ஆடு நனைகிறதே என்று ஓநாய் அழுகிறது

கட்டுரையாளர்: பாரதி

கிராமங்களின் பொருளாதாரத்தை மேம்படுத்தவும், கிராம பொருளாதாரத்தை இந்திய பொருளாதாரத்துடன் இணைக்கவும் தொடங்கப்பட்டவை கிராம வங்கிகள். 1975ல் தொடங்கப்பட்ட கிராம வங்கிகள், வெவ்வேறு பொதுத்துறை வங்கிளை ஸ்பான்சர் வங்கிகளாகக் கொண்டு இன்றுவரை 43 கிராமவங்கிகளாக கம்பீரமாய் நிற்கின்றன. நாடு முழுவதும் விவசாயம், சிறு குறு தொழில் நிறுவனங்கள், மானியக் கடன்கள், சுய உதவிக்குழு கடன்கள் என்று 90% முன்னுரிமை துறைகளுக்கு கடன் வழங்கி பொது மக்களின் ஈர்ப்பையும், நம்பிக்கையையும் பெற்று வளர்ந்து கொண்டு இருக்கின்றன கிராம வங்கிகள். வங்கித்துறை சீர்திருத்தம் என்ற பெயரில் பொதுத்துறை வங்கிகளை இணைப்பது, பொதுத்துறை வங்கிகளின் பங்குகளை தனியாருக்கு விற்பது , பொதுத்துறை வங்கிகளையே தனியார் வசம் ஒப்படைப்பது என்ற வரிசையில் இதோ கிராம வங்கிகளையும் தனியார் வசம் ஒப்படைக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஒன்றிய அரசு மறுசீரமைப்பு என்று அரசு முன் வைத்துள்ள திட்டத்தின் அடிப்படையில் தற்போது இருக்கும் 43 கிராம வங்கிகளை அவற்றின் ஆபத்தான கடனுக்கு எதிரான மூலதனத்தின் (CRAR) அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்துகிறது. CRAR என்பது வங்கியின் நிதி நிலைமை பலத்தின் குறியீடு ஆகும். அவற்றுள் நிதி நிலை மோசமாக இருக்கும், அதாவது CRAR 5% க்கு கீழ் இருக்கும் கிராம வங்கிகளுக்கு மட்டும் நிதி தருகிறோம் என்கிறது. ஆடு நனைகிறதே என ஏன் ஓநாய் கரைகிறது என பார்த்தால்… மெல்ல தன் திட்டத்தை இப்படி முன்வைக்கிறது… அதாவது தன்னளவிலேயே இலாபமாக இயங்கும் முதல் பிரிவில் உள்ள கிராம வங்கிகளில் இருக்கும் அரசின் பங்குகள் அந்தந்த ஸ்பான்சார் வங்கிகளுக்கே விற்கப்படும் என்கிறது. இரண்டாவது பிரிவில் வரும் கிராம வங்கிகளுக்கு கொஞ்சம் கொஞ்சமாக தவணை முறையில் நிதி ஆதாரத்தை அளித்து அவைகளும் முதல் பிரிவில் வரும் கிராம வங்கிகளைப் போல் தன்னளவில் இலாபமீட்டத் துவங்கியதும் அதன் பங்குகளும் ஸ்பான்ஸர் வங்கிகளிடம் ஒப்படைக்கப்படுமாம்.

அதாவது முற்றும் முழுவதுமாக தனியாருக்கு ஒப்படைக்கும் முன் எல்லா கிராம வங்கிகளையும் இலாபக் குறியீடுகளுக்குள் கொண்டு வந்துவிட்டு பின் தனியாருக்கு படையலிடப்படும் என்பதே இதன் உள்நோக்கம். இந்த நோக்கத்தை புரித்து கொண்ட அகில இந்திய கிராம வங்கிகளின் சங்கம் போராட்டத்தை கையில் எடுத்தது. செப்டம்பர் 27 ஒரு நாள் வேலை நிறுத்ததை நடத்தி இருக்கிறது. இது இன்றளவும் ஒரு கமிட்டியின் வரைவாக இருக்கிறது. இருந்தாலும் வரும் முன் வங்கியை காப்போம் என்ற முடிவில் கிராம வங்கி ஊழியர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். பொதுத்துறை வங்கிகளை தனியார்மயம் ஆக்குவதை நாம் எதிர்த்து கொண்டு இருக்கிறோம். இதோ அதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றபடவில்லை. இரண்டு நாள் வேலை நிறுத்ததிற்கான வெற்றி. அதே போல கிராம வங்கிகளின் போராட்டமும் வெல்லும். இந்தியாவில் உள்ள 43 கிராம வங்கியையும் ஒன்றிணைத்து, நீண்ட நெடு நாள் கோரிக்கையான தேசிய கிராம வங்கியை (NRBI – National rural bank of india) கட்டமைக்க வேண்டும். மேலும் இந்திய அளவில் ஒரே வங்கியாக, கிராமப்புற மேம்பாட்டுக்கென, ஸ்டேட் வங்கிக்கு இணையான சக்திவாய்ந்த ஒரு வங்கியாக இந்திய கிராம வங்கி மாறவேண்டும் என்கிற கனவை இலட்சியத்தை சுமக்கிற பாதையில் பயணிப்போம்.

2 comments

  1. குறுகிய வார்த்தைகளில் தெளிவான விளக்கம்

  2. The government’s ill-willed tactics and plans have all been explained. It would be better if you have spoken the realities and benefits behind the NRBI model.

Comment here...