ஊழியர் சமூகப் பாதுகாப்பு உரிமைகளைப் பறிக்காதே

23-24 பிப்ரவரி 2022 பொது வேலை நிறுத்தம்

ஜேப்பி

இந்தியத் தொழிலாளி வர்க்கம் நடத்திய ஒன்றுபட்ட போராட்டங்களின் விளைவாக, 1947ம் ஆண்டு இந்திய சுதந்திரத்திற்கு பிறகு உடனடியாக சாதித்த உரிமைகளில் ஒன்று ஈ.எஸ்.ஐ எனப்படும் ஊழியர் மாநில காப்பீடு (Employees State Insurance) சமூகப் பாதுகாப்பு உரிமை. 1948ல் இதற்கென தனிச் சட்டம் இயற்றப்பட்டது.

பத்து, பத்துக்கும் மேற்பட்ட ஊழியர்களை வேலையில் அமர்த்தும் நிறுவனங்களில் இத் திட்டம் அமலாக்கப்பட வேண்டும். தொடர்ச்சியான போராட்டங்களுக்குப் பிறகு மாதம் ரூ. 21,000 வரை ஊதியம் பெறும் ஊழியர்களுக்கு இத் திட்டம் விரிவாக்கப்பட்டுள்ளது. ஊழியர்களும் நிர்வாகங்களும் ஊழியர்களின் சம்பளத்தில் ஒரு பகுதியை மாதந்தோறும் வழங்கி காப்பீட்டுத் திட்ட நிதியைத் (Corpus) திரட்டுகின்றனர். தினக்கூலி ரூ. 176க்கு மேல் பெறும் ஊழியர்களிடம் அவர்கள் பங்கு பிரீமியம் பிடித்தம் செய்யப்படும்.

திட்ட நன்மைகள்

இத்திட்டத்தினால் பல உதவிகள், நன்மைகள் ஊழியருக்கு கிடைக்கின்றன. மருத்துவ உதவி, உடல் நலக் குறைவு மருத்துவச் செலவு, மகப்பேறு உதவி, ஊனமுற்றோருக்கு உதவி, இறந்த ஊழியரைச் சார்ந்திருப்போருக்கு உதவி, வேலையிழப்பை ஈடுகட்டும் அலவன்ஸ், ஈ.எஸ்.ஐ மருந்தகங்கள், மருத்துவமனைகள் எனப் பல வகைகளில் ஊழியர் நலன் காக்கப்படுகிறது. இவை தவிர மருத்துவக் கல்லூரிகள், பல் மருத்துவக் கல்லூரிகளும் ஈ.எஸ்.ஐ.சி.யால் நடத்தப் படுகின்றன.

நல்ல திட்டம் அமலாக்கச் சிக்கல்

லாப நோக்கு கொண்ட நிர்வாகங்கள் தங்கள் பங்கை அளிக்க மறுப்பதால், 70% ஊழியர்களுக்கு சட்டப்படி கிடைக்க வேண்டிய ஈ.எஸ்.ஐ உதவிகள் கிடைப்பதில்லை. சட்டங்களை அமல்படுத்தும் பொறுப்புடைய அரசுத் தொழிலாளர் துறை, தனியார் நிர்வாகங்களின் சட்ட மீறல்களை வேடிக்கை பார்த்துக்கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது.

31 மார்ச் 2021 அன்று, பத்தும் பத்துக்கும் மேற்பட்ட ஊழியருக்கான ஈ.எஸ்.ஐ.யில் காப்பீடு பெறுபவர்கள் எண்ணிக்கை 3.39 கோடி. அதே நாளில் 20, 20க்கு மேல் ஊழியரைக் கொண்ட நிறுவனங்களில் கட்டாயமான வருங்கால வைப்பு நிதிக்கு பங்கு செலுத்துபவர்கள் எண்ணிக்கை 6.9 கோடி. இதை வைத்துப் பார்த்தால் ஈ.எஸ்.ஐ.யில் காப்பீடு பெறுபவர் எண்ணிக்கை இதைவிட குறைந்த பட்சம் இரண்டு மடங்காவது இருக்க வேண்டும். வருங்கால வைப்பு நிதிக்கு கூட 50% நிர்வாகங்கள் பங்கு செலுத்துவதில்லை என்ற அடிப்படையில் பார்த்தால், ஈ.எஸ்.ஐ. திட்டம் பல நிறுவனங்களில் மறுக்கப் படுகிறது என்பது புரியும்.

ஈ.எஸ்.ஐ. சட்டம் கொண்டு வரப்பட்டு எழுபது ஆண்டுகள் கடந்த பின்னரும் நாடு முழுமைக்கும் இது விரிவாக்கப்படவில்லை. எல்லோரையும் ஈ.எஸ்.ஐ. காப்பீட்டுத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்பதே அனைத்து தொழிற்சங்கங்களின் கோரிக்கை. ஈ.எஸ்.ஐ. திட்டத்தை சாலைப் போக்குவரத்து, கட்டுமானம், சுய தொழில் செய்பவர், ஆட்டோ ஓட்டுநர், ரிக்ஷா ஓட்டுநர், இந்திய அரசின் பல்வேறு திட்டப் பணிகளில் பணியாற்றுவோர் என அனைத்து தரப்பு அமைப்புசாரா தொழிலாளர்களுக்கும் விரிவாக்குமாறு 2015ம் ஆண்டு நடைபெற்ற இந்தியத் தொழிலாளர் மாநாடு கேட்டுக் கொண்டது.

ஒன்றிய அரசின் கார்ப்பரேட் ஆதரவு குறுக்கீடு

2014ம் ஆண்டு மோடி அரசு பதவி ஏற்றது முதல் ஈ.எஸ்.ஐ. திட்டத்தை இழுத்து மூட பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. முதலில், திட்ட விதிகளை மாற்றி மருத்துவ உதவியை பல ஊழியருக்கு மறுக்கும் நடவடிக்கை எடுத்தது. ஏற்கனவே நோய் பீடித்து இருந்த பலரை மாதா மாதம் பங்கு அளித்து வந்த போதும் விலக்கியது.

இத்திட்டத்தில் அரசின் பங்கு என எதுவும் கிடையாது. இருந்தாலும் திட்டத்திற்கு மூடுவிழா நடத்திட மோடி அரசு 6.5% மாதாந்திர பங்களிப்பை 4% ஆகக் குறைத்து நிதி திரட்டலுக்கு சிக்கல் ஏற்படுத்தி உள்ளது. ஈ.எஸ்.ஐ. சட்டத்தை மாற்றி இதற்கு பதிலாக மெடிக்ளைம் திட்டம் கொண்டு வரத் துடிக்கிறது.

நாயைக் கொல்வதற்கு முன் அதன் பெயரைக் கெடுக்க வேண்டும் என்ற கூறுவார்கள். அதைப்போல வருங்கால வைப்பு நிதியையும் ஈ.எஸ்.ஐ.யையும் முடக்கிப் போட தனியார் காப்பீட்டு மெடிக்ளைம் திட்டம் கொண்டு வருவதற்கு தோதாக பாஜகவின் நிதி மந்திரி 2015 பட்ஜெட் உரையின் போது இந்த இரண்டு திட்டங்களிலும் தொழிலாளர்கள் பயன் பெற வில்லை; பணயக் கைதிகளாக இருக்கிறார்கள் என்று அபாண்டப் பழி சுமத்தினார்.

ஏதோ ஈ.எஸ்.ஐ. நிறுவனம் நஷ்டத்தில் நடப்பதால் பாஜக அரசு இப்படிச் செய்கிறது என நினைக்க வேண்டாம். 2019-20ம் வருடம் ஈ.எஸ்.ஐ நிறுவனத்தின் வருமானம் செலவை விட ரூ. 9,196 கோடி அதிகம். ரூ. ஒரு லட்சம் கோடிக்கு மேலாக நிதித் தொகை (Corpus) உள்ள நிறுவனம். சமுகப் பாதுகாப்பு குறியீடு (Social Security Code) வரைவில், தேசிய ஆலோசனைக் குழுவிற்கு ரூ. 12 லட்சம் கோடி சமூகப் பாதுகாப்பு நிறுவனங்களிடம் இருந்து மாற்ற வேண்டும் என்ற பாஜக அரசின் பரிந்துரை, தொழிலாளி வர்க்கத்தின் ஒன்றுபட்ட போராட்டத்தின் மூலம் முறியடிக்கப்பட்டது.


ஊழியர்களுக்கும், அவர்தம் குடும்பத்தினருக்கும் நாடு சுதந்திரம் அடைந்தது முதல் பல நன்மைகளை அளித்து வந்த ஈ.எஸ்.ஐ. திட்டத்தைக் குழி தோண்டிப் புதைத்து, அதன் சமாதியில் மெடிக்ளைம் சுகாதாரக் காப்பீடு என்ற பெயரில் தனியார் மற்றும் அந்நிய காப்பீட்டுக் கழகங்களின் பணப்பைகளை நிரப்பத் துடித்துக் கொண்டு இருக்கிற பாஜக அரசு.

எது சமூகப் பாதுகாப்பு – ஈ.எஸ்.ஐ.யா, மெடிக்ளைமா

வேலை இழந்தோருக்கு மாதாந்திர அலவன்ஸ் உட்பட பல உதவிகளை பலன்களை ஊழியர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் ஈ.எஸ்.ஐ. நல்கி வருகிறது. ஆனால், மெடிக்ளைம் விபத்து அல்லது சில குறிப்பிட்ட உடல் நலக் கோளாறுகளுக்கு மட்டுமே. இன்சூரன்ஸ் தொகையை கணக்கில் கொண்டு பிரீமியம் தொகை நிர்ணயம் செய்யப்படும். ஒரு வேளை இன்சூரன்ஸ் தொகை மருத்துவச் செலவை ஈடு கட்ட முடியாதென்றால், மிச்சத் தொகையைக் கட்டினால் மட்டுமே ஊழியருக்கு மருத்துவ உதவியே கிடைக்கும்.

மேலும் ஈ.எஸ்.ஐ.யின் கட்டாயத் திட்ட உதவி என்பது போய் மெடிக்ளைம் விருப்பத் திட்டமாக மாற்றப்படும். இது பாடுபடும் தொழிலாளர்களுக்குப் பாதகமானது. மோடி அரசுக்கும், பாஜகவிற்கும் மறைமுகமாகவும் நேரடியாகவும் பண உதவி, மற்ற உதவிகள் செய்து வரும் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது.

பெற்ற உரிமைகளைப் பறிக்காதே

போராடிப் பெற்ற உரிமைகளான சமூகப் பாதுகாப்பு போன்ற உரிமைகளை பறிக்க நினைக்கும் ஒன்றிய பாஜக அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை நடவடிக்கைகளை இனியும் சகிக்க மாட்டோம், கார்ப்பரேட் தாராளமயக் கொள்கைகளை வாபஸ் வாங்கு எனக்கோரி பிப்ரவரி 23-24, அகில இந்திய வேலை நிறுத்தம் நடக்கிறது. ஒன்றுபடுவோம், போராடுவோம், வெற்றி பெறுவோம்.

One comment

Comment here...