கூட்டுறவு வங்கி ஊழியர்களின் உரிமைகளை பறிக்காதே

இ. விவேகானந்தன்

கொரானாவை காரணம் காட்டி மத்திய அரசினை பின்பற்றி,  தமிழக அரசு ஊழியர்களுக்கு ”ஆறு மாதத்திற்கு ஒரு முறை வழங்கப்பட்டு வரும் பஞ்சப்படி உயர்வுத்தொகையையும்,  ஈட்டிய விடுப்பில் சேமிப்பில் உள்ள நாட்களில் ஆண்டொன்றுக்கு 15  நாட்கள்//இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை 30 நாட்கள்  விடுப்பு ஒப்படைப்பு செய்தும் பணம் பெற்றுக்கொள்ளும் இரண்டு பயன்களையும்” நிறத்தி வைத்து முந்தைய அதிமுக அரசு ஆணை பிறப்பித்தது.

இதனைப் பின்பற்றி கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அனைத்து கூட்டுறவு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கப் பணியாளர்களுக்கும், மேற்படி இரண்டு பயன்களையும்  நிறுத்திட வெளியிட்ட சுற்றறிக்கையின் படி 2020 ஜனவரி 1 முதல் பணப் பயன்களை கூட்டுறவு வங்கி ஊழியர்கள் யாரும் இன்று வரை பெற முடியவில்லை.

ஒப்பந்தத்தை மீறும் செயல்

தமிழகத்தில் பணிபுரியும் மத்திய, மாநில, நகர கூட்டுறவு வங்கி ஊழியர்களின் ஊதிய உயர்வு மற்றும் இதர சலுகைகள்  இந்திய தொழிற்தகராறு சட்டம்-1947 ன்படி அந்தந்த வங்கி நிர்வாகங்களுடன், தமிழக அரசு தொழிலாளர் துறை ஆணையர் முன்னிலையில், 12(3) ஒப்பந்தங்கள் மூலம் நிர்ணயிக்கப்படுகின்றன. கூட்டுறவு வங்கி ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பை பணமாக்கல், பஞ்சப்படி உயர்வு ஆகிய பயன்களை நிறுத்துவது, அரியர்ஸ் தொகையை மறுப்பது  என்பது 12(3) ஒப்பந்தத்தை மீறும் செயலாகும்.  

கூட்டுறவு வங்கி ஊழியர்களின் பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பை பணமாக்கல் போன்றவை எந்த வகையிலும் தமிழக அரசின் நிதிச் சுமையை பாதிக்காத ஒன்றாகும்.. தமிழக அரசு ஊழியர்களின் பணி நிலைமைகள் வேறு, கூட்டுறவு வங்கிகளில், சங்கங்களில் பணியாற்றும் ஊழியர்களின் பணி நிலைமைகள் வேறு. தமிழக அரசு பெறும் அனைத்து முன்னேற்றகரமான பயன்களை கூட்டுறவு வங்கி/சங்கப் பணியாளர்கள் பெறுவது கிடையாது. 

உயர்நீதி மன்றத்தில் வழக்கு

பஞ்சப்படி, ஈட்டிய விடுப்பை பணமாக்கல் ஆகிய பயன்களை பெற்றிட சென்னை உயர்நீதிமன்றத்தில் இந்திய வங்கி ஊழியர் சம்மேளனத்தின் உறுப்பு சங்கமான கூட்டுறவு வங்கி ஊழியர் சம்மேளனம்  (தமிழ்நாடு) வழக்கு தொடுத்துள்ளது.

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தி, ”கூட்டுறவு வங்கி ஊழியர்களின் உரிமைகளை பறிக்காதே” என்று முழக்கமிட்டு சென்னையில் மாநிலம் முழுவதுமிருந்து திரளான கூட்டுறவு வங்கி ஊழியர்கள் 20.12.2021 அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தர்ணா போராட்டம் நடத்தினர். 

கூட்டுறவு வங்கி / சங்க ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகள் உடனே நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.

One comment

  1. You don’t understand our character by this article. WE have change all labour related acts as 4 Codes. This is nothing for us. You are making an appeal that it is your expectation (anticipation)

Comment here...