DON’T LOOK UP

பாரதி

அடக்குமுறையும், அதிகாரமும், பண பலமும் ஒன்று சேர்ந்தால் நாடு சுடுகாடாகும் என்பதே கதையின் கரு. “DON’T LOOK UP” என்றோர் ஆங்கில படம், படத்தின் தலைப்பே அடுத்தது என்னவென்று எண்ணத்தூண்டும் கதைக்களம். கதை என்னவோ அறிவியல் சார்ந்தது என்றாலும் அதில் அமெரிக்க அரசியல், ஊடகம் மற்றும் கார்ப்பரேட்களின் உட்ச பட்ச கோர முகத்தை பார்க்கலாம். விண்ணிலிருந்து இராட்சத வால் நட்சத்திரம் வருவதை முன்னறிந்த ஆராய்ச்சியாளர் படத்தின் கதாநாயகன், மெத்த படித்த மேதையாக இருந்தாலும் அதிகாரபீட ஆட்சியாளர் முன் கை கட்டி வாய் பொத்தி நிற்கும் நிலை தான் என்பதை இந்த படத்தின் ஒவ்வொரு காட்சியிலும் காணலாம். ஒட்டு மொத்த உலகையே அச்சுறுத்த கூடிய இயற்கை பேரழிவை தடுக்க பயத்தோடு போராடும் ஆராய்ச்சியாளர்கள். அவர்களை மதிக்காமல் தன் அரசியல் இலாபத்தை மட்டுமே கருத்தில் கொள்கிற அமெரிக்க அதிபர் என கதை நகர்கிறது.

தன்னை எதிர்த்து ஊடகத்தில் சொல்ல நினைத்த ஆராய்ச்சியாளர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யும் அரசு, அந்த ஆராய்ச்சியாளர்களை சமூக வலைதளத்தில் மீம்கள் மூலம் தர்மசங்கட படுத்திவிடும் மக்கள். இறுதியாக மக்கள் மத்தியில் தன் முந்தைய அரசியல் களங்கத்தை போக்க வந்துவிழ இருக்கும் விண்கல்லை விண்வெளியிலேயே தகர்க்க ஏற்பாடுகள் நடக்கும் போது பார்க்கும் நமக்கே அப்பாடா என்று இருக்கும். அங்கே தான் உள் நுழைவார் கார்ப்பரேட். விழும் விண்கல்லில் அரிய உலோகங்கள் இருப்பதாகவும் அதை விண்வெளியில் வெடிக்க வைத்தால் இலாபம் இல்லை என்றும் கணக்கு போடுவார். விண்ணில் ஏவப்பட்ட தகர்க்கும் விண்கலம் திரும்பி பூமிக்கே வந்துவிடும்.அதிகார பீடத்தை ஆட்டும் வல்லமை கார்ப்பரேட்டுகளுக்கு இருக்கிறது. அதற்கு அமெரிக்கா போன்ற வளர்ந்த நாடுகளும் விதிவிலக்கல்ல என்பதை அந்த காட்சியில் அப்பட்டமாக பார்க்கலாம். குழம்பி போகும் கதாநாயகன் “ இந்த பூமியே அழிந்த பிறகு விலை உயர்ந்த உலோகத்தால் என்ன பயன்? “ என்று அந்த சமயத்தில் நம் மனத்தின் குரலை அவர் படத்தில் கேட்பார். இறுதியில் கார்ப்பரேட் திட்டப்படி பூமிக்குள் விழும் விண்கல்லை தகர்க்க முடியாமல் திணரும் திக் திக் நிமிடங்கள் நம் இருதய துடிப்பை அதிகரிக்கும். மக்களை அழியவிட்டு வேடிக்கை பார்க்கும் இலாப வெறி கார்ப்பரேட் காரனும், பதவி பித்து கொண்ட மூளையற்ற அரசியல்வாதியும், எதற்கெடுத்தாலும் களத்தில் இறங்காமல் சமூக வளைதளத்தில் கருத்து சொல்லும் மக்கள் போன்ற அவலங்கள் அமெரிக்காவில் மட்டுமா இருக்கிறது? இறுதியாக பணமும் அதிகாரமும் படைத்தவன் வேறொரு கிரகத்திற்கு செல்வது போலவும், பூமி உருக்குலந்து போவது போலவும் கதையை முடித்திருப்பார் இயக்குனர்.

இந்த படத்தில் கூர்மையாக யோசிக்க வேண்டிய சில விஷயங்கள் அமெரிக்க அதிபர் கதாபாத்திரத்தை ஆணாக இருந்தால் தற்போதைய அல்லது முந்தைய அதிபர்களை ஒப்பிட்டார் என்ற சர்ச்சை படக்குழுவின் மேல் வரக் கூடாதே என்று கதாபாத்திரத்தை பெண் ஆக்கியது.

(அதாவது கொற சொல்றத கூட லாவகமா கவனமா சொல்றாங்களாம்).

அந்த கார்ப்பரேட்டுக்கு ஆதரவாக கதாநாயகனான ஆய்வாளரையே விளம்பர படுத்தி பேச வைத்தது. இறுதியில் வேற்று கிரகத்திற்கு செல்ல இந்த ஆராய்ச்சியாளரை அழைத்த போது உங்களோடு வர தயாரில்லை, நான் இங்கேயே சாகிறேன் என்ற தொனியில் மறுப்பது என DON’T LOOK UP படம் முடிகிறது.

PEOPLE HAVE TO LOOK UP AND DOWN FRONT AND BACK TOO. அனைத்தையும் உற்று கவனிப்போம் ! போராடுவோம்!

Comment here...