ஒரு மறுமலர்ச்சியின் தொடக்கப்புள்ளி முற்றுப்புள்ளி ஆன கதை!

சே.இம்ரான்

1848ல் அன்றைய மராத்திய மாகாணம் பூனேவில் கல்வி மறுக்கப்பட்ட பெண்கள், பிற்படுத்தப்பட்ட மற்றும் தாழ்த்தப்பட்ட சமூகங்களுக்கு கல்வியறிவை நுகரச் செய்ததினால் அன்றைய மேட்டுக்குடி சமூகங்களின் கோப தாபங்களுக்கு ஆளான ஜோதிபா பூலேவும், அவர் மனைவி சாவித்திரிபாய் பூலேவும் சொந்த குடும்பத்தினராலேயே தங்கள் வீட்டிலிருந்து வெளியேற்றப் பட்டனர். அப்போது சமூகத்தின் மூர்க்கத்தனமான எதிர்ப்புகளையும், மிரட்டல்களையும் பொருட்படுத்தாமல் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்தது மட்டுமின்றி, அவர்கள் அப்போது தொடங்கவிருந்த இந்தியாவின் முதல் பெண்களுக்கான பிரத்யேக பள்ளிக்கு கட்டிடமாக தன் வீட்டை ஒப்புவித்த ஒரு வீரமங்கையை நம் வரலாற்று அறிஞர்கள் வரலாற்றின் எந்த பக்கத்திலும் பதிவு செய்யாமல் நம் மீது தீராதொரு பழியை சுமத்தியிருக்கிறார்கள்.

பாத்திமா ஷேக்!

சாவித்திரி பாய் பூலேவின் பெருங்கனவிற்கு வடிவம் கொடுத்து அவருடன் உடனிருந்தவர். அவர் வசித்த வீடு தான் 9 மாணவிகளுடன் தொடங்கப்பட்ட பள்ளி வளாகம். அதன் பின் அந்த பள்ளி மட்டுமல்லாது ஜோதிபா பூலேவின் இதர நான்கு பள்ளிகளுக்கும் ஆசிரியையாக செயல்பட்ட பாத்திமா ஷேக் பழங்குடி மாணவர்களுக்கான முதல் நூலகத்தை தன் வீட்டில் தொடங்கினார். அதோடு நில்லாமல் பெண் குழந்தைகள் உள்ள ஒவ்வொரு வீடாக சென்று நவீன கல்வியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தி எதிர்ப்பு தெரிவித்த பெற்றோர்களின் குழந்தைகளையும் கல்வியின் பால் ஈர்த்தார். இவற்றிற்கெல்லாம் தான் சந்தித்ததை விடவும் அதிக எதிர்ப்புகளை பாத்திமா ஷேக் சந்தித்ததாக சாவித்திரி பாய் தனது கணவருக்கு எழுதிய  கடிதங்களில் குறிப்பிடுகிறார். ஆம்! தாழ்த்தப்பட்டவர்களுக்கு கல்வி கற்பித்ததின் மூலம் இந்து சனாதன வாதிகளின் எதிப்புக்குள்ளான அவர், இஸ்லாமிய பெண்களுக்கு மார்க்க கல்வியை விடுத்து நவீன கல்வியை அறிமுகப்படுத்தியதன் விளைவாக இஸ்லாமிய குருமார்களின் கோபத்துக்கும் உள்ளானார். சாவித்திரி பாயின் கடிதங்கள் வழி மட்டுமே இவரைப் பற்றிய தகவல்கள் கிடைக்கப் பெற்றதனால் இவரின் பிற்கால வாழ்க்கையைப் பற்றி எந்த குறிப்பும் இல்லை.

இந்திய சமூகத்தின் மறுமலர்ச்சி நாயகர்கள் என்று ராஜாராம் மோகன் ராய்களையும், தயானந்த சரஸ்வதிகளையும் வரலாற்றுப் பக்கங்களில் நிரப்பிய  வரலாற்று ஆசிரியர்கள் அதே சமகாலத்தில் வாழ்ந்து நம் சமூக மறுமலர்ச்சிக்கு வித்திட்ட சாவித்திரி பாய்-பாத்திமா ஷேக்களுக்கு வரலாற்றின் ஒரு பக்கத்தைக் கூட ஒதுக்காததேன்?  இந்திய வரலாறு என்பது இங்கு யாரால், யாருக்காக எழுதப்பட்டது என்ற சுடும் உண்மையை நமக்கு விளக்கும் சான்றுகள் இது.

இடதுசாரி இயக்கங்களும், பகுஜன் அமைப்புகளும் தொடர்ந்து எடுத்துச் சென்ற பிறகே  பரவலாக இளைஞர்களிடம் சென்று சேர்ந்திருக்கிறார். சாவித்திரி பாய். மக்களிடம் செல்வாக்கு பெற்றுவிட்டார் என்று ஊர்ஜிதம் ஆன பின்னரே 2020ம் ஆண்டு முதல் முறையாக ஓர் இந்திய பிரதமர் அவர் பிறந்தநாளுக்கு தலை வணங்குவதாக அறிவிக்கிறார்.

தாமதமாகவே கிடைத்தாலும் சாவித்திரி பாய்க்கு கிடைத்த அந்த அங்கீகாரம் கூட இன்னும் பாத்திமா ஷேக்கிற்கு கிடைக்காததின் காரணிகளை உங்கள் ஆராய்ச்சி முடிவுகளுக்கே விட்டு விடுகிறேன். 1875ல் அலிகார் பல்கலைக்கழகத்தை தோற்றுவித்ததின் மூலம் இந்திய நவீன கல்வியின் முன்னோடியாக சர் சையத் அஹமத் கானை கௌரவித்த கல்வியாளர்களும், இஸ்லாமிய அறிஞர்களும் கூட 1848லேயே பெண்களுக்கான பள்ளி தொடங்கியவரிடம் பாராமுகம் காட்டியதேனோ?

இந்திய பெண்கள் அடிமைப் பட்டிருந்த காலத்தில் அவர்கள் கைகள் புத்தகமேந்த வேண்டுமென பெருங்கனவு கண்டார் பாத்திமா ஷேக். இன்று பெண்கள் எளிதாக தங்கள் கைகளில் புத்தகமேந்த முடியும். ஆனால் அவருக்கான எந்த பக்கமும் அதில் இல்லை என்பது ஒரு வரலாற்றுத் துரோகம்!

(ஜனவரி 9- பாத்திமா ஷேக்கின் பிறந்த தினமாக அனுசரிக்கப்படுகிறது)

6 comments

  1. It’s time to celebrate unsung heros of history. Thanks for bringing out one such gem, Imraan sir.

  2. வரலாற்று துரோகம்.சரியான வார்த்தை.மறைக்கப்பட்ட வரலாற்றை வெளியே கொண்டு வர வேண்டும். வாழ்த்துக்கள் ரவீந்திரன்

  3. சே. இம்ரான் அவர்களுக்கு வாழ்த்துக்கள்

  4. வரலாற்றின் அறியப்படாத பக்கங்களை திறந்ததற்கு வாழ்த்துக்கள் தோழர் 💐

Comment here...