க.சிவசங்கர்
“இந்த கவர்மெண்ட் பாங்குக்கு வந்தாலே இப்படித்தான்.. காத்துக் கிடந்து, காத்துக்கிடந்து கால் எல்லாம் நோவ ஆரம்பிச்சுரும்… ரொம்ப மோசம்ங்க”..
“போன வாரம் எங்க முதலாளி ஐயா கூட அந்த பிரைவேட் பாங்குக்கு போனேன்… என்ன மரியாதை தெரியுமா…பத்தே நிமிஷத்துல வேலைய முடிச்சு கொடுத்துட்டாங்க”…
“பேசாம எல்லா கவர்மெண்ட் பாங்குகளையும், தனியாரிடம் வித்துரனும். அப்பதான் இவங்க எல்லாம் வேகமா வேலை பார்ப்பாங்க…”
இதுபோன்ற உரையாடல்கள் வேறு வேறு வடிவங்களில், வேறு வேறு மனிதர்களிடம் இருந்து வெளிப்படுவதை பார்க்க முடியும்….
மொத்த வியாபாரத்தில் சுமார் 35 சதவீதத்தை தன்னகத்தே கொண்டுள்ள தனியார் வங்கிகளில் மொத்த வாடிக்கையாளர்களில் 6% பேர் மட்டுமே உள்ளனர் என்பதுதான் யதார்த்தம். தனியார் வங்கிகள் குறிப்பாக புதிய தனியார் வங்கிகள் மற்றும் அந்நிய நாட்டு வங்கிகள் சாமான்ய மக்களை தங்கள் வங்கிப் பக்கம் சேர்ப்பதே இல்லை. அவர்களின் குறந்த பட்ச இருப்பு அரசு வங்கிகளைக் காட்டிலும் 10 மடங்கு கூடுதல். சாமான்ய மக்களுக்கான கடன் சேவையிலும் அவர்கள் பங்கெடுப்பதே இல்லை. அவ்வங்கிகளின் கிளைகள் பெரும்பாலும் நகரங்கள், பெரு நகரங்களிலேயே உள்ளன. சமதள ஆடுகளம் இல்லாத இரு பிரிவு வங்கிகளை ஒப்பீடு செய்வது என்பதே முதலில் சரியில்லை. இருப்பினும் உண்மையில் களநிலவரம் தான் என்ன?.
நாடு முழுவதும் பல கோடி வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகள் மிகப்பெரிய அளவிற்கு ஊழியர் பற்றாக்குறையினால் தத்தளிக்கின்றன. இந்தியா முழுவதும் சுமார் 87,000 கிளைகளைக் கொண்டுள்ள பொதுத்துறை வங்கிகள், அவற்றில் பெரும்பாலானவற்றை கிராமப்புற மற்றும் சிறு நகரங்களில் கொண்டுள்ளன. இவ்வாறு பரந்து விரிந்துள்ள பொதுத்துறை வங்கிகளில் ஒரு கிளைக்கு சராசரியாக 16 ஆயிரம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதேநேரம் சுமார் 30000 கிளைகளைக் கொண்டுள்ள தனியார் வங்கிகளில், ஒரு கிளைக்கு சராசரியாக 8 ஆயிரம் வாடிக்கையாளர்கள் மட்டுமே உள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.
அடுத்ததாக ஊழியர்கள் எண்ணிக்கையை வைத்துப் பார்க்கும்போது தனியார் வங்கிகளில் ஒரு ஊழியருக்கு சுமார் 500 வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் பொதுத்துறை வங்கிகளில் சராசரியாக ஒரு ஊழியருக்கு சுமார் 1700 வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதிகபட்சமாக பேங்க் ஆப் மகாராஷ்டிரா வங்கியில் ஒரு ஊழியருக்கு 2500 வாடிக்கையாளர்களும், இந்தியன் வங்கி மற்றும் பாங்க் ஆப் இந்தியா வங்கிகளில் ஒரு ஊழியருக்கு சுமார் 2400 வாடிக்கையாளர்களும் உள்ளனர். அதேநேரம் ஆக்சிஸ் வங்கி மற்றும் ஐசிஐசிஐ போன்ற தனியார் வங்கிகள் ஒரு ஊழியருக்கு சுமார் 300 வாடிக்கையாளர்களை மட்டுமே கொண்டுள்ளன. இதன் மூலம் தனியார் வங்கிகளின் ஊழியர்களை விட பொதுத்துறை வங்கிகளின் ஊழியர்கள் சுமார் 8 மடங்கு அதிகமான வாடிக்கையாளர்களைக் கையாளுகின்றனர் என்பதைத் தெரிந்து கொள்ளலாம்.
சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு அளித்துள்ள எழுத்துப்பூர்வ அறிக்கை பொதுத்துறை வங்கிகளில் நிர்வாகங்கள் அறிவித்துள்ள பணியிடங்களின் கணக்கீடுகளின் படியே சுமார் 41 ஆயிரம் பணியிடங்கள் நிரப்பப்படாமல் காலியாக உள்ளன என்று தெரிவிக்கிறது. மேலும் ஒவ்வொரு ஆண்டும் ஐபிபிஎஸ் தேர்வுகளின் மூலம் தேர்வு செய்யப்படும் புதிய பணியாளர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து சரிவைச் சந்தித்து வருகின்றது. கடந்த 2014, 2015 ம் ஆண்டுகளில் 30000 முதல் 40000 ஆக இருந்து வந்த எழுத்தர்கள் கடந்த நான்கு ஆண்டுகளாக சராசரியாக 7000 முதல் 12000 எழுத்தர்களாக சுருங்கியுள்ளது. அதே போல 15000 முதல் 20000 ஆக இருந்து வந்த அதிகாரிகளின் பணியிடங்கள் தற்போது 3000 முதல் 5000 ஆக குறைந்துள்ளது. இதனால் கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் பொதுத்துறை வங்கி ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை சுமார் 8 சதவீதம் குறைந்துள்ளது. அதே காலகட்டத்தில் தனியார் துறை வங்கிகளின் மொத்த ஊழியர் எண்ணிக்கை சுமார் 28 சதவீதம் உயர்ந்துள்ளது.
மேலும் ஒன்றிய அரசால் சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட வங்கிகள் இணைப்பு நடவடிக்கைகளின் காரணமாக பெரும்பாலான பொதுத்துறை வங்கிகள் பெரிய அளவிலான தொழில்நுட்ப ரீதியான சிக்கல்களைச் சந்தித்து வருகின்றன. இதுவும் வாடிக்கையாளர் சேவைகளில் ஏற்படும் தாமதத்திற்கு ஒரு முக்கிய காரணமாக அமைகின்றது.
அரசாங்கத்தின் எந்தவொரு திட்டமாக இருந்தாலும் அவை பொதுத்துறை
வங்கிகளின் மூலமே நிறைவேற்றப்படுகின்றன. உதாரணமாக அனைவருக்கும் வங்கிக்கணக்கு என்ற ஜன்தன் திட்டத்தின் கீழ் பொதுத்துறை வங்கிகள் சுமார் 34 கோடி கணக்குகளும், கிராம வங்கிகள் சுமார் 8 கோடி கணக்குகளும் திறந்த நிலையில், தனியார் வங்கிகள் வெறும் 1.25 கோடி கணக்குகள் மட்டுமே திறந்தன என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நாட்டின் சாமானிய மக்களுக்குத் தேவையான அடல் பென்ஷன் யோஜனா போன்ற ஓய்வூதிய திட்டங்களையும், காப்பீட்டுத் திட்டங்களையும், அரசின் பல்வேறு மானியங்கள் மற்றும் மானியங்களுடன் கூடிய கடன்களையும் பொதுத்துறை வங்கிகளே செயல்படுத்தி வருகின்றன. ஆனால் பொதுத்துறை வங்கிகளில் தேவையான அளவிற்கு ஊழியர்களைப் பணியமர்த்தாமல் அவ்வங்கிகளின் ஊழியர்களின் மேல் மிகப்பெரிய அளவிற்கு பணிச்சுமை ஏற்படுத்தப்படுகின்றன. ஒரு நொடி கவனக்குறைவு கூட மிகப்பெரிய பொருளாதார இழப்பை ஏற்படுத்தி விடும் வாய்ப்பைக் கொண்டதே
வங்கிப்பணி. அவ்வாறு ஒவ்வொரு நொடியும் விழிப்புடன் இருக்க வேண்டிய, இயல்பிலேயே மன அழுத்தம் அதிகம் கொண்ட வங்கிப்பணியில் இது போன்ற ஊழியர் பற்றாக்குறைகளால் அவ்வூழியர்களுக்கு கூடுதல் அழுத்தம் ஏற்பட்டு, அவை வாடிக்கையாளர்கள் முன்னால் சேவைக் குறைப்பாடாகவும், தேவையற்ற விவாதங்களாகவும் மாறுகின்றன.
இவ்வாறு அரசாங்கத்தின் தவறான கொள்கை முடிவுகளால் பொதுத்துறை வங்கிகளின் செயல்பாடுகள் திட்டமிட்டு முடக்கப்பட்டு, பொதுமக்களின் மனதில் பொதுத்துறை வங்கிகளின் மீதான மோசமான பார்வையை ஏற்படுத்தி தனியார் வங்கிகளே சிறப்பானவை என்ற தவறான புரிதலை உருவாக்கி விடுகின்றன. எனவே அரசாங்கம் மற்றும் வங்கி நிர்வாகங்கள் பொதுத்துறை வங்கிகளில் தேவையான அளவிற்கு பணியிடங்களை நிரப்பி நாட்டு மக்களின் மத்தியில் பொதுத்துறை வங்கிகள் குறித்த நம்பகத்தன்மையை உயர்த்திட முன்வர வேண்டும். அதுவே மக்களுக்கும், நாட்டின் எதிர்கால பொருளாதார வளர்ச்சிக்கும் நன்மை பயப்பதாக அமையும்.
நிதர்சனமான உண்மை.
அரசுடைமைக்ளை விற்று காசாக்கி தனியாரிடம் ஒப்படைக்கக் காரணமாக அரசு வங்கிகளையும் நிறுவனங்களையும் முடக்கி, செயல்படமுடியாமல் ஆக்கி, சேவைக்குறைபாட்டை, நஷ்டத்தை முன்னிறுத்துகிறது இந்த ஒன்றிய அரசு.
அரசு வங்கிகள், நிறுவனங்கள் மக்களுக்கு சேவைசெய்வதற்காகவே என்ற உண்மையை உணர்ந்து, மேலும் மேலும் தவறிழைக்காமல், தனியார் மயமாக்கத்தை கைவிட வேண்டும்.
கார்பொரெட்டுகளுக்கான சர்க்கார், முதலாளிகளுக்கு ஆதரவாகவே செயல்படும்.மக்கள் நலன் சார்ந்து செயல்படும் கட்சி ,ஆட்சியாக மாறும் போது தான் மக்கள் நலன் காக்கப்படும் பொது துறை நிறுவனங்கள் பொது துறை யாகவே செயல்படும். என்று மலரும் என்ற காத்திருப்போர் பட்டியலில் நானும்…ரவீந்திரன்