க.சிவசங்கர்
ஒவ்வோர் ஆண்டும் இரண்டு முறை நடத்தப்படும் ரிசர்வ் வங்கியின் நிதி ஸ்திரத்தன்மை (Financial Stability) குறித்த ஆய்வின் 24 வது அறிக்கை சென்ற மாத இறுதியில் வெளியானது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி, நிதிப்பற்றாக்குறை அளவு மற்றும் சில்லரை பணவீக்கம் போன்ற அம்சங்களைக் கணக்கில் கொண்டு இந்த ஆய்வு நடத்தப்படுகிறது.
இந்த ஆய்வு அறிக்கை நாட்டின் நிதித்துறை குறித்து கீழ்க்காணும் முக்கிய அம்சங்களைச் சுட்டிக்காட்டுகிறது.
- வங்கித் துறையில் கடந்த வருடம் செப்டம்பர் மாதம் 6.9 சதவீதமாக இருந்த வராக்கடன் வீதம், இயல்பான சமூகப் பொருளாதாரச் சூழலில் இந்த வருடம் செப்டம்பர் மாதத்திற்குள் 8.1 சதவீதமாக அதிகரிக்கும். இயல்பு நிலையை மீறிய அதிதீவிர நெருக்கடியான சூழலில் இதன் அளவு 9.5 சதவீதமாக இருக்கும்.
- குறிப்பாக கடந்த ஆண்டோடு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பொதுத்துறை வங்கிகளில் வாராக்கடன் அளவு 8.8 சதவீதத்திலிருந்து 10.5 சதவீதமாகவும், தனியார் வங்கிகளில் இதன் அளவு 4.6 சதவீதத்திலிருந்து 5.2 சதவீதமாகவும், வெளிநாட்டு வங்கிகளில் 3.2 சதவீதத்திலிருந்து 3.9 சதவீதமாகவும் உயரக் கூடும்.
- வங்கிகளின் மூலதனத் தகுதி வீதம் (Capital Adequacy Ratio) இயல்பான சமூகப் பொருளாதார நிலையில் 15.4 சதவீதமாகவும், சற்று நெருக்கடியான கட்டத்தில் 14.7 சதவீதமாகவும், தீவிர நெருக்கடி மிகுந்த சூழலில் 13.8 சதவீதமாகவும் இருக்கும். கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இதன் அளவு 16.3 சதவீதமாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் நாட்டில் உள்ள அனைத்து வணிக வங்கிகளும் தீவிர நெருக்கடியான சூழலிலும் குறைந்தபட்ச மூலதனத் தகுதி அளவான 9 சதவீதத்தை விட கூடுதலாக இருக்கும் என்று தெரிய வருகிறது.
- தனியார் வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்களைக் காட்டிலும், பொதுத்துறை வங்கிகள் எதிர்கொள்ளும் சவால்கள் அதிகமாக இருக்கும். குறிப்பாக சமீபத்தில் ஒன்றுடன் ஒன்று இணைக்கப்பட்ட பொதுத்துறை வங்கிகள் அவ்வாறு இணைக்கப்படாத மற்ற பொதுத்துறை வங்கிகளைக் காட்டிலும் அதிக சவால்களைக் சந்திக்க நேரிடும்.
- நிதித் துறையில் வங்கிகளைக் கடந்து, காப்பீட்டுத்துறை மற்றும் மியூச்சுவல் பண்ட் நிறுவனங்கள் பெரிய அளவிலான நிதி வழங்குனர்களாக (Fund Providers) இருப்பார்கள்.
- வங்கி சாரா நுண்நிதி நிறுவனங்கள் இந்த துறையின் மிகப்பெரிய நிதி பெறுபவையாக (Fund Receivers) இருக்கும். எனவே அந்த நிறுவனங்களின் நிதிக் கொள்கைகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு அவற்றின் நலன் உத்தரவாதப்படுத்தப்பட வேண்டும்.
- உலக அளவில் க்ரிப்டோ கரன்சிக்களின் வரவு பெருகியுள்ளது. மிகப் பெரிய ஊக வணிகமான இவை அவற்றின் வாடிக்கையாளர்களுக்கு பெரிய அளவிலான பண இழப்பை ஏற்படுத்தக் கூடியவையாகும். மேலும் இவை நாட்டின் இறையாண்மைக்கு எதிரான தீவிரவாத நடவடிக்கைகளுக்கு பெருமளவில் பயன்படுத்தப்படும் வாய்ப்பு உள்ளதால் நாட்டின் நிதி ஸ்திரத்தன்மையை பாதிக்காத வகையில் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
மேலும் இந்த அறிக்கையை வெளியிட்டுப் பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ், இந்தியாவில் உள்ள நிதி நிறுவனங்கள் கடும் பேரிடர் மிகுந்த இந்த காலகட்டத்திலும் கூட மீள் தன்மையுடைய வகையிலான கட்டமைப்புகளைக் கொண்டுள்ளது என்றும், அனைத்து வங்கிகளும் அதிதீவிர நெருக்கடியான காலகட்டத்தையும் சமாளிக்கும் வகையில் குறைந்தபட்ச மூலதனத் தகுதியோடு செயல்படும் அளவிற்கு வலுவாக உள்ளது என்றும் கூறினார். மேலும் நாடு முழுவதும் தடுப்பூசிகள் செலுத்தப்பட்ட எண்ணிக்கை குறிப்பிடத்தகுந்த அளவில் உயர்ந்துள்ளதாலும், கொரோனா இரண்டாம் அலையின் தீவிரத்தன்மை குறைந்து இருப்பதாலும் தொழில் முனைவோர் மத்தியில் நேர் மறையான நம்பிக்கையும், வாடிக்கையாளர்கள் மத்தியில் நம்பகத்தன்மையும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார். எனினும் கொரோனாவின் புதிய உருமாற்றமான ஓமைக்ரான் பாதிப்பினால் இந்தியப் பொருளாதாரம் மற்றுமொரு கடினமான காலகட்டத்தை எதிர்நோக்க வேண்டிய தேவை இருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை என்றும் ரிசர்வ் வங்கி ஆளுநர் சுட்டிக்காட்டியுள்ளார்.
So what they are getting profit by squeesing ordinary citizens wh0 hod accounts as SMS Charges, ATM Charges, this charge that charge and banks have committee to explore avenue to new types of charges. So We adjust those NPAs with this additional profit. (New Generation Banking System- Collective Swindling)