தடையாய் நிற்காதீர்கள்

இலக்சயா மன்னார் (திரு நங்கை)

“அம்மா என்றழைக்காத உயிரில்லையே” 

என உங்கள் தாயை  நீங்கள் உச்சு முகர்ந்துக் கொள்ளுங்கள். எங்களுக்கோ, அவள் ஆள் வைத்து அடிக்கவும் செய்வாள், 

பைத்தியம் என்று மருத்துவரிடம் சான்றும் பெறுவாள்.

உங்களுடைய  தந்தையின் அன்பிற்கு முன் 

“தெய்வங்கள் எல்லாம் தோற்றே போகும்”

எங்களுக்கு தாயே அவ்வாறென்றால் தந்தையைப் பற்றி சொல்லவும் வேண்டுமா…?

கூடப்பொறந்தது பொட்டையா இருக்கறதால எங்க வாழ்க்கைதான் வீணாப்போகுதுன்னு” விரட்டியடித்த அண்ணன் தம்பி, அக்கா தங்கைகளைப் பார்த்து 

“உன்கூடவே பொறக்கனும் உன்கூடவே இருக்கனும்” னு பாட தோணுமா என்ன…?

அக்கம் பக்கம்,சொந்த பந்தத்தோட கேலிக்கு  பயந்துகிட்டுதான் இதையெல்லாம் பன்னுறாங்கன்னு தெரியுறப்போ

“யாரென்ன சொன்னாலும் யாரென்ன செஞ்சாலும் சொந்தமும் பந்தமும் கூட வரும்” ன்னு எப்படி சொல்றது…?

பால்ய கால தோழமைகளின் கிண்டலும் ஒரு சில ஆசிரியர்களின் அநாகரிக சீண்டலையும் எண்ணுகையில்.., மீண்டும் பள்ளிக்கு போகலாம் என்று மறந்தும் கூட தோன்றுவதில்லை.

இப்படி உங்களுக்கு சாதாரணமாக கிடைக்கப்பெற்ற உறவுகள் மற்றும் வெளியுலக பந்தங்கள் யாவும்

எங்களுக்கு அளித்ததென்னவோ  சதா ரணங்கள்.

எது எவ்வாறாயினும் நாங்கள் அழுது புலம்பாமல் 

“மனதில் உறுதி வேண்டும் வாக்கினிலே தெளிவும் வேண்டும்” என முன்னேறிச் செல்ல முயல்கிறோம்.

தட்டிக்கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை  தவறான புரிதல்கொண்டு எம்மவர்கள் வாழ்வதற்கு தடையாய் நிற்காதீர்கள்!

5 comments

  1. சமூகத்தில் நிலவும் அவலங்களை எடுத்துரைக்கிறது. நம் மனங்களில் மாற்றம் வேண்டும்.

  2. The pain of the transgender society is so tangible in today’s world. Last week’s movie review and this poem definitely contribute in mitigating their plight

  3. வலிகளை வார்த்தைகளாக வடித்துள்ளீர்கள்! தொடருங்கள்… வாழ்த்துகள்.

  4. எல்லோரும் உருகி கொண்டாடற பாட்டுகளுக்கு பின்னாடியும் இவ்ளோ நெருடல்களும், வலிகளும் இருக்கும்னு சொன்ன பதிவு

  5. சமத்துவத்திற்கான‌ வலி மிகுந்த வேண்டுகோள் !

Comment here...