மக்களைக் காப்போம், தேசத்தைக் காப்போம்

23-24 பிப்ரவரி 2022 வேலை நிறுத்தம் வெல்லட்டும்!

ஜேப்பி

2022 ஜனவரி 16 அன்று, 71 அகில இந்திய தொழிற் சங்கங்களின் கூட்டமைப்பான தனியார் மயமாக்கலுக்கு எதிரான அகில இந்திய மன்றத்தின் (All India Forum Against Privatisation – AIFAP) இணைய வழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. கூட்டத்தின் தலைப்பு “அரசின் மக்கள் விரோத, தொழிலாளர் விரோத கொள்கைகளுக்கு எதிரான 2022 பிப்ரவரி 23-24 அகில இந்திய பொது வேலை நிறுத்தம் – முன்னோக்கிய பாதை.” 

கூட்டத்தில் ஏஐடியுசி, சிஐடியு, ஐஎன்டியுசி, டியுசிசி, எம்இசி மற்றும் பல அகில இந்திய, மாநில தொழிற்சங்கங்களின் தலைவர்கள் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினர். மாலை 6 மணிக்கு தொடங்கிய கூட்டம் கிட்டத்தட்ட 3 ½ மணி நேரம் நடைபெற்றது.

வலுத்து வரும் போராட்டங்கள்

ஒன்றிய பாஜக அரசின் மக்கள் விரோத தனியார் மயக் கொள்கைகளை எதிர்த்து பல மாநிலங்களிலும், பல தொழில் நிறுவனங்களிலும் ஊழியர்கள் தொடர்ந்து வேலை நிறுத்தம் உட்பட, பல கட்டப் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். ஜம்மு காஷ்மீர், சண்டிகார், உத்தரப் பிரதேசம், உத்தரக் கண்ட், விசாகப்பட்டினம், சேலம், எஃகு தொழிற்சாலைகள், BEML, இன்சூரன்ஸ், வங்கி என பல மாநிலங்கள், சகல வித தொழில்களிலும் வீரஞ்செறிந்த போராட்டங்கள் நடந்து வருகின்றன.  இப்போராட்டங்களின் விளைவால் மக்கள் விரோதக் கொள்கைகள் அமல்படுத்துவதை சற்று தள்ளிப் போட முடிந்துள்ளது. ஆனால், தனித் தனியே நடத்தப்படும் இந்தப் போராட்டங்கள் ஒன்றுபட்ட அகில இந்திய போராட்டமாக மாறியதன் விளைவு தான் வருகிற பிப்ரவரி 23-24 இரண்டு நாள் அகில இந்திய வேலை நிறுத்தம்.

மிஷன் இந்தியா (Mission India)

இந்த வேலை நிறுத்தத்தில் வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகளை தொழிலாளர் உரிமை மற்றும் நலன் சம்பந்தப்பட்டது என்று மட்டுமே சுருக்க முடியாது.  மக்கள் விரோத, கார்ப்பரேட் ஆதரவு கொள்கைகளுக்கு எதிராக, தேசத்தை பேரழிவிலிருந்து காப்பாற்றுவதற்காக வைக்கப்பட்டுள்ள கோரிக்கைகள் இவை.  சுதந்திரப் போராட்டத்தில் பிரிட்டிஷாரிடம் இருந்து 150 வருடங்கள் போராடிப் பெற்ற ஜனநாயக உரிமைகள் முற்றிலும் பறிக்கப் படுகின்றன. தேசத் துரோக வழக்குகளில் பொய்க் குற்றம் சாட்டப்பட்டு பலர் சிறையில் அடைக்கப்படுகின்றனர். ஆளும் பாஜக அரசு நாடாளுமன்றத்தை மதிப்பதில்லை.  ILC (Indian Labour Conference) கூட்டங்கள் கூட்டப்படுவதில்லை.  முத்தரப்பு பேச்சு வார்த்தைகள் நடப்பதே இல்லை. லேபர் கோடுகள் மூலமாக தொழிலாளர்களை முற்றிலும் அடிமைகளாக மாற்றவும், தொழிற்சங்கம் தொடங்கும் உரிமையைப் பறிக்கவும், கூட்டு பேரங்களைக் குழி தோண்டிப் புதைக்கவும் முயற்சி நடக்கிறது. ஊதியம் என்பதன் வரையறையே மாற்றப்படுகிறது. வாரத்திற்கு நான்கு நாள் என்று சொல்லிக் கொண்டு அதே வேளையில், மொத்தம் 48 மணி நேர வாராந்திர வேலை என்பதை மாற்றவில்லை. அதாவது தினம் 12 மணி நேர வேலை என்பது திணிக்கப் படுகிறது.

NMP (National Monetisation Pipeline) தேசிய பணமாக்கல் திட்டம் என்கிற “கொடிய குற்றச் செயல்” மூலமாக ஒரு துறை விடாது – மைதானங்கள், அரங்கங்கள், சுற்றுலா-விருந்தோம்பல், வீட்டு வசதி, சாலைப் போக்குவரத்து, ரயில்வே, மின்சாரம் உற்பத்தி & வினியோகம், தொலைத் தொடர்பு, வங்கி, இன்சூரன்ஸ், விமானம் & விமான நிலையங்கள், துறைமுகங்கள், எண்ணெய்  எரிவாயு உற்பத்தி வினியோகம், கனிம வளச் சுரங்கங்கள், பண்டகசாலை கிடங்குகள், பாதுகாப்பு தளவாடங்கள் – என 70 ஆண்டு சுதந்திர இந்திய வரலாற்றில் மக்கள் உழைப்பில், மக்கள் வரிப்பணத்தில் உருவான தேசத்தின் அனைத்து தொழில் நிறுவனங்களையும் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு மூலதனத்திற்கு தானம் கொடுக்க முடிவு செய்து பாஜக அரசு செயாலாற்றி வருகிறது. நிலச் சொத்து மட்டுமே ரூ 440 கோடி கொண்ட, லாபத்தில் இயங்கும் சிஈஎல் நிறுவனத்தை ரூ 210 கோடிக்கு விற்க முடிவு எடுத்துள்ளது. ஏர் இந்தியா நிறுவனத்தை டாடாவிற்கு தானமாக அளித்தது.  ஒரு பக்கம் லாபத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவனங்களை விற்றுக் கொண்டு, மறு பக்கம் நட்டத்தில் இயங்கும் வோடஃபோன் நிறுவன பங்குகளை வாங்குகிறது.  இப்படி, கொழுத்த கார்ப்பரேட் நிறுவனங்கள் மேலும் கொழுக்க கங்கணம் கட்டிக் கொண்டு செயல்படுகிறது ஓன்றிய அரசு.

வளரும் ஏற்றத்தாழ்வு

இந்தியாவில் பெரும் பணக்காரர்களுக்கும், சாதாரண பொது மக்களுக்கும் இடையே உள்ள வருமான ஏற்றத்தாழ்வும், சொத்து ஏற்றத்தாழ்வும் நாள்தோறும் அதிகரித்துக் கொண்டே வருகின்றன. கொரோனா காலத்தில் உண்ண உணவின்றி, இருக்க இடமின்றி லட்சக் கணக்கான தொழிலாளர்கள் கால் நடைப் பயணமாக மாநிலம் விட்டு மாநிலம் இடம் பெயர்ந்தனர். ஆனால், இதே காலத்தில் இந்திய கோடீஸ்வரர்களின் (Billionnaires) எண்ணிக்கை 100ல் இருந்து 140 ஆக உயர்ந்தது. 10 கார்ப்பரேட் மருத்துவ நிறுவனங்கள் மட்டும் கொரோனா காலத்தில் ரூ 500 கோடிக்கும் மேல் தினந்தோறும் வணிகம் செய்தன. சிறு, குறு நிறுவனங்கள், பொது மக்கள் வாங்கிய கடனுக்கு கூட்டு வட்டி வசூலித்து, கார்ப்போரேட் நிறுவனங்களுக்கு வரித் தள்ளுபடி, கடன் தள்ளுபடி என்று கோடிக் கணக்கில் சலுகை அளிக்கப்பட்டது. ஆஷா ஊழியர்களுக்கு 6 மாத சம்பள பாக்கி வைக்கப்பட்டுள்ளது. கான்டிராக்ட் ஊழியர்கள் 25% சம்பளம் மட்டுமே கொடுக்கப்பட்டு சுரண்டப்படுகின்றனர்.

வேலை இல்லாத் திண்டாட்டம் கடந்த 50 ஆண்டுகள் இல்லாத அளவிற்கு அதிகரித்து உள்ளது. கொரோனா காலத்தில் வேலை இழந்த பலருக்கு இன்னும் வேலை கிடைக்கவில்லை. வரி வரம்பிற்கு கீழே உள்ள மக்களுக்கு மாதம் ரூ 7500 கொடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற அரசு தயாராய் இல்லை.  இவ்வாறு கொடுப்பதால் பொருளாதாரத்தில் நல்ல விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை அரசு உணரவில்லை. ஆனால், ஏழைகளை ஏழைகளாகவே வைத்திருந்து 5 ட்ரில்லியன் டாலர் பொருளாதாரத்தைப் பற்றி வெற்றுக் கனவு காண்கிறது மோடி அரசு.

விவசாயிகள் போராட்டம் – ஒரு கலங்கரை விளக்கம்

மனுக்கள் கொடுத்து மசியாத அரசை தங்கள் விடா முயற்சியால், ஒன்றுபட்ட ஓராண்டு தொடர் போராட்டத்தால் பணிய வைத்தனர் நம் நாட்டு விவசாயிகள். மூன்று சட்டங்களை வாபஸ் பெற்ற அரசு, விவசாயிகளின் மற்ற கோரிக்கைகளை இது வரை நிறைவேற்றவில்லை.  எனவே அவர்கள் ஜனவரி 31ம் தேதியை “துரோக தினம்” என்று அனுஷ்டிக்கப் போகிறார்கள். 2022  பிப்ரவரி 23-24 தேதிகளில் “கிராமப்புற கதவடைப்பு” நடக்கும் என்று அறிவித்து இருக்கிறார்கள்.

இந்த வீர பாரம்பரியத்தைத் தொடருவோம்.

2 comments

  1. அனைத்துதரப்பு கோரிக்கைகளையும் உள்ளக்கிய வேலைநிறுத்தம்.👍

Comment here...