தேசிய பணமாக்கல் திட்டத்தை கைவிடுக

ந. ராஜகோபால்

நமது பாரத பிரதமர் மோடி அவர்கள் மகாகவி பாரதியின் வீரம் செறிந்த கவிதைகளை, நாட்டுப்பற்று பாடல்களை தமது உரையில் மேற்கோள் காட்டுவதை நம்மில் பலர் கேட்டிருக்கக்கூடும். மகாகவி பாரதியின் நூற்றாண்டு நினைவு தினத்தன்று ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் எட்டயபுரத்திற்கு சென்று அஞ்சலியை செலுத்தி இருக்கின்றார்.  இருப்பினும் மகாகவியின் வழியில் இவ்வரசு செயல்படுகிறதா? “நல்லதோர் வீணை செய்தே அதை நலம் கெட புழுதியில் எறிவதுண்டோ” என்ற மகாகவியின் பாடல் தற்போது ஒன்றிய அரசு பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்ப்பதற்கு அப்படியே பொருந்தும்.

நமது நாட்டில் 1991 முதல் இருந்து நவீன தாராளமய கொள்கைகளை தீவிரமாக நடைமுறைப்படுத்த ஒன்றிய அரசுகள் முயன்று வருகின்றன. இடதுசாரிகளின் மற்றும் தொழிற்சங்கங்களின் கடுமையான எதிர்ப்பினால் இவ்வளவு காலமும் ஆட்சியாளர்களால் முழுமையாக நவீன தாராளமயத்தை அமல்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒற்றை நோக்கம்

1991 முதலே கேந்திர விற்பனை, தனியார்மயம், பங்கு விற்பனை, பணமாக்கல் என பல பெயர்களில் அரசு சொத்துக்களை தனியாருக்கு மடைமாற்றம் செய்வதுதான் ஆட்சியாளர்களுடைய கொள்கை ஆகிப்போனது.

கேந்திர விற்பனை என்றால் அரசு நிறுவனங்களை அப்படியே தனியாருக்கு கை மாற்றுவது. விஎஸ்என்எல், பால்கோ இப்பொழுது ஏர் இந்தியா உள்ளிட்ட 13 நிறுவனங்கள் இவ்வாறாக தனியார் வசம் விற்கப்பட்டன.

தனியார்மயம் என்றால் 51 சதவிகிதத்திற்கு கீழாக அரசின் பங்குகள் குறைக்கப்பட்டு அதன் தன்மை மாற்றப்படும். அரசு இளைய பங்காளியாய் தொடரும்.

பங்கு விற்பனை என்பது அரசின் வசமுள்ள 100 சதவிகித பங்குகளில் ஐந்து சதவிகிதமோ பத்து சதவிகிதமோ பொதுமக்களுக்கு விற்க ஆரம்பிப்பார்கள். பின்னர் இதுவே 25%, 40% என பங்குகளை விற்பதற்கான வழிவகை செய்யப்படும். இப்பொழுது எல்ஐசி பங்கு விற்பனை பேசப்படுகிறது.

பணமாக்கல் என்பது இன்றைய பாஜக அரசின் புதிய உத்தி. பொதுச் சொத்துக்களை தனியார்களுக்கு குத்தகைக்கு விடுவதுதான் பணமாக்கல் திட்டம். நெடுஞ்சாலை, ரயில் தடங்கள், ரயில் நிலையங்கள், ரயில் வண்டிகள், மின் பகிர்வு, தொலைத்தொடர்பு, மின் உற்பத்தி, இயற்கை எரிவாயு குழாய், சேமிப்பு கிடங்குகள், சுரங்கங்கள், விமான தளங்கள், துறைமுகங்கள், விளையாட்டு மைதானங்கள் என்று இந்தியாவின் அனைத்து பொதுச் சொத்துக்களையும் தனியார் வசம் ஒப்படைத்து அதன் மூலம் பணம் ஈட்டுவதே தேசிய பணமாக்கல் திட்டம்.

எப்படிப் பார்த்தாலும் ஆட்சியாளர்களின் ஒற்றை நோக்கம் என்பது அனைத்து பொதுச் சொத்துக்களையும் தனியார் (உள்நாட்டு, வெளிநாட்டு) வசம் ஒப்படைப்பதே.

1931 இல் நடைபெற்ற கராச்சி காங்கிரஸ் “கேந்திர தொழில்கள் அரசின் கைகளில் இருக்கும்” என்று அறிவித்தது. காரணம் அன்று மக்கள் மத்தியில் இருந்த எழுச்சியின் பிரதிபலிப்பு.  ஆனால் இன்று ஆட்சியில் இருப்பவர்கள் பொது துறைகள் சாகப் பிறந்தன என்று கூறுவதை நாம் காணமுடிகிறது.

தனியார் மயம்

1991 முதல் இன்றுவரை விற்கப்பட்ட மொத்த பொதுத்துறை பங்குகளில் 60.85 சதம் திருவாளர் மோடி ஆட்சியில் விற்கப்பட்டது. அதேபோல் 28 நிறுவனங்களை தனியாருக்கு மொத்தவிற்பனை செய்ய கடும் முயற்சி செய்து வருகிறார்கள். அரசின் 41 ஆயுத தளவாடங்கள், எச்.ஏ.எல், பாரத் எர்த் மூவர்ஸ், கட்டுமானம், விமானம், துறைமுகங்கள், ரயில்வே உற்பத்தி பிரிவுகள், வங்கி, பொதுக் காப்பீடு, எண்ணை நிறுவனம், கப்பல் கழகம், ஐஆர்சிடிசி ஆகியனவும் மொத்த விற்பனைக்கு தயாராகி வருகின்றன.

சமூக அடித்தள கட்டுமானத்தில் 2019-20 முதல் 2024-25 க்குள் ரூபாய் 102 லட்சம் கோடி முதலீடு செய்யப் போவதாக அறிவித்துள்ளார்கள். அதற்கு தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் ரூ. 6 லட்சம் கோடி திரட்டப்படும் என்று ஒன்றிய அரசு கூறுகிறது. இதற்கு தேசிய அடித்தள கட்டுமான வழித்தடம் என்று பெயர்.

அந்த ரூபாய் 6 லட்சம் கோடியை பல அரசுத் துறைகளை குத்தகைக்கு விட்டு தேசிய பணமாக்க திட்டத்தில் சேர்க்க உள்ளனர்.

 (ரூபாய் கோடியில்)

துறைதொகை%
சாலை16020027
ரயில்15249625
மின்பகிர்வு452008
மின் உற்பத்தி398327
இயற்கை வாயு குழாய்214624
இயற்கை வாயு தயாரிப்பு பொருள்225044
தொலை தொடர்பு கோபுர்ங்கள்351006
சேமிப்பு கிடங்குகள்289005
சுரங்கம்287475
விமானதளம்207823
துறைமுகம்128282
மைதானங்கள் காலனிகள்114502
நகர்புற ரியல் எஸ்டேட்150002
 600000100

2021-22 முதல் 2024-25 வரை நாலாண்டுகளில் ஆண்டுதோறும் குத்தகையாக கிடைக்கும் தொகை

 வருடம்ரூபாய் கோடியில்
2021-2288190
2022-23162422
2023-24179544
2024-25167345
மொத்தம்597501

தேசிய பணமாக்கல் திட்டம் மூலம் அரசின் பொதுச் சொத்துக்களை தனியாருக்கு மடை மாற்றம் செய்வதென்பது தேச நலனுக்கு எதிரானது. நுகர்வோருக்கான கட்டணம் பன்மடங்கு உயரும். தனியார் நிறுவனங்களின் லாப வேட்கைக்கு பொது மக்கள் இரையாக்கப்படுவார்கள்.  பெரும்பான்மையான மக்கள் தங்களது வாழ்நிலையை பொருளாதார ரீதியாக இழக்க நேரிடும். அதே சமயம் இன்னொரு புறம் இப்படித் திரட்டப்படும் பணம் அடிப்படை கட்டமைப்பை உருவாக்கப் பயன்படும் என்று மக்களை திசை திருப்ப முயல்கிறது ஒன்றிய அரசு.

கார்ப்பரேட் வரிச் சலுகை

இந்தத் திட்டப்படி ஆண்டுக்கு ரூபாய் 1.5 லட்சம் கோடி திரட்ட முடிவு. ஆனால் 2019ல் நிதிநிலை அறிக்கையில்,  நிதி அமைச்சர் கார்ப்பரேட் வரி 30 சதவீதத்தில் இருந்து 22 சதவீதமாக குறைத்ததின் மூலம் ஒவ்வொரு ஆண்டும் அரசுக்கு ரூபாய் 1.45 லட்சம் கோடி வருமானம் இழப்பு ஏற்பட வழி வகை செய்துள்ளார். ஒருபுறம் பணத்தை திரட்ட அரசு தன் வசம் உள்ள பொதுச்சொத்துக்களை தனியாருக்கு தாரை வார்ப்பதும் மற்றொருபுறம் பெரும் தொழிலதிபர்களுக்கு கார்ப்பரேட் வரியை குறைத்து வருவதும் இந்த அரசின் கொள்கை என்பது தனியார் பெரு முதலாளிகளுக்கு சாதகமாக இருப்பதை காணமுடிகிறது. அதேபோல் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல் விலையை தொடர்ந்து உயர்த்தி மக்களை சிரமத்திற்கு உள்ளாக்கும் இந்த அரசு பெரும் தொழில் நிறுவனங்களின் கோடிக்கணக்கான ரூபாய் வாராக் கடனை தள்ளுபடி செய்கிறது.

தேசிய பணமாக்கல் திட்டத்தை உடனடியாக கைவிட வேண்டும் என்று தொழிலாளி வர்க்கம் ஒன்றுபட்டு குரலெழுப்ப வேண்டும்.

2 comments

  1. Well written. தேசிய பணமாக்கல் திட்டம் கார்ப்பரேட் முதலாளிகளுக்கு லாபம் பெற வழி வகுக்கும் என்ற இச்செய்தி எல்லா மக்களுக்கும் போய் சேர வேண்டும்.

Comment here...