ஜேப்பி
அன்றொரு காலம்
புவி குளிர்ச்சி
அடைய ஆரம்பித்தது
கிழக்கு ஆப்பிரிக்க
வெளிப்புறக் காடுகள்
கனம் குறைந்து
கனி குறைந்து
புல் பாலை வெளிகளாய்
மாறத் துவங்கின
கனி உண்ணும்
குரங்குக் குடும்பம் சில
மரத்தை விட்டு
கீழே இறங்கி
நடையாய் நடந்து
உணவிற்காக அலைந்தன
கைகள் அளவில்
சிறுக்கவும்
கட்டைவிரல் கோணத்தில்
இணையவும்
கால்கள் அளவில்
நீளவும்
பாதம் வளையவும்
வளைந்த முதுகு
நிமிரவும்
மூளை அளவில்
பெருக்கவும்
கனி கிடைக்காத
பொழுது
குச்சிகளால்
கிழங்கை நோண்டி
உணவைத் தேடி
வெல்வதில்
பிழைத்தவை
தனது மரபிற்கு
இவற்றை அணுவெனக்
கடத்தின
கிழங்கும் இலையும்
கிடைக்காத
நாட்கள்
வேட்டையின்
தேவையை
உணர்த்தின
வேட்டையாடவும்
வேட்டையாகாமல்
இருக்கவும்
கூட்டாக இருக்க
இயங்க வேண்டும்
இந்தக் கூட்டு வாழ்க்கை
மனித சமூகக்
கலாச்சாரமானது
கலாச்சாரத்தின் உச்சமாக
தனக்குத் தானே
முத்திரை அளித்துக் கொண்ட
முதலாளித்துவத்தின்
சுயலாப வெறிக்கு
சக மனிதன் மட்டுமல்ல
இயற்கையும்
கைதியாகி விட்டது
புவியும் வெப்பமடையத்
துவங்கிவிட்டது
ஒரு சதவிகித மனிதன்
ஆட்டிப் படைக்கிறான்
உலகத்தையும்
உலகச் செல்வத்தையும்
மரமிறங்கி வந்த நாம்
மனமிரங்க மறுப்பதேன்
கூட்டு வாழ்க்கைக்
கலாச்சாரம்
காலாவதி ஆகிவிட்டதா
இல்லை முதலாளித்துவம்
மனித மாண்புகளை
மரணிக்க வைத்ததா
காடுகள் அழிந்த
காலத்தில் உருவான
மனித இனத்திற்கு
அல்லவா தெரியும்
காடுகளின் பெருமை
தேவை இப்பொழுது
ஒரு புதிய கலாச்சாரம்
நாம் வாழ
பிற அனைத்தையும்
வாழ வைப்போம்
அருமையான பதிவு
கவிதை சிறப்பு💐