ஐயகோ பாம்பு டோய்

பாரதி

ஆமை புகுந்த வீடு வெளங்காது என்ற ஒரு சொலவடை நாம் அறிந்திருப்போம். அதற்கு சரியான அர்த்தம் என்னவென்றால் – ”ஆமை மிக மெதுவாக ஊர்ந்து வரும் ஓர் உயிரினம்;  அது வீட்டிற்குள் வருவதைக் கூட கவனிக்காமல் வீட்டிலிருப்பவர் இருந்தால், பின் களவு போன்ற பிரச்னைகள் வரும்”.  வீட்டில் அமைதி குலைந்து போகும் என்பதே அந்த கிராமத்து சொலவடை உணர்த்துவது.

ஆமை புகுந்த வீடு எப்படி வெளங்காதோ, அதே போல பாம்பு புகுந்த வங்கிக்கிளை பாதுகாப்பானதா? பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும் என்பார்கள்.  ”ஆனால்  மீண்டும், மீண்டும் பாம்பு புகுந்தும் பயமோ, தடுக்கும் நடவடிக்கையோ எடுக்காத நிர்வாகம் எத்தனை தைரியசாலிகள்!”  என்று வியக்கும் வண்ணம் ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது தமிழ்நாடு கிராம வங்கியில். ஆம், சென்ற ஒரே வாரத்தில் டிஸ்கவரி சேனலில் வருவது போல அடுத்தடுத்து மூன்று  பாம்புகளை வரிசையாக   இரண்டு-மூன்று நாட்கள் இடைவெளியில் விழுப்புரம் மாவட்டம் வளத்தி என்னும் கிளையில் பிடித்து இருக்கிறார்கள்.

வளத்தி கிளை தரைதளத்திலிருந்து சற்று கீழே இருக்கிறது. எனவே மழை பெய்தாலும் அங்கே தண்ணீர் கிளைக்குள் வருவதும், தவளைகள், சிறு பூச்சிகள் வருவதும் இயல்பாகி இருந்தது.  இப்போதோ அதை பிடிக்க பாம்பும் வந்துவிட்டது. எத்தனையோ முறை வேறு கட்டிடம் மாற்ற, கிளையை முழுமையாக சுத்தம் செய்யவென அந்த கிளை மேலளார் கடிதம் அனுப்பியிருக்கிறார். கிளையை முழுவதுமாக  சுத்தம் செய்ய QUOTATION வேண்டும் என்றிருக்கிறார் மண்டல மேலாளர். குப்பையை பெறுக்க கொட்டேஷனா!!! கிளை தரை தளத்தை விட்டு கீழே இருப்பதால் சில சமயங்களில் செப்டிக் டேங்க் நிறைந்து கழிவறையை பயன்படுத்வே முடியாதாம். அந்த சமயத்தில் அங்குள்ள ஊழியர்கள் வாடிக்கையாளர்கள் வீட்டில் சென்று கழிவறையை பயன்படுத்துவார்களாம். என்ன கொடுமை இது!

ஒரு பொதுத்துறை வங்கியில் விஷப்பாம்புகளை அடுத்தடுத்து பிடித்து இருக்கிறார்கள். அங்கே வாடிக்கையாளர்களின் மனநிலை என்னவாக இருக்கும்? ஒரு சணல் கயிறு கீழே கிடந்தாலும் கூட பாம்பு என்று தானே பயம் வரும்? அங்கே பணிபுரியும் ஊழியர்கள் பாம்பு வருதா, தேள் வருதான்னு கீழே பார்த்துகிட்டே வேலை பாக்கமுடியுமா? தொடர்ந்து சந்தித்த பல பிரச்சனைகள் காரணமாக, பல முறை அந்த கிளையின் ஊழியர்கள் தந்த அழுத்தத்தினால் ஒரு வருடத்திற்கு முன்பு புதிய கட்டிடம் பார்த்து ஒப்புதல் வாங்கி அந்த புதிய  கட்டிடத்தில் STRONG ROOM DOOR வைத்து இருக்கிறார்கள்.

தமிழ்நாடு கிராம வங்கியின் நிர்வாகத்தைப் பொருத்த வரை வளத்தி கிளையின் பாதுகாப்பின்மை பிரச்சனையை ஆரப் போட நினைத்திருக்கிறார்களே தவிர அதற்கு முடிவு கட்ட நினைக்கவில்லை. அதனால்தான் கட்டிடம் மாற்ற ஒரு வருடத்திற்கு முன்பே சில முயற்சிகள்  எடுத்திருந்தாலும் இன்று வரை அதை மாற்ற  இறுதி முடிவு எடுக்கவில்லை. ஊழியர்களின் மற்றும் வாடிக்கையாளர்களின் உயிருக்கு ஏற்பட்டுள்ள பாதுகாப்பின்மையை எடுத்துரைத்து அந்த வங்கியின் சங்கங்கள் நிர்வாகத்திடம் உடனடியாக முறையிட்டு ஊழியர்களிடம் தெரியப்படுத்தி உள்ளன. ஒட்டு மொத்த தமிழ்நாடு கிராம வங்கி ஊழியர்களும் இதனால் கொதிப்படைந்ததால்   ஒரு வழியாக வரும் ஜனவரி 19ம் தேதி வளத்தி கிளையை புது கட்டிடத்திற்கு மாற்றப்போவதாக சொல்லியிருக்கிறார்கள் நிர்வாகத்தினர். வளத்தி கிளை மட்டுமல்ல இது போல பாதுகாப்பில்லாத அனைத்து கிளைகளையும் உடனடியாக வேறு பாதுகாப்பான கட்டிடங்களுக்கு மாற்ற வேண்டும் என்பதே எல்லோருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.

Comment here...