எல்ஐசி தேசம் உலகின் மூன்றாவது பெரிய நாடு

த.செந்தில்குமார்

எல்.ஐ.சி தனது 65 ஆண்டு பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. 1956 ஆம் ஆண்டு எல்ஐசி என்கிற இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகம் உருவாக்கப்பட்டதன் நோக்கங்களில் மிகவும் முக்கியமானதாக கீழ்கண்ட இலக்குகள் கூறப்பட்டன.

  • ஆயுள் காப்பீட்டை இத்தேசத்தின் மூலைமுடுக்கெல்லாம் பரவலாக கொண்டு செல்லவேண்டும்.
  • காப்பீடு என்பது சாமானிய மக்களுக்கு எளிதாக கிடைக்கச் செய்ய வேண்டும். மக்களின் சேமிப்புகள் பத்திரமாக பாதுகாக்கப்பட வேண்டும்.
  • இந்நிறுவனத்தின் மூலம் திரட்டப்படும் பெருந்தொகை அரசின் கட்டமைப்பை உருவாக்கவும், மக்கள் நலத் திட்டங்களுக்கும் பயன்படும் வகையில் செலவிடப்பட வேண்டும். 

இன்றளவில் அந்த நோக்கங்கள் நிறைவேறியிருக்கின்றனவா? இலக்குகள் அடையப்பட்டிருக்கின்றனவா?” என்று பார்த்தால் அவை பெருமளவில் நிறைவேறியிருக்கின்றன என பெருமையோடு சொல்லத் தக்க வகையில் எல்ஐசியின் செயல்பாடுகள் இருந்துள்ளதை கண்கூடாக பார்க்க முடிகிறது.

எல்ஐசி தேசம் உலகின் மூன்றாவது பெரிய நாடு

இன்று எல்ஐசி நிறுவனம் 40 கோடி பாலிசிதாரர்களோடு உலகின் முதல் பெரும் காப்பீட்டு நிறுவனமாக திகழ்கிறது. எல்ஐசி பாலிசிதாரர்களை கொண்டு எல்ஐசி தேசம் என்று ஒரு நாட்டை கற்பனையாக உருவகம் செய்தால் சீனா, இந்தியா ஆகிய நாடுகளுக்கு அடுத்து மூன்றாம் இடத்தில் அதிக மக்கள் தொகை கொண்ட தேசமாக எல்ஐசி தேசம் திகழும் என்றால் அதன் பிரம்மாண்டத்தை நம்மால் உணர முடியும். இந்திய மக்கள் தொகை 133 கோடிக்கும் அதிகம் என்றாலும், ஆயுள் காப்பீடு எடுக்க முடிந்தவர்கள், அதாவது தங்களுடைய அவசியத் தேவைகளுக்கான செலவினங்களுக்குப் பிறகு பாலிசி எடுக்க, சேமிக்க பணம் இருப்பவர்கள் (Insurable Population) என்று பார்த்தால் ஏறக்குறைய 65 கோடி பேர் தான் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெனில் 60 சதத்திற்கும் மேலான மக்களுக்கு எல்ஐசி பாலிசி வழங்கியுள்ளது. அது மட்டுமல்ல இன்று நமது நாட்டில் இன்சூரன்ஸ் பரவலாக்கம் (Insurance Penetration – அதவாது ஒரு நாட்டின் GDP யில் இன்சூரன்ஸ் பிரீமிய சதவீதம்) என்பது உலக சராசரியான 3.35 சதவீதத்தை நோக்கி முன்னேறிக் கொண்டிருக்கிறது. 2021 ஆம் ஆண்டில் இந்திய இன்சூரன்ஸ் பரவலாக்கம் 3.2% ஆக உள்ளது.

சாமானிய மக்களுக்கான காப்பீட்டு நிறுவனம்

இன்று இன்சூரன்ஸ் என்பதன் நோக்கமே சிதறடிக்கப்பட்டு வருவதை காண்கிறோம். தனியார் நிறுவனங்கள் அனுமதிக்கப்பட்ட பிறகு, காப்பீடு என்பது ஒரு சமூக நலத்திட்டம் என்கிற நோக்கத்திலிருந்து அதிக இலாபம் தரக்கூடிய ஒரு துறையாக மாற்றப்பட்டு வருகிறது. ஒரு பாலிசியின் சராசரி பிரீமிய வருவாய் என்பது எல்ஐசியில் 25,000 ரூபயாக இருக்கும் போது தனியார் காப்பீட்டு நிறுவனங்களில் அது 80,000 ரூபாய்க்கும் கூடுலாக உள்ளது. ஒரு புறம் தனியார் நிறுவனங்கள் High Networth Individuals (HNI)  என்கிற பணக்காரர்களை நோக்கியே வணிகம் செய்கிறது. மறு புறம் இன்றும் சாமானிய மக்களுக்கான காப்பீட்டு நிறுவனமாக எல்ஐசியே திகழ்வதை இதன் மூலம் அறிய முடியும். தற்போது எல்ஐசி இலாபத்தை  நோக்கி நகர வேண்டும் என அழுத்தம் தரப்படுகிறது.

இந்தியாவில் அதிக அளவிலான சொத்துக்களை பராமரிக்கக் கூடிய நிறுவனங்களில் எல்ஐசி முதலிடத்தில் உள்ளது. எல்ஐசியின் Assets Under Management (AUM) ரூ.36,70,000 கோடிகளாக உள்ளது. அதே வேளையில் 44 பரஸ்பர நிதி நிறுவங்களின் ஒட்டு மொத்த Assets Under Management ரூ.31,40,000 கோடிகளாக உள்ளது. எல்ஐசியின் AUM இந்திய GDP மதிப்பில் 18 சதமாகும். எல்ஐசியின் சொத்து மதிப்பு பல நாடுகளின் GDP யை விட அதிகமாகும். இது எல்ஐசியின் பிராம்மாண்ட வளர்ச்சியை பறைசாற்றுகிறது. இவ்வளவு தொகையும் நாட்டின் வளர்ச்சிக்கும், மக்கள் நலத்திட்டங்களுக்குமே முதலீடு செய்யப்படுகிறது என்பதே இதன் சிறப்பம்சமாகும். எல்ஐசியின் தாரக மந்திரமே People’s Money for People’s Welfare.

மக்களுக்கே உயிர் நதியாய்

1956-61 இரண்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து 2012-17 பன்னிரண்டாவது ஐந்தாண்டு திட்டம் வரை மொத்தமாக ரூ.27,74,630 கோடிகளும், ஒவ்வொரு ஐந்தாண்டு திட்டத்திற்கும் சராசரியாக ரூ.2,52,239 கோடிகளும் இந்நிறுவனம் அரசுக்கு வழங்கி உள்ளது. அரசின் 5 கோடி ரூபாய் முதலீட்டிற்கு இதுவரை ரூ.28,239 கோடிகள் டிவிடெண்ட் ஆக வழங்கியுள்ளது. இது தவிர நிறுவன வரி, ஜிஎஸ்டி வரி என பல்லாயிரம், கோடிகளை வழங்கி வருகிறது. 

அரசின் திட்டங்களுக்கு எல்.ஐ.சி தருகிற நிதியாதாரங்கள் தேசத்தின் நிர்மாணத்தில் பெரும் பங்காற்றுகின்றன.  ஒன்றிய அரசின் பத்திரங்களுக்கு ரூ.13,87,821 கோடிகள், மாநில அரசின் பத்திரங்களில் ரூ.9,87,544 கோடிகள், மின்சார திட்டங்களில் ரூ.1,23,532 கோடிகள், சாலை, பாலம், ரயில்வே வசதிகளுக்கு வசதிகளுக்கு ரூ.90,948 கோடிகள், வீட்டு வசதிக்கு ரூ.54,406 கோடிகள், குடிநீருக்கு ரூ.1,163 கோடிகள் என இப்படி மக்களின் சேமிப்புகள் மக்களுக்கே உயிர் நதியாய் பாய்கின்றன.

பங்கு விற்பனை தேச விரோதம்

இந்தியாவின் திறமையான நிறுவனம் என எல்லோரும் வியந்து பாராட்டுகிறார்கள். லண்டன் “பிராண்ட் பைனான்ஸ்” சர்வேயில் உலகின் மூன்றாவது வலிமையான இன்சூரன்ஸ் நிறுவனம், பத்தாவது “பிராண்ட் இமேஜ்” நிறுவனம் என எல்.ஐ.சி உயர்ந்த இடங்களைப் பிடித்துள்ளது.

எல்ஐசியின் ஒரு பகுதி பங்குகளை விற்க ஒன்றிய அரசு தீவிர முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அவ்வாறு நடைபெற்றால் அது எல்ஐசி உருவாக்கப்பட்டதன் நோக்கங்களை நிறைவேற்றும் பாதையிலிருந்து விலகிச் செல்வதாக அமையும். அது மக்கள் விரோதமான முடிவு. தேச விரோதமான முடிவு. அதனை ஒன்றிய அரசு உடனடியாக கைவிட வேண்டும். எனவே என்றும் தேச வளர்ச்சிக்காக, மக்களின் நம்பிக்கை தகராமல் இயங்கிக் கொண்டிருக்கும் எல்ஐசி யை முழு அரசு நிறுவனமாக பாதுகாப்போம்.

4 comments

  1. While the Government is going all out to sell a small part of LIC we should take this news to the people and BWU is doing its part.

  2. காப்பீட்டு துறையை பற்றிய பல புதிய தகவல்களும், மக்களுக்கான சேவைகள் பற்றியும், நாட்டின் முன்னேற்றத்திற்கும், அடித்தள கட்டுமானத்திற்கு அவர்களது பங்களிப்பையும் படிக்கும்பொழுது இத்துறை இந்திய அரசின் முழு கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்பதற்கான அனைத்து போராட்டங்களிலும் நம்மை இணைத்துக் கொள்ள வேண்டும் என்று உறுதி ஏற்போம்.

  3. வாழும் போதும் வாழ்க்கைக்கு பிறகும் என்ற தாரக மந்திரத்தை இன்றுவரை மட்டும் அல்ல எப்போதும் கடைபிடிக்கும்LICயை பாது காப்போம்.தனியார் மயத்தை எதிர்ப்போம்.

Comment here...