சே.இம்ரான்
நாம் ஒரு விஷயத்திற்காக வெட்கித் தலை குனிய வேண்டுமெனில், தார்மீக பொறுப்பேற்று குற்றவுணர்வுக்குள்ளாக வேண்டுமெனில், அது அவரின் பெயரை நாம் வரலாற்றிலிருந்து இருட்டடிப்பு செய்து, சமூகத்தின் பால் அவர் கொண்ட அக்கறையை அங்கீகரிக்காமல் அடுத்தடுத்த தலைமுறைகளுக்கு அவரைக் கடத்தாமல் பொறுப்பற்று வாழ்ந்து கொண்டிருப்பதற்காகத் தான். ஆம், 1831ல் பிறந்து 1897ல் மறைந்து 66 வருடம் மட்டுமே நம் மண்ணில் வாழ்ந்த சாவித்திரி பாய் பூலே நம் சமூகத்திற்கு ஆற்றிய பணிகளுக்காக நாம் தலைமுறைகள் கடந்தும் அவருக்கு நன்றிக்கடன்பட்டிருக்கிறோம்!
எழுத்தறிவின்றி தனது 9ம் வயதில் மண வாழ்வுக்குள் நுழைந்த சாவித்திரி பாய் தான் தனது கணவனால் கல்வி கற்பிக்கப்பட்டு தனது 17ம் வயதில் இந்தியாவின் முதல் பெண் ஆசிரியராக உருவெடுத்தார். இந்திய சமூக புரட்சியாளர்களின் முன்னோடியும், காந்தியால் ‘உண்மையான மகாத்மா’ என்று போற்றப்பட்டவருமான அவரின் கணவர் ஜோதிபா பூலே 1848ல் வெறும் 9 மாணவிகளுடன் தொடங்கிய பெண்களுக்கான இந்தியாவின் முதல் பள்ளியில் முதல் பெண் ஆசிரியரானார் சாவித்திரி பாய். 1852ல் பிரிட்டிஷ் அரசாங்கத்தால் சிறந்த ஆசிரியர் என கௌரவிக்கப் பட்டாலும், ஒரு பெண் ஆசிரியராவதையும், பெண்களுக்கு கல்வி புகட்டுவதையும் ஏற்காத இந்திய சமூகத்தின் சனாதான சக்திகள் அவரைத் தொடர்ந்து அச்சுறுத்தியும் இழிவு செய்தும் வந்தனர். அதன் உச்சமாகத் தான் ஒரு நாள் பள்ளி சென்று கொண்டிருந்த அவர் மீது மனித மலத்தையும், மாட்டு சாணத்தையும் வீசி எறிந்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் எந்த பின்புலமும் இல்லாத ஓர் இளம் பெண் என்ன செய்திருப்பாள்? நம் கற்பனைகளை எல்லாம் விஞ்சி செயல்படுகிறார் சாவித்திரி பாய். தான் உடுத்திய உடை போக பையில் ஒரு மாற்றுத் துணியுடன் தினமும் பள்ளி செல்கிறார். மனித மலம் மற்றும் மாட்டுச் சாணம் அவர் மீது வீசப்படுகிறது. பள்ளி சென்று சேர்ந்ததும் குளித்து முடித்து மாற்றுத் துணியை கட்டிக் கொண்டு தன் பணியைத் தொடர்கிறார். ஆம், தான் கொண்ட இலக்கை அடைவதில் இவ்வளவு தீரத்துடனும்
மனோதிடத்துடனும் செயல்பட்ட ஒருவரின் வரலாற்றை நம் பாடப் புத்தகங்கள் இருட்டடிப்பு செய்தமைக்கு நாம் வெட்கி தலை குனிந்திருக்க வேண்டுமல்லவா? பெண்கள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் கல்வியுரிமைக்காக போராடியதோடு நின்றுவிடாமல் அவரின் செயல்பாடுகள் இன்னும் விரிவடைகின்றன. 1852ல் ‘மஹிளா சேவா மண்டல்’ (பெண்கள் சேவை மையம்) தொடங்கி மனித உரிமைகள், சமூக அங்கீகாரம் போன்ற சமூக விஷயங்கள் குறித்துப் பெண்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்திய அவர் அந்த காலத்திலேயே கணவனை இழந்த பெண்களுக்கு மறுமணம் செய்து வைத்தார். கணவனை இழந்தவர்கள் தலைமுடிகளை மழித்து முக்காடிட வேண்டும் என்றிருந்த வழக்கத்திற்கு எதிராக நாவிதர்களைக் கொண்டே போராட்டம் நடத்தினார்.
சமூக கள செயல்பாடுகளைத் தாண்டி கவிதை எழுதுவதில் சிறந்து விளங்கிய அவர், 1854ல் அவரது கவிதைத் தொகுப்பினை பிரிட்டிஷ் அரசின் அங்கீகாரத்துடன் வெளியிட்டார். மராட்டிய மொழியின் நவீன கவிதைப்போக்கு இவரிடமிருந்தே துவங்குகிறது. 1876-78ல் ஏற்பட்ட பெரும் பஞ்ச காலத்திலும், அதன் பின் ஏற்பட்ட பிளேக் தொற்று காலத்திலும் பாதிக்கப்பட்ட மக்களோடு நின்று வீரியமாக செயல்பட்ட அவர், 1897ல் பிளேக் நோயால் பாதிக்கப்பட்ட சிறுவனை மருத்துவமனை கொண்டு செல்ல தன் முதுகின் மீது சுமந்து சென்றதனால் நோய்த் தொற்றுக்கு உள்ளாகி அச்சிறுவனை காப்பாற்றி தன்னுயிரை நீத்தார்! வாழ்வை மட்டுமல்லாமல் தன் மரணத்தையும் கூட சமூகத்திற்காகவே அர்ப்பணித்தார்.
இந்திய ஆளும் வர்க்கம் இருபதாம் நூற்றாண்டின் இறுதியில் இருந்து தான் அவரை அங்கீகரிக்கத் தொடங்கியது. 1983ல் அவருக்கான நினைவகம் அமைத்த மராத்திய அரசு ஒவ்வோர் ஆண்டும் அவரின் பெயரில் பெண்களுக்கு விருது வழங்கி கௌரவிக்கிறது. இந்திய அஞ்சல்துறை 1998ல் அவரின் தபால்தலையை வெளியிட்டது. பூனே பல்கலைக்கழகத்தின் பெயரை சாவித்திரிபாய் பூலே பல்கலைக்கழகமாக மாற்றிய மராத்திய அரசு அவரின் பிறந்த தினமான ஜனவரி 3ம் தேதியை ‘பெண் குழந்தைகள் தின’மாக ஆண்டு தோறும் கொண்டாடி கௌரவிக்கிறது.
ஒன்றரை நூற்றாண்டுகளாக அவர் வரலாற்றை இருட்டடிப்பு செய்த இந்திய ஆளும் வர்க்கம், 20ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் அவரைக் கொண்டாடத் தொடங்கியதற்கான அரசியல் காரணங்களையும், அவருக்கு சரி நிகராக பெண் விடுதலைக்கும், கல்விக்காகவும் செயல்பட்டு அவரை விடவும் அதிக வரலாற்று இருட்டடிப்பிற்கு உள்ளான மற்றொரு வீரமங்கையைப் பற்றி அடுத்த இதழில்…
(ஜனவரி 3- சாவித்திரி பாய் பூலே அவர்களின் பிறந்ததினம்)
சாவித்திரி பாய் ஃபுலே போன்ற தலைவர்களை ஒரு தலைமுறையில் இருந்து அடுத்த தலைமுறைக்கு கடத்த வேண்டிய பொறுப்பு நம்முடையது, இந்த அரசாங்கத்துடையது என்று அதன் அவசியத்தை அருமையாக உணர்த்தி உள்ளீர்கள். மற்றுமொரு வீரமங்கைக்காக காத்திருக்கிறேன்.
சமூக போராளி தோழர். சாவித்ரி பாய் பூலே வின் கல்விப் பணியை மிக சிறப்பாக பதிவு செய்திருக்கிறீர்கள். பெண் கல்விக்காக அவர் ஆற்றிய பெரும்பணியை இந்திய சமூகம் முழுமையாக அங்கீகரிக்காதது மிகவும் துரதிருஷ்டவசமானது.