23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம்
ஜேப்பி
இந்திய மக்களில் பல கோடிப் பேருக்கு வேலை இல்லை. வேலை
நிரந்தரம் இல்லை. கான்டிராக்ட் வேலை. தினக் கூலி. அதுவும்
ஒழுங்காகக் கிடைக்காது. குறைந்த பட்ச, நிரந்தரக் கூலி இல்லை.

சமூகப் பாதுகாப்பு இல்லை. சாதிக் கொடுமைகள் ரணத்தை
ஏற்படுத்தும். மருத்துவ வசதி இல்லை. நாள் தோறும் விஷம் போல
ஏறுகின்ற விலைவாசி அடி வயிற்றில் இடியாய் இறங்கும்.
பலருக்கும் நாளுக்கு ஒருவேளை முழு உணவில்லை. பிளாட்பார வாசம், சுகாதாரமான சுற்றுப்புறம் இல்லாத குடிசை அல்லது அது போன்ற தாற்காலிக தங்குமிடம். படிக்க வசதி இல்லை. படித்து வந்தாலும் வேலை இல்லை. இப்படி ஒரு மோசமான சூழலில் நாயினும் கீழாய் நாட்டு மக்கள் பல கோடி பேர் பிழைப்பு நாள்தோறும் ஒரு நரக வேதனையாக இருக்கிறது. பசிக் கொடுமையால் சாவது ஒரு பக்கம் என்றால் கந்து வட்டிக் கடன், விளைத்த பயிருக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமல் நஷ்டமடைந்த, பொய்த்த மழை பெய்து கெடுத்த மழை இவற்றால் பயிர் பறி போன ஆதங்கத்தில் விவசாயிகள் தற்கொலைகள் மறுபக்கம்.
கார்ப்பரேட்களுக்கு ஆதரவான வரிக் கொள்கை
நேரடி வரிக்கும் மொத்த உள்நாட்டு உற்பத்திக்குமான இந்திய விகிதாச்சாரம் 16.6%. பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பைச் (OECD) சேர்ந்த நாடுகளில் இதுவே 34% க்கு மேலே. நேர்முக வரிக்கும் மறைமுக வரிக்கும் இடையான இந்திய விகிதாச்சாரம் 35:65. ஆனால், OECD நாடுகளில் இது 67:33 ஆக இருக்கிறது.

மறைமுக வரி செலுத்துபவர்கள் சாமான்ய மக்கள். இவர்கள் மீது பாரம் சுமத்தி விட்டு, கார்ப்பரேட்டுகளுக்கு பல வரிச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. மோடி அரசால் கார்ப்பரேட் வரிகள் வெகுவாகக்
குறைக்கப்பட்டுள்ளன. கடந்த 2019ம் வருடம் 34.94% ஆக இருந்த கார்ப்பரேட் வரியை 25.17% ஆகக் குறைத்தது. கூடுதலாக இந்தப் பிரிவின்கீழ் குறைந்த பட்ச மாற்று வரியை அறவே நீக்கியது. 25% இருந்த வரியை 15% ஆகக் குறைத்தது. இது தவிர, ஏற்கனவே ஊக்கங்கள் விலக்குகள் கோரும் நிறுவனங்களுக்கு குறைந்த பட்ச மாற்று வரியையும் 18.5% ல் இருந்து 15% ஆகக் குறைத்தது.
இந்த மிகக் குறைந்த விகிதாச்சாரம், பல சமூகப் பாதுகாப்புத் திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைத் திட்டங்கள் போன்ற பல சமூக முன்னேற்றத் திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதற்கு தடையாய் இருக்கிறது. இது போதாதென்று, மோடி அரசு தேசத்தின் வருவாய்க்கு ஊற்றுக்கண்ணாய் இருக்கும் பொதுத் துறை நிறுவனங்களை, செல்வங்களை கார்ப்பரேட்டுகளுக்குத் தாரை வார்க்கிறது.
மாற்றுக் கொள்கை தேவை
இந்த மக்கள் விரோத கொள்கைகளை கைவிட்டு, மாற்றுக் கொள்கைகள் உருவாக்கிச் செயலாக்கினால் மட்டுமே தேசத்தையும், மக்களையும் காக்க முடியும். கார்ப்பரேட்டுகள் வருவாய் மீது கூடுதல் வரி விதிக்க வேண்டும். மறைமுக வரிகளைக் குறைக்க வேண்டும். சொத்து வரி மீண்டும் அமலாக்கப்பட வேண்டும்.
வருமானவரி வரம்பிற்குள் வராத மக்களுக்கு பணமும், உணவும் அளிப்பதை உத்திரவாதப் படுத்த வேண்டும். வேலையின்மையை எதிர் கொள்ள வேலை உத்தரவாதச் சட்டத்தை நகர்ப் புறங்களுக்கும் விரிவாக்க வேண்டும். அதற்கு போதிய நிதி ஆதாரம் ஒதுக்க வேண்டும்.
எனவே,
• வருமானவரி வரம்பிற்குள் வராத அனைத்துக் குடும்பத்தினருக்கும் மாதந்தோறும் 7,500 ரூபாய் உணவு மற்றும் வருமான ஈடாக அளித்திடுக.
• மகாத்மாகாந்தி தேசிய கிராமப்புற வேலைவாய்ப்பு உத்தரவாதச் சட்டத்தின்கீழ் ஒதுக்கீட்டை அதிகப்படுத்துக, இதனை நகர்ப்புறங்களுக்கும் விரிவாக்கிடுக.
என்ற மக்கள் நலக் கோரிக்கைகளை முன்வைத்து 23-24 பிப்ரவரி, 2022 அன்று அகில இந்திய வேலை நிறுத்தம் நடை பெறுகிறது. வேலை நிறுத்தத்தை வெற்றி பெறச் செய்வோம். மக்களைக் காப்போம். நாட்டைக் காப்போம்.