் போரிக் தன் நாட்டு இளைஞர்களிடையே மிகப்பெரும் செல்வாக்கு பெற்றவர். சிலி நாட்டின் நம்பிக்கை நட்சத்திரமாக பார்க்கப்படும் இவர், தன் முன் உள்ள பொருளாதார சவால்களை வெற்றிகரமாக எதிர்கொண்டு தான் வாக்களித்தபடி மக்களின் சமூக உரிமைகளை பொறுப்புடன் நிலைநாட்டவும், பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை களையவும், சிலி நாட்டினை சோசலிச பாதையில் கொண்டு செல்லவும் வாழ்த்துவோம்.
அலெண்டே தூக்கி எறியப்படவில்லை! கொல்லப்பட்டாா்!