ஜி.புருஷோத்தமன்
கிரிப்டோகரன்ஸி (கி.க.) ஒரு டிஜிட்டல் கரன்ஸி. பணம் அச்சிடப்படுவது போல் இது அச்சிடப்படுவதில்லை. ஏனெனில் இது எந்த நிர்வாகத்தாலும் நிர்வகிக்கப்படுவதில்லை. இதை கணினியில் மட்டுமே பார்க்கமுடியும். மற்ற நோட்டுக்களைப் போல அல்லாமல் இது எல்லா நாடுகளிலும் புழங்க முடியும், செல்லுபடியாகும், செலாவணிக்காக பயன்படும். இதனைப் பெற ஒரு கணினி, இணைய இணைப்பு, ஒருகைப்பேசி இருந்தால் போதும்.
முதல் கி.க. பிட்காயின் (பி.கா.) 2009 வாக்கில் சடோஷி நாகமோட்டோ என்ற புனைப் பெயரில் ஒருவரால் உண்டாக்கப்பட்டது என்று நம்பப்படுகிறது. ஒரு பி.கா. இன்றைய மதிப்பு ரூ.35,19,044 (30.12.2021). 2011இல் இதன் மதிப்பு சில டாலர்கள் மட்டுமே. இந்த அசுர வளர்ச்சியே லாபவேட்கை உந்தப்பட்ட மனிதர்களை இதன் பால் ஈர்த்து வளர்ந்து கொண்டிருக்கிறது.
சராசரி வங்கிக் கணக்கில் ஏற்படும் செலவினங்கள், வருமான வரி போன்றவை இதில் இல்லை என்ற கூடுதல் விஷயங்கள் இதன் மதிப்பை இன்னும் அதிகமாக்குகின்றது. தற்போது பி.கா., ஏதிரியம், டீதர், பிஎன்பி காயின், கார்டானோ, சோலோஹா போன்ற நூற்றுக்கும் மேற்பட்ட கி.க.கள் உலகத்தில் புழங்குகின்றன. இதில் பி.கா. முதன்மையாக இருக்கின்றது.
இந்த கி.க. பரிவர்த்தனைக்கு சந்தையில் முதலீடு செய்ய சில கிரிப்டோ இணைய தளங்கள் உள்ளன. பினானஸ், BITFNEX, BITHUMB, COINBASE, COINDCX, ZEBPAY, UPBIT போன்றவை சில. காய்ன்ஸ்விட்ச் குபர் என்ற பெங்களூரு நிறுவனம் நூற்றுக்கு மேற்பட்ட கி.க.க்களை பயனர்கள் வர்த்தகம் செய்ய அனுமதிக்கிறது. ஒரு மொபைல் போன் நம்பர் மட்டும் போதும். சுலபமாக பதிவு செய்து முதலீடு செய்து கொள்ளலாம். இதைப்பற்றி மேலும் தெரிந்துகொள்ள ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.
முதலீடு செய்யப்படும் பணம் பங்குச்சந்தையில் செய்யும் முதலீடு போல வளர்ந்தோ அல்லது தேய்ந்தோ உருமாற்றம் அடைகிறது. இந்த கி.க. தனிநபர் தகவல் பாதுகாப்பு (encrypted data Security) என்ற முறையில் பாதுகாக்கப்படுவதால் எல்லோரும் இதன்பால் ஈர்க்கப்படுகிறார்கள். இதன் இணையம் 365 நாட்களும், 24 மணி நேரமும் திறந்திருக்கும். பல பெரும் செல்வந்தர்கள் பல கோடிக்கணக்கான டாலர் சொத்துக்களை இதில் சேமித்து வைத்துள்ளனர்.
“கி.க. சட்டவிரோத பொருளாதார நடவடிக்கைகளுக்கு பயன்படுகிறது. கி.க.யில் ஈட்டப்படும் லாபம், பயங்கரவாத நடவடிக்கைகளில் ஈடுபடும் இயக்கங்களுக்கு பொருளுதவி செய்வதற்கு பயன்படுகிறது” என்று ஜானெட் லூய்ஸி யெல்லன் என்ற அமெரிக்க பொருளாதார வல்லுநர் கூறியிருக்கிறார். ”ஆள்கடத்தல் மற்றும் பயங்கரவாதத்தில் ஈட்டப்படும் பணம் கி.க.வில் மேலும் முதலீடு செய்யப்படுகிறது” என்று பெர்க்ஷைர் ஹதாவே நிறுவனத்தின் துணைத் தலைவர் சார்லி முங்கர் கூறியுள்ளார். ”பி.கா. மூலமாக பணம் பட்டுவாடா செய்பவர்களில் சில பிரிவினர் இதன் மூலம் போதைப் பொருட்களை வாங்க, தேர்தல் சமயங்களில் சட்ட விரோத நடவடிக்கைகளில் ஈடுபட பயன்படுத்துகிறார்கள்” என்று நியூயார்க் டைம்ஸ்ன் பால் க்ருக்மேன் கூறுகிறார். இத்தகைய குற்றச்சாட்டுகள் எழுவதினாலும் பொதுவான நிர்வாகம் எதுவும் இல்லாததினாலும் பெரும்பான்மையான அரசுகள் இதனை விரும்புவதில்லை.
சீன அரசு கடந்த செப்டம்பர் மாதம் கி.க.களை தடை செய்தது. அந்த அரசு நாட்டின் செலாவணி பரிமாற்றம், அச்சிடல் போன்ற வேலைகளை மத்திய வங்கி மூலம் செய்கிறது. பரிமாற்றத்தின் ஒரு பகுதி கட்டுப்பாட்டுக்குள் வராத கி.க. மூலம் நடந்தால் வருமான இழப்பு நேரும் என்று அரசுகள் அஞ்சுகின்றன.
இந்தியாவில் சில கோடி பேர் கி.க. வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. பி.கா. வடிவம் (Emblem) ஏற்புக்கான Code வெளிவந்தவுடன் அதைப்பற்றிய google தேடலில் ஈடுபட்ட நாடுகளில் இந்தியா முதலிடம் வகிக்கிறது.
நமது நாட்டில் ரிசர்வ் வங்கி கி.க. விற்கு 2018ஆம் அண்டு தடை விதித்தது. அதற்கு மாற்றாக சில முன் மொழிவுகள் மேற்கொள்ள ஒன்றிய அரசால் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால் எதுவும் நிறைவுறாத நிலையில் 2020 மார்ச் மாதம் உச்ச நீதிமன்றம் கி.க. மீதான தடையை ரத்து செய்தது.
ஒன்றிய அரசு இதைப்பற்றி ஒரு விரிவான ஆய்வு நடத்தி இதனை முறைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை அசுர வேகத்தில் எடுக்க வேண்டும்.
நேர்மையான அரசாக இருந்தால் தானே..ரவீந்திரன்
ஒரு உத்தேசமான புரிதலே கிடைக்கிறது !
நன்றி 🙏