People walk out from Bank of Baroda in New Delhi, India, September 18, 2018. REUTERS/Adnan Abidi

பாங்க் ஆப் பரோடா – கொரானாவால் இறந்த ஊழியர் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம்

ஜேப்பி

“குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்”

பொதுத் துறை வங்கியான பாங்க் ஆப் பரோடா தனது ஊழியர்களின் நலன் காக்க “குழு ஆயுள் காப்பீடு – காலத் திட்டம்” (Group term life insurance for employees) ஒன்றைச் செயல்படுத்தி வருகிறது.  இத்திட்டம் ஒவ்வொரு வருடமும், நவம்பர் 1 தேதி முதல் அடுத்த வருடம் அக்டோபர் 31 தேதி வரை செயல்படும். இத்திட்டம் அவ்வங்கியில் பணி புரியும் சுமார் 80000 ஊழியர்களுக்கும், அதிகாரிகளுக்கும், மற்றும் இந்தியாவில் பணி புரியும் ஒப்பந்த, குறிப்பிட்ட கால பணியில் (fixed term employment) உள்ள பணியாளர்களுக்கும் பொருந்தும்.

எல்ஐசி நிறுவனம் இந்தக் “குழு ஆயுள் காப்பீடு” திட்டத்தை நிர்வகிக்கிறது. காப்பீட்டுத் தொகை ரூ.20 லட்சம். அதற்கான மொத்த பிரீமியம் ரூ. 9,393 (ரூ. 7,960 + GST ரூ. 1,433). பிரீமியத்தில் 90 சதவீதப் பங்கை பரோடா வங்கி செலுத்தும். பணியாளர்கள் 10% மட்டும் செலுத்தினால் போதும்.  அதாவது, ரூ 8,454/- (ரூ. 7,164 + GST ரூ. 1,290)  வங்கியின் பங்கு.  ரூ. 939 (ரூ 796/- + ஜிஎஸ்டி ரூ 143) ஊழியரின் பங்கு.  இதற்கான பிரீமியம் பணியாளர்களின் அக்டோபர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்யப்படும். இத்திட்டத்தில் சேர விருப்பமில்லை என்று தெரிவிக்கும் பணியாளர்கள் தவிர மற்ற அனைவருக்கும் இத்திட்டத்தின் பலன் கிடைக்கும். விருப்பம் இல்லாதவர்களுக்கு ஊழியர் பங்கு  பிரீமியம் பிடித்தம் செய்யப்படாது.

புதிதாக வங்கியில் சேரும் ஊழியர்களுக்கு பணியில் சேர்ந்த நாளில் இருந்தே இத்திட்டம் பொருந்தும். இடைக்காலத்தில் பணி ஓய்வு பெறுபவர்களுக்கு, பணி ஓய்வுக்கு பின்னரும் அந்த வருட காப்பீடு காலமான அக்டோபர் 31 வரை இத்திட்டம் பொருந்தும்.

இயற்கை மரணம், நோயினால் ஏற்படும் மரணம், விபத்து மரணம், தற்கொலை ஆகிய எல்லா மரணங்களுக்கும் இத்திட்டம் பொருந்தும். மரணம் ஏற்பட்டு ஒரு மாதத்திற்குள் மரணமடைந்தவரின் குடும்பத்தினருக்கு காப்பீட்டுத் தொகையான ரூ.20 லட்சம் ஒப்படைக்கப்படும். மணமான ஊழியர்களின் மனைவிக்கோ/கணவனுக்கோ, மற்றவர்களுக்கு கிராஜிவிடி பெற யாரை அந்த ஊழியர் நியமித்திருக்கிறாரோ அவருக்கு இந்த பணம் கிடைக்கும்.

கொரானா மரணத்திற்கு கூடுதலாக ரூ.30 லட்சம்

கொரோனா பெருந்தொற்றின் காரணமாக பணியில் இருக்கும் ஊழியர் இறக்க நேரிட்டால், “கருணை அடிப்படை திட்டத்தின்” (ex-gratia scheme) மூலம்  கூடுதலாக ரூ. 30 லட்சம் இறந்தவரின் குடும்பத்திற்கு வழங்கப்படும்.  அதாவது கொரானாவினால் இறக்கும் ஊழியர்களின் குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் வழங்கப்படும்.

இதே போல வங்கி முகவர்கள் (Business Correspondent) கொரோனா பெருந்தொற்றால் இறக்க நேரிட்டால், அவர் குடும்பத்திற்கு வங்கியின் கருணை அடிப்படை (ex-gratia scheme) திட்டத்தின் கீழ் ரூ 10 லட்சம் வழங்கப்படும்.  இத்திட்டம் 2022 மார்ச் 31 வரை அமுலில் இருக்கும்.

இத்திட்டங்கள் பணியிலிருக்கும் ஊழியர்களை இழந்து வாடும் பல குடும்பங்களுக்கு பேருதவியாக இருக்கும்.

One comment

  1. மிக அருமை. BOB வங்கியில் மட்டுமே 50 லட்சம் உண்டு. மற்ற வங்கிகளில் இழப்பீட்டு தொகை குறைவு என நினைக்கிறேன்.

Comment here...