அரசியலில்  அ…ஆ… : நூல் அறிமுகம்

இளைய தலைமுறை வாசகருக்கான எளிய அரசியல் உரையாடல்

கட்டுரையாளர்: எஸ்.வி.வேணுகோபாலன் 

மீண்டும் நாடு ஓர் எமர்ஜென்சி நோக்கிப் போகும் அபாயம் உள்ளது என்று சில ஆண்டுகளுக்குமுன் பாஜக தலைவர் எல் கே அத்வானி குறிப்பிட்டார். ஓர் எளிய வாக்கியம் அல்ல இது. அதென்ன எமர்ஜென்சி, எப்படி
அதிலிருந்து தேசம் விடுபட்டது, நடப்பு காலத்தில் அதை அவர் பேசுவானேன் என்றெல்லாம் இப்போதைய இளைய தலைமுறைக்கு யாரேனும் சொல்ல வேண்டி இருக்கிறது.  பக்கம் பக்கமாக அல்ல, மிக எளிய பத்திகளில், ஒன்று ஒன்றரை பக்க அத்தியாயங்களில்…. இதைத் தான் பாரத ஸ்டேட் வங்கியில் பணி நிறைவு செய்திருக்கும் தோழர்
ஆறுமுகம் செய்திருக்கிறார்.

எங்கள் இருவருக்கும் இடையே உள்ள ஒற்றுமை, சம வயதினர். நெருக்கடி நிலை பிரகடனப் படுத்தப்பட்ட  1975ம் ஆண்டிலிருந்துதான் எனக்கும் அரசியலில் கூடுதல் ஈர்ப்பு ஏற்பட்டது. நானும் நூலாசிரியரைப் போலவே எம் ஜி ஆர் ரசிகனாக இருந்தவன்.  சிவாஜியை ரசிப்பவர்கள் நடிப்புக்காக, வசன உச்சரிப்புக்காக, உணர்ச்சி வேகத்திற்காக ரசிக்கிறவர்கள், எம் ஜி ஆர் ரசிகர்கள் அவரது சமூக சீர்திருத்த கருத்துகள், பாடல்கள், எப்போதும் நல்லவராகவே தோன்றும் பாத்திர அமைப்புகள் இவற்றால் வசீகரிக்கப் பட்டவர்கள். 

இந்த அரசியல் உணர்வின் பின்புலத்திலிருந்து, தான் எப்படியெப்படி அரசியல் புரிதலில் அடுத்தடுத்த கட்டங்களைச் சென்றடைந்தேன் என்பதை அறிமுகத்திலேயே சொல்லி விடுகிறார் ஆறுமுகம். அவரது பாட்டனாருக்கும் பாட்டிக்கும் தந்தை பெரியார் தலைமையில் நடந்த சீர்திருத்தத் திருமண புகைப்படம் நிறைய சேதி சொல்கிறது. பின்னர் உறவினரோடு அரசியல் உரையாடல். அப்புறம் தான், கிளைமாக்ஸ்! ஆம், மறக்க முடியாத நம் அன்புத் தோழர் பால்வண்ணம் அவர்களோடு மிக நெருக்கமாக வாய்த்த தோழமை.

கோவில்பட்டியில் அடுத்தடுத்த இருக்கைகளில் 17 ஆண்டுகளுக்கு
மேல் வங்கியில் ஒன்றாக வேலை பார்த்தவர்கள் என்று குறிப்பிட்டார் தோழர் நாறும்பூநாதன். அரசியல் தெறிப்பும், ஆர்வமும் வெடிக்கும் ஓர் இளைஞரை பால் வண்ணம், மெல்ல மெல்ல வாதங்கள் பிரதிவாதங்கள் நிகழ்த்தி மார்க்சியத்தின்பால் ஈர்த்த கதை தான், இந்தப் புத்தகம் இப்போது எழுதப்பட்டிருப்பது.

குறிப்புகள் எல்லாம் அந்தந்தக் காலத்தில் தாம் எழுதி வைத்திருந்தது என்று சொல்லும் ஆறுமுகம், இந்திரா காந்தி அவசர நிலை கொண்டு வந்ததில் நடந்த சிவில் உரிமை மறுப்பு, அத்து மீறல்கள், சஞ்சய் காந்தி எடுத்துக் கொண்ட அதீத அதிகாரம் போன்றவையெல்லாம் எப்படி மக்கள் வெறுப்பை சந்தித்து 1977 வாக்குப் பெட்டியில் பிரதிபலித்தது, அதற்கான மக்கள் இயக்கத்தை ஜெய பிரகாஷ் நாராயண் போன்றோர் எப்படி முன்னெடுத்தனர் என்பதில் இருந்து புத்தகத்தைத் தொடங்குகிறார். 

ஆனால் அற்ப ஆயுள் அரசாங்கம் அது என்று சுட்டிக் காட்டுகிறார். ஜனதா கட்சியிலும் பொறுப்பில் இருப்பார்கள், ஆர் எஸ் எஸ் கட்டுப்பாட்டில் இயங்குவார்கள் என்ற இரட்டைத் தன்மையை தோழர் இ.எம்.எஸ்.நம்பூதிரிபாடு அந்நாட்களில் கடுமையாக அம்பலப்படுத்தி எழுதி வந்தார்.

சந்தர்ப்பவாத அரசியலைப் பயன்படுத்தி இந்திரா மீண்டும் ஆட்சியைப் பிடித்தது, பொற்கோவிலில் இராணுவம், இந்திரா படுகொலை, ராஜீவ் பிரதமரானது, புதிய பொருளாதாரக் கொள்கைகளின் கடிவாளம் அப்போதே போடப்பட்டது என்று நகர்கிறது புத்தகம். விபி சிங் வரவு இந்திய அரசியலில் முக்கியமான திருப்பம். மண்டல் கமிஷன் பரிந்துரை அமல்படுத்தி பிற்பட்டோருக்கு இட ஒதுக்கீடு உறுதி செய்தவரை ஊடகங்கள் ஒதுக்கின. மேல்சாதி மாணவர்களை வீதியில் இறங்கிக் கொந்தளிக்க வைத்தது சங் பரிவாரம். ஆனால், அவர்
அசரவில்லை.

இட ஒதுக்கீடு விஷயத்தைக் கடந்து போக, வலது சாரிகள் இந்துத்துவ வெறியூட்டல் மூலம் தேச மக்களின் உரையாடலை வேறு திசைக்கு நகர்த்தினர். புதிய தாராளமயக்  கொள்கைகளை 1991ல் நரசிம்மராவ் -மன்மோகன் சிங் நடைமுறைப்படுத்தவும், நாடு முழுவதும் தொழிலாளி வர்க்கம் வெகுண்டு எழுந்து 1992 நவம்பர் கடைசி வாரத்தில் தில்லியில் மிக பிரும்மாண்டமான பேரணி நடத்தியது.

ஆனால், அடுத்த வாரமே, அம்பேத்கர் நினைவு நாளான டிசம்பர் 6 அன்று, மத வெறியர்கள் பாபர் மசூதியைத் தகர்த்துத் தரை மட்டமாக்கினர். கடப்பாரை வீசப்பட்டது மக்கள் ஒற்றுமை மீதும் தான். வாஜ்பாய் பிரதமரானது, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி பரிசோதனைகள் எல்லாம் விடாமல் அடுத்தடுத்துப் பேசுகிறார் ஆறுமுகம். நவீன தாராளமய கொள்கைகளோடு வகுப்பு வாதமும் தேசத்தை பிடித்தாட்டும் இப்போதைய பாஜக தலைமையிலான அரசு வரை முதல் பகுதி நிறைவு பெறுகிறது. இதற்கெல்லாம் மாற்று என்ன, விலைவாசி உயர்வுக்கு மட்டுமல்ல, கண்ணியமிக்க வாழ்க்கைக்கு,  ஏற்றத்தாழ்வுகள் அற்ற சமூக அமைப்புக்கு….என்று விரியும் தமது கேள்விகளுக்கு விடை இடதுசாரிகளிடம் கண்டடைவதில் இரண்டாம் பகுதி சற்று வேகமாகப் பேசி முடிக்கிறது.

‘படித்த மாந்தர் வாழும் நாட்டில் பார்க்கும் யாவும் பொதுவுடைமை’ என்ற பச்சை விளக்கு படத்தின் பாடல் வரியிலிருந்து பல மேற்கோள்களும், மாமேதை லெனின் கம்பீரமிக்க தலைமை தாங்கி நடத்திய சோவியத் புரட்சி குறித்த பரவசமும் பொங்கத் தமது எளிய சித்திரத்தை வரைந்து முடித்துள்ளார் ஆறுமுகம். தேசிய அரசியல் பேசும்போதே தமிழக அரசியல் நிலைமை மாற்றங்களையும் தகுந்த வகையில் இணைத்துள்ளது சிறப்பு.  எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வன் அருமையான அறிமுகவுரை வழங்கியுள்ளார். வாழ்த்துரை வழங்கியிருக்கும் தோழர் பால் வண்ணம் அவர்கள் நினைவுக்குத்தான் புத்தகம் படைக்கப்பட்டிருக்கிறது.  

90 கிட்ஸ் என்று சொல்கின்றனரே, அந்தத் தலைமுறை தொடங்கி வாசிக்கத் தக்க எளிமையான புத்தகம் இது. பாராட்டுக்குரிய முயற்சி. நூலாசிரியர், வேறு சில விவாதப் பொருள்கள் மீதும் இப்படியான எளிய புத்தகங்கள் வழங்க வேண்டும் என்பதே நூல் வெளியீட்டில் பங்கு பெற்றோர் வெளிப்படுத்திய நேயர் விருப்பம்.


அரசியலில்  அ…ஆ… 
அ. ஆறுமுகம் 
90 பக்கங்கள்: விலை ரூ.90/-
பாரதி புத்தகாலயம். சென்னை 18

2 comments

  1. அருமையான அறிமுக உரை. தோழர். பால்வண்ணம் அவர்களுடன் கோவில்பட்டியில் நட்பு கொண்ட TNGEA வட்டக் கிளை நிர்வாகி, நான்.மா.ஜெகதீசன் கூட்டுறவு சார்பதிவாளராகி ஓய்வு. TNGPA விருதுநகர் வட்டக் கிளை செயலாளர் தற்போது ‘விருதுநகர் அருகில் கன்னிசேரி புதூர் சொந்த ஊர்.இன்றும் நமம வர்களுடன் உறவு ….

  2. 1975 ன் மறக்க முடியாத நாட்கள் அவை. ஆனால் எது எவ்வாறு யாரால் கொண்டு வரப்பட்டது என்பதை இன்றைய தலைமுறையினர் அறிய மாட்டார்கள்.

Comment here...