பிஎம்சி வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பதா?

ஜி.ஆர்.ரவி

1984ஆம் வருடம் துவங்கப்பட்ட பஞ்சாப் & மஹாராஷ்ட்ரா கூட்டுறவு வங்கிக்கு மஹாராஷ்ட்ரா மாநிலத்தில் 103 கிளைகள் உட்பட மொத்தம் ஆறு மாநிலங்களில் 137 கிளைகள் உள்ளன. இது 10 பெரிய பல-மாநில கூட்டுறவு வங்கிகளில் ஒன்று. இதன் வாடிக்கையாளர்கள் பெரும்பாலும் சாமான்ய மக்கள், சிறு வியாபாரிகள் மற்றும் சிறு நிறுவனங்கள் தான்.

வர்த்தகத் தடை

2019 செப்டம்பர் 24 அன்று ரிசர்வ் வங்கி இந்த வங்கியின் மீது வர்த்தகத் தடையை 6 மாத காலத்திற்கு விதித்த பின் தான் இந்த வங்கியின் நெருக்கடி வெளிச்சத்திற்கு வந்தது. இதன்படி வாடிக்கையாளர்கள் தங்களுடைய வங்கிக் கணக்கிலிருந்து அதிக பட்சம் ரூ.1,00,000/- வரைதான் எடுக்க அனுமதிக்கப்பட்டனர். வங்கியின் மொத்த வைப்புத் தொகை சுமார் ரூ.12,000 கோடி. இந்த வர்த்தகத் தடையால், பல்வேறு முக்கிய காரணங்களுக்காக சேமித்த பணத்தை எடுக்க முடியாமல் 10க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் இறந்து விட்டனர்.

முதலில் 6 மாத முடக்கம், பின்னர் எந்த தீர்வும் எட்டப்படாத நிலையில் பல முறை 3 மாதங்களாக நீட்டித்து மார்ச் மாதம் 2022 வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. மேல் தட்டு வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்யும் யெஸ் வங்கியில் ஏற்பட்ட நெருக்கடிக்கு 15 நாட்களில் தீர்வுக்கு வழிகோலிய ஆட்சியாளர்கள் சாமான்ய மக்களுக்கான கூட்டுறவு வங்கியின் நெருக்கடியை பல மாதங்களாக தீர்வு காணாமல் இழுத்தடிப்பது அவர்களின் வர்க்க சார்பை வெளிப்படுத்துகிறது.

உயர்மட்ட முறைகேடு

இந்த வங்கியின் நெருக்கடிக்கு காரணம் கடன் வழங்குவதில் வங்கியின் உயர் மட்டத்தில் நடந்த முறைகேடு தான். அதிலும் குறிப்பாக Housing Development & Infrastructure Ltd (HDIL) என்ற ஒரு நிறுவனத்திற்கு கொடுக்கப்பட்ட கடனே ரூ.6,500 கோடி. இந்த தொகை வங்கியின் மொத்த கடனில் சுமார் 73 சதவீதத்திற்கு மேல் ஆகும். இந்த கடனுக்கு அசலும், வட்டியும் செலுத்தப்படாத நிலையில் கூட, இவ்வங்கி நிர்வாகம் இதை செயல்படாத சொத்தாக வரையறை செய்யவில்லை.

வங்கியின் உயர்மட்ட அதிகாரிகளும் இந்த HDIL நிறுவனமும் கூட்டு களவாணிகளாக செயல்பட்டுள்ளனர். 2018-2019 நிதி நிலை அறிக்கையில் பிஎம்சி வங்கி ரூ.99.69 கோடி நிகர லாபம் ஈட்டியதாக காட்டப்பட்டுள்ளது. மொத்த கடன் தொகையான சுமார் ரூ.8900 கோடியில் ரூ.315 கோடி மட்டுமே செயல்படா சொத்தாக காட்டப்பட்டுள்ளது. மற்ற பொதுத்துறை வங்கிகளை ஒப்பு நோக்கும் பொழுது சிறப்பான செயல்பாடாகவே கருதப்பட்டது ஆனால் வங்கி நிர்வாகம் 21000 போலி கணக்குகளை துவக்கி HDIL நிறுவனக் கடனான ரூ.6500 கோடியை 21000 பேருக்கு கொடுத்ததாக தயாரித்த அறிக்கையின் மூலம் தாங்கள் செய்த குளறுபடிகளை மறைத்தது. ஆனால் இந்த உயர் மட்ட ஊழலை ரிசர்வ் வங்கியின் தணிக்கைக் குழுவும், ஒன்றிய அரசின் கூட்டுறவு அதிகாரிகளும் ஏன் உரிய நேரத்தில் கண்டு பிடிக்கவில்லை என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

தனியார் வங்கியுடன் இணைப்பதா?

பிஎம்சி வங்கியை Unity Small Finance Bank என்ற சிறு தனியார் வங்கியுடன் இணைக்கும் முன் மொழிவு ரிசர்வ் வங்கி மற்றும் ஒன்றிய அரசாங்கத்தின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டுள்ளது. இந்த  Unity Small Finance Bank 2021 நவம்பர் 1 அன்றுதான் ரூ.1100/- கோடி முதலீட்டுடன் துவங்கப்பட்டது. கூட்டுறவு வங்கி என்றாலே லாப நோக்கம் இல்லாமல் ஜனநாயகத் தன்மையுடன் சாமான்ய மக்களுக்கு சேவை புரியும் வங்கி என்பது தான்.  அப்படிப்பட்ட வங்கி 21000 போலி கணக்குகள் திறந்து பல ஆண்டுகளாக ரிசர்வ் வங்கி மற்றும் மத்திய கூட்டுறவு அதிகாரிகளை ஏமாற்ற முடிகிறதென்றால் இந்த அமைப்புகளும் ஊழலுக்கு துணை போகின்றனவா அல்லது கண்டு பிடிக்க முடியாத அளவிற்கு பலவீனமாக உள்ளனவா என்ற கேள்வி இயற்கையாகவே எழுகிறது. ஒரு கூட்டுறவு வங்கியை தனியார் வங்கியுடன் இணைப்பது என்பது ஏற்றுக் கொள்ள முடியாத முன் மொழிவாகும். இது சேவை நோக்கிலிருந்து இந்த வங்கியை லாப நோக்கிற்கு இட்டுச் செல்லும். ஒன்றிய அரசு இந்த முன் மொழிவை அனுமதிக்கக் கூடாது.

வைப்புதாரர்கள் தங்கள் பணம் பெற 10 வருடமாகும்

இந்த இணைப்பு திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ளதன் அடிப்படையில் பிஎம்சி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முழு வைப்பு தொகை கிடைக்க 10 ஆண்டுகள் ஆகும். அதுவும் முதல் 5 வருடங்களுக்கு வட்டி இல்லாமலும், அதன் பிறகு 2.75 சதவிகிதம் வருட வட்டியாக கொடுக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதனுடைய முதல் படியாக வைப்புதாரர்களுக்கு ரூ.5 லட்சம் வரை வழங்கப்படும். கடந்த 10 வருட பணவீக்க விகிதம் அரசு புள்ளி விவரப்படியே சராசரியாக 6.26 சதவிகிதம். இதை அடிப்படையாக கொண்டு கணக்கிட்டால் 10 வருட முடிவில் வைப்புதார்களின் வைப்பு மதிப்பே இல்லாமல் போகும் அபாயம் உள்ளது.

பிஎம்சி வங்கி வாடிக்கையாளர்களுக்கு அவர்களின் முழு வைப்புத் தொகையையும் 10 வருடங்கள் கழித்து தருகிறோம் என்பதெல்லாம் அநியாயமான முன் மொழிவு. அவர்களின் வைப்புத் தொகை வட்டியுடன் முழுமையாக உடனே வழங்கப்பட வேண்டும். அதுதான் தற்போதாவது அவர்களுக்கு நியாயம் செய்வதாக அமையும்.

3 comments

  1. PMC வங்கியை துயரத்தில் தள்ளி தவறிழைத்தவர்கள்/அமைப்புக்கள் மேல் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

  2. Unity SFB is a joint venture between Centrum Financial Services and Resilient Innovations Private Limited (BharatPe). Centrum holds 51 per cent stake and BharatPe has 49 per cent stake.
    BharatPe’s foundation is built on risk. Its co-founder and MD Ashneer Grover has played fast and loose not just with the company’s governance but also its business model
    Trust RBI this Unity SFB will pay PMC Depositors

  3. Unity SFB is a joint venture between Centrum Financial Services and Resilient Innovations Private Limited (BharatPe). Centrum holds 51 per cent stake and BharatPe has 49 per cent stake.
    BharatPe’s foundation is built on risk. Its co-founder and MD Ashneer Grover has played fast and loose not just with the company’s governance but also its business model
    Trust RBI this Unity SFB will pay PMC Depositors

Comment here...