மருத்துவ காப்பீட்டுத் திட்டத்திலிருந்து ஓய்வூதியர்கள் வெளியேற்றம்

கட்டுரையாளர்: ந.ராஜகோபால்

வங்கி ஊழியர், அதிகாரிகள் மற்றும் ஓய்வூதியர்களுக்கு மருத்துவ காப்பீட்டுத் திட்டம் 2015 மே 25 கையெழுத்தாகிய 10வது இருதரப்பு ஒப்பந்தத்தை ஒட்டி அமலாக்கப்பட்டது. இதற்கு முன்பு நிர்வாகமே மருத்துவ செலவை ஈடுகட்டும் திட்டம் அமுலில் இருந்தது.

இந்திய வங்கிகள் சங்கத்திற்கும் (IBA) வங்கி சங்கங்களின் கூட்டமைப்பிற்கும் (UFBU) இடையே நீண்ட பேச்சுவார்த்தையின் பலனாக இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் அமையப் பெற்றது. இதற்கு முன்பு இருந்த திட்டத்தை காட்டிலும் இந்த திட்டம் பல வகையிலும் முன்னேற்றகரமாய் அமைந்தது. முன்னர், பணியாளர்களை சார்ந்தவர்களுக்கு 75% மருத்துவ செலவு மட்டுமே நிர்வாகத்தால் ஈடு கட்டப்பட்டது. இந்த புதிய திட்டப்படி அவர்களுக்கு 100% செலவும் ஈடுகட்டப்பட்டது. ஊழியர்களைச் சார்ந்தவர்கள் பட்டியல் விஸ்தரிக்கப்பட்டது.

ஆண் ஊழியர்கள் கூட அம்மா, அப்பா, மாமியார், மாமனார் – ஆகிய நால்வரில் இருவரை தங்களைச் சார்ந்தவர்களாக தேர்ந்தெடுக்க திட்டத்தில் வகை செய்யப்பட்டது. சர்க்கரை வியாதி, ஹைபர் டென்ஷன், டைபாய்ட் உள்ளிட்ட 59 வகையான வியாதிகளுக்கு மருத்துவமனை உள் நோயாளியாக இல்லாமலேயே (வீட்டு சிகிச்சை) முழு செலவும் ஈடுகட்ட வகை செய்யப்பட்டது.

வங்கியில் பணிபுரிவோரின் காப்பீட்டுச் சந்தா தொகையை வங்கி நிர்வாகம் ஏற்றுக்கொள்ளும். வங்கிப் பணி ஓய்வு பெற்றவர்களுக்கும் இத்திட்டம் அப்படியே விரிவுபடுத்தப்படும் என்றும், இத்திட்டம் ஓய்வு பெற்றவர் மற்றும் அவரின் கணவர்/மனைவி ஆகியோருக்கு மட்டுமே பொருந்தும் என்றும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அதற்கான சந்தாவை ஓய்வு பெற்றவர்கள் தான் செலுத்த வேண்டும்.

ஊழியர்களுக்கு ரூ. 3 லட்சம், அலுவலர்களுக்கு ரூ. 4 லட்சம் வரை மருத்துவ காப்பீடு என்று வரையறுக்கப்பட்டது. இத்திட்டம் முன்னேற்றகரமான திட்டம் என்பதால் பல ஓய்வூதியர்கள் தாங்கள் பல
ஆண்டுகளாக சந்தாதாரர்களாக இருந்த காப்பீட்டு திட்டத்தை எல்லாம் கை விட்டுவிட்டு இந்த ஐபிஏ திட்டத்தில் சேர்ந்தனர்.

முதல் அதிர்ச்சி அவர்களுக்கு ”வீட்டு சிகிச்சை” திட்டம் விஸ்தரிக்கப்படவில்லை. பின்னர் கடும் முயற்சிக்கு பிறகு அத்திட்டம் ஓய்வூதியர்களுக்கும் விரிவாக்கப்பட்டது. ஆனால் அதற்கான ஈடுகட்டும் தொகை மொத்தத் தொகையில் 10% மட்டுமே என்று தீர்மானிக்கப்பட்டது. உதாரணமாக ஊழியர்களுக்கு மொத்த ஈடுகட்டும் தொகையான ரூ. 3 லட்சத்தில், ரூ.30000 மட்டுமே, அதிகாரிகளுக்கு ரூ.4 லட்சத்தில் ரூ.40000 மட்டுமே வீட்டு சிகிச்சைக்காக வழங்கப்படும்.

ஆனால் அதற்கு அவர்கள் 2021-22 ஆம் ஆண்டு கூடுதலாக செலுத்த வேண்டிய சந்தா தொகை முறையே ரூ.31723/- மற்றும் ரூ.42793/- ஆகும். கிடைக்கும் பலன் தொகையை விட கூடுதலாக சந்தா செலுத்த வேண்டும் என்பது ஓய்வூதியர்களை கேலி செய்வது போல உள்ளது.

நான்காண்டுகளாக இந்த நிலமை தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. சந்தா தொகையில் செங்குத்தான உயர்வு 2015-16ல் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ரூ.5670ஆக இருந்த காப்பீட்டுச் சந்தா 2021-22ல் ரூ.33384/-ஆக உயர்ந்துள்ளது.

அதேபோல் 2015-16ல் ஓய்வு பெற்ற அதிகாரிகளுக்கு ரூ.7559ஆக இருந்த காப்பீட்டுச் சந்தா 2021-22ல் ரூ.43249/-ஆக உயர்ந்துள்ளது. இவ்விரு பிரிவினருக்கும் காப்பீட்டு தொகையான ரூ.3 லட்சம், ரூ.4 லட்சத்தில் மாற்றம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஆயினும் காப்பீட்டு சந்தா தொகை ஐந்து மடங்கிற்கும் கூடுதலாக கடுமையாக உயர்ந்துள்ளது. 11ஆவது இருதரப்பு ஒப்பந்தத்திற்கு பிறகு ஓய்வு பெற்றவர்களுக்கே இந்த தொகை ஒரு மாத பென்சன் தொகையை விட கூடுதலாகும்.

இதற்கு முன்னர் ஓய்வு பெற்றவர்களுக்கு இது இரண்டு மாத பென்சன் தொகையாகும். பகுதி நேர துப்புரவாளர்களுக்கு இது நான்கு மாத பென்சனை விட கூடுதலாகும். எனவே பல்லாயிரக் கணக்கான ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் இருந்து தங்களை விடுவித்துக் கொண்டுள்ளார்கள். நல்ல திட்டம் என்று நம்பி வந்த்வரகள் இன்று எந்த காப்பீடு திட்டமும் இல்லாமல் நட்டாற்றில் விடப்பட்டுள்ளனர். இன்று இத்திட்டம் குறித்து பல கேள்விகள் எழுந்தவண்ணம் உள்ளன. ஓய்வூதியர்கள் இத்திட்டத்தில் பல முன்னேற்றங்களை எதிர்பார்க்கின்றனர்.

அவை,

 1. பணியிலிருப்போர் மற்றும் ஓய்வூதியர் அனைவரையும் ஒன்று
  சேர்த்தே சந்தா நிர்ணயிக்கப்பட வேண்டும்.
 2. ஊழியர்களின் மருத்துவ காப்பீடு தொகையை பெற்றுத்தரும்
  பொறுப்பை வங்கி நிர்வாகங்கள் ஏற்க வேண்டும்.
 3. அனைத்து மருத்துவ செலவும் இத்திட்டத்தின் மூலம் முழுமையாக
  கிடைத்திட வழிவகை செய்யப் படவேண்டும்.
 4. ஓய்வூதியர்களின் சந்தா தொகையையும் நிர்வாகமே ஏற்க வேண்டும்.
  இவை அனைத்தும் நிறைவேறும் என்று ஓய்வூதியர்கள் எதிர் நோக்குகிறார்கள்.

Comment here...