சரசுக்கு இன்று முதல் நாள்

குகன். க

தன் தலையணை பக்கத்தில் வைத்திருந்த கடிகார அலாரம் விடியற்காலை நான்கு மணியை தொட்டதும், தன் இரைச்சல் ஒலியை கக்கியது. சத்தம் அதிகபட்ச டெசிபலை அடைந்தும், சின்னஞ்சிறு அசைவின்றி நல்ல ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள் சரசு. முந்தைய நாள் இரவு, தடித்த கொசுக்களின் ரீங்காரங்களின் நடுவே அவள் கண் அயர்வதற்கு நடுநிசி தாண்டி இருந்தது. தங்கள் குடிசையின் அருகாமையில் ஓடும் அந்த நெடுந்தூர கருமை நதியின் தஞ்சம் தான் இந்த கொசுக்கள். ஸ்மார்ட் சிட்டி யின் விரிவாக்கத்தால் சரசுவின் வீடு அரசினால் கையகப்படுத்தப்பட்டு, மாற்று குடியிருப்புக்கு போகும் வரை தற்காலிகமாக இங்கே அவர்கள் குடும்பம் தங்கி இருக்கிறார்கள். அலாரத்தின் அலரலில், சரசுக்கு முன் அவளின் அம்மா மூக்காயீ எழுந்துகொண்டாள். சரசு, வீட்டின் கடைக்குட்டி, மிகவும் செல்லமாக வளர்க்கப்பட்டவள். மூக்காயீ க்கு எல்லாமே சரசு தான். தன் உழைப்பு மொத்தமும் சரசுவிற்காக மட்டுமே அற்பணித்தாள். இந்த நிமிடம் வரை, அவளுக்கு அப்பா இல்லை என்ற குறையை ஒரு போதும் அவள் உணரா வண்ணம் வளர்த்து கொண்டிருந்தாள் மூக்காயீ.

மூக்காயீ யின் உசுப்புதலுக்கு எழுந்து கொண்ட சரசு , கட கட வென குளித்துவிட்டு கிளம்பலானாள். நேரத்தை பார்த்து கொண்டே. மூக்காயீ சரசுவின் கையை பிடித்து கொண்டு வேக வேகமாக நடையை துவங்கினாள். குறித்த நேரத்திற்கு 10 நிமிடம் முன்னரே இருவரும் சென்றடைந்தனர்.

‘ஐயா வந்தவுடனே வணக்கம் வைக்கணும், சரியா!’

‘உம்ம்’

சிறிது நேரம் கழித்து , அரைக்கால் சட்டையுடன் ஒருவர் வந்தார். அவரை பார்த்தவுடன், மூக்காயீ ‘வணக்கம் ஐயா ‘ என்று கும்பிடு போட்டாள். அதை பார்த்த சரசுவும் கும்பிடு போடவே…..

‘மூக்காயீ, யாருமா இது’

‘ஐயா, என் பொண்ணு தாங்க…. உங்ககிட்ட நேத்தே சொல்லிருந்தேன்ல… ‘ என்று தலையை சொறிந்தாள்.

‘ஏம்மா, விளையாடுரியா ?!! அதிகாரி வந்து கேட்டா, என்னமா சொல்றது. ஏற்கனவே, இருக்கிற பிரச்சனை போதாதா?!’

‘நீங்க தாங்க உதவி பண்ணணும், போன வாரம் ரெண்டு பசங்கள சேத்து விட்டீங்கள, அது மாதிரி…. ‘ என்று இழுத்தாள் மூக்காயீ.

‘ஓஹோ… அதுலாம் பாத்திட்டு தான், இன்னைக்கு கூட்டியாந்தியா?!’

‘சரி சரி….’

‘பாப்பா இங்க வாமா, இங்க யார் வந்து உன்ன கேட்டாலும், 15 வயசுனு சொல்லணும்.. சரியா?!’

‘உம்ம்.. ‘ என்று தலையாட்டினாள் சரசு.

அந்த அரை டவுசர் ஆசாமி, நகர்ந்த பின்பு, இருவரும் வண்டியை தள்ளிக் கொண்டு நடக்க ஆரம்பித்தனர்.

சிறிது தூரம் சென்ற களைப்பில், மூக்காயீ தெரு முனை குழாயில் சிறிது தண்ணீர் பிடிக்க சென்றிருந்தாள். திரும்பி வந்து பார்த்த போது, சரசுவை அங்கு காணவில்லை. பதறியடித்து சுற்று முற்றும் பார்த்த மூக்காயீ யின் கண்களுக்கு, சரசு தூரத்தில் நிற்பது தெரியவே, பெருமூச்சு விட்டவளாய் சரசுவை நோக்கி நடந்தாள்.

தேசிய கீத பாடலுடன், மாணவர்களின் அணிவகுப்புக்கு நடுவே, தேசிய கொடி மிக கம்பீரமாக பறந்து கொண்டிருந்தது. அந்த பள்ளியின் வளாகத்தைத் தான் சரசு தன்னை மறந்து பார்த்து கொண்டிருந்தாள்.

‘சரஸ்வதி’

‘உள்ளேன் ஐயா’

என்ற அந்த பழக்கப்பட்ட அழைப்பு, அவளுக்கு கேட்டுக்கொண்டே இருந்தது.

பத்து மாதங்களுக்கு முன்பு வரை, சீருடை அணிந்து இந்த பள்ளிக்கு தான் சரசு சென்று கொண்டு இருந்தாள்.

பள்ளியில் சரசுவை அழைக்க வந்த மூக்காயீ, தன் மகள் மீது துர்நாற்றம் வீசுவதாக கூறி மற்ற மாணவர்களிடம் இருந்து விலகி உட்கார வைத்ததை பார்த்ததும் கலங்கிப் போனாள். தன் கணவனையும், தலை மகனையும் விஷ வாயுக்கு பலிகொடுத்த பின், அவளின் ஒரே உலகமாக மாறிப்போன சரசுவை அவள் இந்த நிலமையில் பார்க்க ஒருபோதும் நினைத்தது இல்லை. அன்றுடன் சரசுவின் பள்ளி நாட்களுக்கு முழுக்கு விழுந்தது.

மெய்மறந்து நின்றிருந்த சரசுவிடம் , மூச்சிரைக்க ஓடிவந்த பள்ளி சிறுமி மிட்டாயை கொடுத்துவிட்டு சொன்னாள் ‘சுதந்திர தின நல்வாழ்த்துகள் அக்கா’

பள்ளியின் அருகே வந்த மூக்காயீ, தன் அடுத்த தலைமுறையை அங்குள்ள குப்பைகளுக்கு நடுவே கண்ணீருடன் அழைத்து சென்றாள். கையில் வைத்திருந்த அந்த சுதந்திர தின ஆரஞ்சு மிட்டயை சப்பிக்கொண்டே, சரசு என்ற சரஸ்வதி குப்பை வண்டியை அடுத்த தெருவுக்கு நகர்த்திச் சென்றாள்.

Comment here...